மேக் இன் இந்தியா காலத்தின் தேவை:பிரதமர் மோடி அறிவுறுத்தல்

புதுடெல்லி: ‘மேக் இன் இந்தியா திட்டம் என்பது காலத்தின் தேவையாகும்,’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாடு துறை சார்பாக நடந்த இணையவழி கருத்தரங்கில் பிரதமர் மோடி நேற்று கலந்து கொண்டு பேசியதாவது: தொழில்துறையில் சவால்களை எதிர்கொண்டு, இந்தியாவில் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களின் இறக்குமதியை குறைக்க வேண்டும். இன்று இந்த உலகமே இந்தியாவை மிகப் பெரிய உற்பத்தி சக்தியாக பார்க்கிறது. தொழில்நிறுவனங்கள் உலகளாவிய தரத்தை பராமரிக்க வேண்டும். உலகளவில் போட்டியிட வேண்டும். இந்தியா போன்ற ஒரு நாடு வெறும் உற்பத்தி சந்தையாக இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒன்றிய பட்ஜெட்டில் ஆத்மநிர்பார் மற்றும் மேக் இன் இந்தியா திட்டங்களுக்கு குறிப்பிடத்தக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நோய் தொற்று காலத்திலும், சில உறுதியற்ற நிலைகளின்போதும் விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டது. இது நமக்கு மேக் இன் இந்தியாவின் அவசியத்ைத நினைவுபடுத்துகிறது. மேக் இன் இந்தியா திட்டம் காலத்தின் தேவை. உற்பத்தி துறையில் இருக்கும் தலைமைகள் சில பகுதிகளை தேர்ந்தெடுத்து, வெளிநாடுகளை சார்ந்து இருக்கும் நிலையை அகற்ற வேண்டும். பூஜ்ய குறைபாடு – பூஜ்ய விளைவு உற்பத்தியில்  ஈடுபடும்படி அனைவருக்கும் அழைப்பு விடுகிறேன். இந்திய தயாரிப்பு பொருட்கள் அனைத்திலும் எப்போதும் எந்த குறைபாடும் இருக்கக்கூடாது. போட்டி மிகுந்த இந்த உலகில் தரம் என்பது மிகவும் முக்கியமானது. உங்கள் நிறுவனம் தயாரிக்கும் பொருட்களில் பெருமை கொள்ளுங்கள். உங்கள் வாடிக்கையாளர்களையும் பெருமை கொள்ள செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.