கார்கிவ் ரயில் நிலையத்தில் பணயக் கைதிகளாக இந்திய மாணவர்கள் உட்பட வெளிநாட்டவர் சிறைபிடிப்பு: புதின்

மாஸ்கோ: கார்கிவ் ரயில் நிலையத்தில் இந்திய மாணவர்களை பணயக் கைதிகளாக உக்ரைன் அரசு பிடித்து வைத்திருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே ரஷ்ய ஊடகங்கள் இதுபோன்ற செய்தியை வெளியிட்ட போது இந்திய வெளியுறவு அமைச்சகம் அதனை மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது ரஷ்ய அதிபரே தொலைக்காட்சியில் உரையாற்றியபோது, இந்திய மாணவர்கள் உட்பட வெளிநாட்டவரை உக்ரைன் பணயக் கைதிகளாக பிடித்துவைத்துள்ளது எனக் கூறியுள்ளார்.

ரஷ்ய பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் நேற்று மாலை பேசிய அதிபர் புதின், “உக்ரைனில் கல்வி கற்கச் சென்ற வெளிநாட்டு மாணவர்களை அந்நாடு பணயக் கைதிகளாக சிறைப்பிடித்து வைத்துள்ளது. கார்கிவ் ரயில் நிலையத்தில் 3,179 இந்திய மாணவர்கள் உட்பட பல வெளிநாட்டவரும் ஒரு நாளுக்கும் மேலாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்னமும் அங்கு தான் இருக்கின்றனர். உக்ரைனின் சுமி நகரில் 576 பேர் சிக்கியுள்ளனர். கார்கிவிலிருந்து வெளியேற விரும்பிய சீன நாட்டவர் மீது உக்ரைன் படைகள் சுட்டுக் காயப்படுத்தியுள்ளன. இருவர் காயமடைந்துள்ளனர். வெளிநாட்டவரை பணயக் கைதிகளாகப் பிடித்துவைப்பதைத் தொடங்கியுள்ளனர்” என்று கூறியுள்ளார்.

இந்திய மாணவர் மீது துப்பாக்கிச் சூடு: முன்னதாக, நேற்று கீவ் நகரிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்த இந்திய மாணவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார். அந்த மாணவர் இந்தியாவின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர், இப்போது அவர் உடல்நிலை எப்படியுள்ளது என்ற நிலவரம் தெரியவில்லை. ஆனால், அந்த மாணவர் கீவ் நகரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுவிட்டார் எனத் தெரிகிறது.

இது தொடர்பாக போலந்தின் ரிஸோ விமான நிலையத்திலிருந்து பேட்டியளித்த அமைச்சர் வி.கே.சிங், ”கீவ் நகரில் இந்திய மாணவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார். அவர் இப்போது சிகிச்சையில் இருக்கிறார். போரின்போது இதுமாதிரியான சம்பவங்களை தவிர்க்க முடியாது. துப்பாக்கி குண்டுக்கு மதமோ, தேசியமோ தெரியாது. கீவ் நகரிலிருந்து இந்தியர்கள் வெளியேறுமாறு தொடர்ந்து தூதரகம் அறிவுறுத்தி வருகிறது. உக்ரைனில் இன்னும்1700 மாணவர்கள் சிக்கியுள்ளனர். அவர்கள் அனைவரையும் மீட்பதே இலக்கு” என்று கூறியிருக்கிறார்.

மனிதாபிமான வழித்தடம்: இந்நிலையில் உக்ரைனும், ரஷ்யாவும் இணைந்து அங்குள்ள வெளிநாட்டவர் வெளியேற ஏதுவாக மனிதாபிமான வழித்தடம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளதாக கீவிலிருந்து அதிகாரி ஒருவர் கூறினார். இந்திய, சீன, ஆப்பிரிக்க மாணவர்கள் தான் இப்போதைக்கு அதிகளவில் உக்ரைனில் சிக்கியுள்ளதால் அவர்கள் பாதுகாப்பு போர்ப்பகுதியில் இருந்து வெளியேற குறிப்பிட்ட வழித்தடங்களை தாக்குதல் இலக்கிலிருந்து விலக்கி அதை மனிதாபிமான வழித்தடமாக உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையின்போது வெளிநாட்டவரை பத்திரமாக வெளியேற்றுவது குறித்துதான் முக்கியமாக பேசப்பட்டதாகவும், அதில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தினால் வெளிநாட்டவர் அனைவரும் வெளியேற்றப்படுவர் என உக்ரைன் அதிபரின் ஆலோசகர் மிக்கைலோ பொடொலியாக் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.