மேகதாது அணை விவகாரம்: கர்நாடக அரசின் தன்னிச்சையான போக்கை தடுத்து நிறுத்த ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: ‘தமிழகத்தில் அனுமதி இல்லாமல் எந்த அணையையும் கர்நாடக அரசு கட்ட முடியாது என்ற நிலையில், கர்நாடக அரசின் தன்னிச்சையான போக்கை தடுத்து நிறுத்த தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “மேகதாது திட்டத்திற்கு இடையூறு செய்ய தமிழகத்துக்கு உரிமை இல்லை என்று கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான கே.சித்தராமையா ஒரு வாரத்திற்கு முன்பு கூறிய நிலையில், இன்னும் ஒருபடி மேலே சென்று, மேகதாது அணை மற்றும் பெங்களூரு குடிநீர்த் திட்டற்காக 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது நீதிமன்ற அவமதிப்பாகும்.

2022-2023 ஆம் ஆண்டிற்கான கர்நாடக மாநில நிதிநிலை அறிக்கை நேற்று கர்நாடக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த நிதிநிலை அறிக்கையில், பக்கம் 23, பத்தி 75-ல், மத்திய அரசிடமிருந்து உரிய அனுமதியை பெற்று மேகதாது அணை மற்றும் பெங்களூரு குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. காவிரி நதிநீர்ப் பங்கீட்டில் தமிழகத்தின் உரிமையை பறிக்கும் வகையில் அறிவிப்பினை வெளியிட்டுள்ள கர்நாடக அரசிற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காவிரி நதிநீர்ப் பங்கீடு என்பது தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களுக்கு இடையேயான ஒன்று. இதற்காக அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம், நான்கு மாநிலங்களின் குடிநீர்த் தேவை, பாசனத் தேவை ஆகியவற்றை விரிவாக ஆராய்ந்து, அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திற்குமான நீரின் அளவை நிர்ணயித்தது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி 192 டிஎம்சி அளவு நீரை கர்நாடகம், தமிழகத்துக்குத் தரவேண்டும். ஆனால், உரிய நீர் தரப்படவில்லை. உபரி நீர் தான் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழகத்திற்கு தரவேண்டிய நீர்ப் பங்கீட்டின் அளவை 177.25 டிஎம்சி அடியாக குறைத்தது. இவ்வாறு குறைக்கப்பட்டதற்கு பெங்களூர் குடிநீர்த் தேவையும் ஒரு காரணமாகும். மீண்டும் அதே காரணத்தைக் காட்டி, மேகதாது அணை கட்டுவதற்காக கர்நாடக அரசு 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வது என்பது நியாயமற்ற செயல்.

இந்தப் பிரச்சனை தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்றத்தின் முன் உள்ள இந்த விவகாரத்திற்காக ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்குவது என்பது சட்ட விரோதமான செயலும்கூட. கர்நாடக அரசின் இதுபோன்ற நடவடிக்கை வருகின்ற உபரி நீரையும் தடுத்து நிறுத்தும் முயற்சி.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில், தமிழகத்தின் முதல்வர் என்ற முறையில், கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டுமென்று 25-04-2015 நாளிட்ட கடிதம் வாயிலாக பாரதப் பிரதமரிடம் நான் வேண்டுகோள் வைத்தேன். அந்த சமயத்தில், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்திருந்தது. அதில் பெங்களூரு குடிநீர்த் திட்டம் குறித்தும் கர்நாடகாவால் எடுத்துரைக்கப்பட்டது. தற்போது அந்த மேல்முறையீட்டு மனுவின் மீதான தீர்ப்பும் வெளிவந்து, கர்நாடகாவிற்கு கூடுதல் நீரும் கிடைத்துவிட்டது. இப்போது மறுபடியும் அதே கோரிக்கையை வலியுறுத்துவது ஏற்கக்கூடியதல்ல. இது தமிழகத்தின் உரிமையை பாதிக்கக்கூடிய செயல். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு முற்றிலும் முரணான வகையில், கீழ்மடை மாநிலமான தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் எந்த அணையையும் கர்நாடக அரசு கட்ட முடியாது என்ற நிலையில், கர்நாடக அரசின் தன்னிச்சையான போக்கை தடுத்து நிறுத்த தமிழக முதல்வர், மத்திய அரசின் மூலமாகவும், உச்ச நீதிமன்றத்தின் மூலமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.