இது என் ஊரு.. யாருக்கும் பயப்பட மாட்டேன்… சண்டை செய்வேன்: உக்ரைன் அதிபர்!

உக்ரைன்
மீது போர் தொடுத்துள்ள
ரஷ்யா
12ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை நிறுத்த வேண்டும் என்று பல்வேறு நாடுகளும் ரஷ்யாவுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன. அதேசமயம், போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளும் இரு தரப்புக்கும் இடையே நடைபெற்று வருகின்றன. ஆனால், அதில் எந்த ஆக்கப்பூர்வமான முடிவுகளும் எடுக்கப்படவில்லை.

இந்த முயற்சிகளின் பலனாக உக்ரைனின் சில பகுதிகளில் தற்காலிகமாக சண்டையை நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இருப்பினும், அதனை மீறி தாக்குதல் தொடர்வாக உக்ரைன் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால், மக்களை வெளியேற விடாமல் தடுக்க உக்ரைன் அரசே இந்த தாக்குதல்களை திட்டமிட்டு நடத்துவதாக ரஷ்யா தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, உக்ரைன் அதிபர்
வோலோடிமிர் ஜெலன்ஸ்கி
நட்டை விட்டு தப்பியோடிவிட்டதாக செய்திகள் வெளியாகின. போர் சூழலிலும் அவ்வப்போது அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி வீடியோக்கள் வெளியிட்டு வரும் நிலையில், இந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், யாரைக்கண்டும் தனக்கு பயமில்லை; தலைநகர் கீவ்-இல்தான் இருக்கிறேன் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிபர் மாளிகையில் இருந்து சுமார் 8 நிமிட வீடியோவில் பேசியுள்ள அவர், “இதோ சாயங்காலம்; கீவ்-இல் எங்களுடைய அலுவலகம்; உங்களுக்கு தெரியும் திங்கட்கிழமை ஒரு கடினமான நாள். ஆனால், நாட்டில் போர் நடக்கும் சூழலில் ஒவ்வொரு நாளும் திங்கட்கிழமை தான். இப்போது நாங்கள் அதற்கு பழகிவிட்டோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இரவும் அப்படித்தான். இன்று நமது போராட்டத்தின் 12ஆவது…12ஆவது மாலை.” என்று தெரிவித்துள்ளார்.

என்னை பார்ப்பது இதுவே கடைசியாக இருக்கலாம்… நாட்டு மக்களிடம் உருக்கமான பேசிய அதிபர்!

“எங்கள் பாதுகாப்புக்காக நாங்கள் அனைவரும் போரிடுகிறோம்; எல்லோரும் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார்கள். நான் கீவ்-இல் இருக்கிறேன். எனது குழு என்னுடன் உள்ளது. பிராந்திய பாதுகாப்பு போர் களத்தில் உள்ளது. படைவீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். எங்கள் ஹீரோக்களான மருத்துவர்கள், மீட்பு பணியில் இருப்பவர்கள், தூதர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரும் போரில் இருக்கிறோம். எங்கள் வெற்றிக்கு நாங்கள் பங்களிப்போம், கண்டிப்பாக வெற்றியடைவோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக தான் எந்த நேரத்திலும் கொல்லப்படலாம்; இதனையெல்லாம் நன்கு உணர்ந்துதான் உக்ரைன் நாட்டு நலனுக்காக மாற்றுத்திட்டங்களை ஏற்கனவே தயார் செய்து வைத்து விட்டதாக தெரிவித்த வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, தான் கொல்லப்பட்டாலும் உக்ரைனில் இந்த ஆட்சி தொடரும். அதை யாராலும் முடக்க முடியாது என்று தெரிவித்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.