ஜடேஜா டிக்ளேர் முடிவை அறிவிக்க விரும்பியது பாராட்டுக்குரியது; கேப்டன் ரோகித் சர்மா புகழாரம்

 மொகாலி,

இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்சில் 129.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 574 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இந்தியா அணியில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 175 (228 பந்துகள் 17 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) ரன்கள் குவித்தார். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 65 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 174 ரன்கள் எடுத்து பாலோ-ஆன் ஆனது.
இரண்டாவது  இன்னிங்சிலும் இலங்கை வீரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. இறுதியில் அந்த அணி 178
ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது.
இறுதியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
போட்டி முடிந்த பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, “உண்மையில் கூற வேண்டுமானால் இந்த போட்டி 3 நாட்களில் முடியும் என நான் நினைத்து பார்க்கவில்லை. ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர்.
விராட் கோலிக்கு இது 100-வது போட்டி. அதனால் நிச்சயமாக இந்த போட்டியை வெல்ல வேண்டும் என நினைத்தோம். அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர்.குறிப்பாக ஜடேஜா சிறப்பாக செயல்பட்டார். அவர் 175 ரன்களில் இருந்த போது டிக்ளேர் செய்யும் முடிவை அணியுடன் சேர்த்து அவரும் அறிவிக்க விரும்பினார். இது அவர் சுயநலமற்றவர்  என்பதை காட்டுகிறது ” என தெரிவித்தார்.

இந்த டெஸ்ட்  போட்டியில் ஜடேஜா 175 ரன்கள் குவித்தது மட்டுமின்றி 9 விக்கெட்களையும் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.      

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.