வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: ஆப்கானிஸ்தான் அணி வெற்றி

மிர்புர்,
ஆப்கானிஸ்தான் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடியது. இதில் முதலாவது போட்டியில் வங்காளதேசம் வென்று இருந்தது. ஆப்கானிஸ்தான் வீரர்கள் அஸ்மத்துல்லா ஒமர்ஜாய் ஆட்டநாயகன் விருதையும், பசல்லா பரூக் தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.

இந்த நிலையில் வங்காளதேசம்-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 115 ரன்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டது. 
அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹிம் 30 ரன்னும், கேப்டன் மக்முதுல்லா 21 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். ஆப்கானிஸ்தான் தரப்பில் பசல்லா பரூக், அஸ்மத்துல்லா ஒமர்ஜாய் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். 
பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 17.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஹஸ்ரத்துல்லா ஜஜாய் 59 ரன்கள் (45 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 2 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.