எதற்கும் துணிந்தவன் படத்துல வில்லனா நடிக்க வாய்ப்பு வந்தது; ஆனால்… – ஆரவ் ஷேரிங்ஸ்!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் டைட்டில் வின்னர் ஆரவ், அப்போது செம சென்சேஷன். அடுத்தடுத்து படங்களில் கமிட்டானவர், பிறகு, சைலன்ட் மோடுக்கு போய்விட்டார். தற்போது, இவர் சிக்ஸ் பேக் வைத்திருக்கும் போட்டோ இணையத்தில் செம வைரல். திருமண வாழ்க்கை, அடுத்தடுத்த படங்கள், சிக்ஸ் பேக் கொண்ட சேஞ்ச் ஓவர் என அவரிடம் பேசியதிலிருந்து…

“இப்போ என்னென்ன படங்கள் கைவசம் இருக்கு?”

”பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, ‘மார்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’, ‘ராஜ பீமா’ ரெண்டு படங்கள் நடிச்சு முடிச்சேன். அதுல ‘மார்கெட் ராஜா’ வெளியாகிடுச்சு. ‘ராஜபீமா’ படத்தை வெளியிட ப்ளான் பண்ணிக்கிட்டிருந்த சமயத்துலதான் லாக்டெளன் வந்திடுச்சு. அதனால, படத்தை வெளியிட முடியலை. இப்போ படம் ரெடியாதான் இருக்கு. சரியான தேதியும் ஸ்லாட்டும் கிடைச்சா, ரிலீஸாகிடும். அடுத்து, மகிழ் திருமேனி சார் இயக்கத்துல உதயநிதி சார்கூட ஒரு படம் நடிச்சு முடிச்சிருக்கேன். அடுத்து, பெரிய தயாரிப்பு நிறுவனத்துல ஒரு படம் கமிட்டாகி இருக்கேன். சரியான படங்களை தேர்ந்தெடுத்து பண்ணணும்னுதான் கொஞ்சம் மெதுவா இயங்குறேன்”

“இடையில கொஞ்ச காலம் உங்களை பத்தி எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்ததே?”

ஆரவ்

”ஆமா. இடையில அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போயிடுச்சு. அதுக்காகதான், கொஞ்சம் சீக்கிரமாவே கல்யாணம் பண்ணினேன். அப்புறம், அப்பா தவறிட்டார். இதுல இருந்து வெளியே வர்றதுக்கே கொஞ்சம் நேரமாகிடுச்சு. இதுல லாக்டெளன் வேற. அப்புறம், பையன் பிறந்துட்டான். அதனால, இப்போதான் நானும் ஆக்டிவாக ஆரம்பிச்சிருக்கேன்”

“மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியிருக்கிற படத்துல உங்களுக்கு என்ன மாதிரியான கேரக்டர் ? எப்படி வந்தது இந்த வாய்ப்பு?”

ஆரவ் – உதயநிதி ஸ்டாலின்

”மகிழ் சார் படங்கள் ரொம்ப வித்தியாசமா இருக்கும். இந்தப் படம் அதுல இருந்தும் வெரைட்டி காட்டியிருக்கார். விறுவிறுனு போகும். உதயநிதி சாருக்கும் எனக்கும் செம சேஸிங் இருக்கு. நான் இதுல வில்லன்னும் சொல்லமுடியாது. வில்லன் இல்லைன்னும் சொல்லமுடியாது. பிக்பாஸ் எல்லாம் முடிஞ்ச பிறகு, சில இடங்கள்ல மகிழ் சாரை சந்திச்சிருக்கேன். அவர்கூட வொர்க் பண்ணணுங்கிற ஆசையை அவர்கிட்டயே நிறைய முறை சொல்லிருக்கேன். அப்படிதான் இந்தப் படம் ஆரம்பிக்கும்போது, நான் அவருக்கு ஞாபகம் வந்திருக்கேன். ஆனா, அந்த சமயத்துல அவர் நினைச்ச லுக்ல நான் இல்லை. இந்த ரோலுக்கு நிறைய ஹீரோக்கள்கிட்டயே கேட்டிருக்கார். ஆனா, ஏதொவொரு காரணம் அவங்களால பண்ணமுடியலை. அப்புறம் சார் என்னை கேட்டார். நானும் ஒல்லியா இருந்தேன். கொஞ்ச டைம் கேட்டு, ஒரு மாசத்துல உடம்பை ரெடி பண்ணிட்டு போனேன். அவர் ஓகே சொல்லிட்டார். எனக்கு பெரிய ப்ரேக்கா இருக்கும் இந்தப் படம். நிறைய படங்கள் வில்லனா நடிக்க வாய்ப்புகள் வந்தன. ஆனா, எனக்கு பண்ணணும்னு தோணலை. ஆனா, மகிழ் சார் கதை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அவரும் செம ஸ்வீட். இந்தப் படத்துடைய ஷூட்ல இருக்கும்போது, ‘எதற்கும் துணிந்தவன்’ படத்துல வில்லனா நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனா, இந்த லுக்ல இருந்ததால, பண்ணமுடியலை”

சிக்ஸ் பேக்ஸ் – எப்படி ரெடி பண்ணுனீங்க ?

ஆரவ்

”நான் பத்து வருஷமா வொர்க் அவுட் பண்ணிட்டு இருக்கேன். இதுக்கு முன்னாடியும் சிக்ஸ் பேக் வெச்சிருந்தேன். இந்த லுக் கொண்டு வந்தது இதுதான் எனக்கு ஃபர்ஸ்ட் டைம். இந்த லுக் கொண்டு வர்றது மிகப்பெரிய சவால். கொழுப்பு எதையும் சேர்த்துக்கவேகூடாது. ஒட்டுமொத்த உடம்புலேயே 8% கொழுப்புதான் இருக்கணும். தசைகளை விரிவடைய செஞ்சு, அதுக்கு இன்னும் வலு சேர்க்க வேண்டியிருந்தது. என் நண்பர் ஒருவர் டாக்டரா இருக்கார். அவர் மிஸ்டர். தமிழ்நாடு வாங்கியவரும்கூட. அவர்தான் எனக்கு என்ன மாதிரி உணவு எடுத்துக்கணும், எப்படி வொர்க் அவுட் பண்ணணும்னு எல்லாமே சொல்லிக்கொடுத்தார். நான் ஏற்கெனவே ஃபிட்டாதான் இருந்தேன். அதுல இருந்து இந்த லுக் கொண்டு வர ஆறு மாசமாச்சு. இந்த ப்ராசஸ் ரொம்ப கஷ்டம். ஹை ப்ரோட்டீன் டயட், நிறைய் நார்சத்து காய்கறிகள் சாப்பிட்டேன். தினமும் சிக்கன் அல்லது மீன் 250 கிராம் எப்போவும் என்னுடைய மதிய உணவுல இருக்கும். சப்பாத்தி, பழங்கள், சேலட்னுதான் மொத்த உணவும் இருக்கும். உப்பு, சர்க்கரை, பால் சார்ந்த உணவுகள்னு எதையும் தொடவேயில்லை. பிடிச்சது எதையும் சாப்பிடமுடியலை. பிரியாணியை ரொம்ப மிஸ் பண்ணினேன். தினமும் மூன்று மணி நேரம் வொர்க் அவுட், ஒரு மணி நேரம் நடைபயிற்சி பண்ணிடுவேன்”

“லாக்டெளன் எப்படி போச்சு ?”

”அப்பா இறந்தது, மகன் பிறந்ததுனு ஒரு கெட்ட விஷயம், ஒரு நல்ல விஷயம் நடந்தது. நம்ம எல்லோருக்கும் நிறைய பாடம் கத்துக்கொடுத்தது லாக்டெளன். யாருக்கும் யாருமே இல்லாத மாதிரியாகிடுச்சு. நம்மளும் யாருக்கும் உதவி பண்ண போய் நிற்க முடியாது. மத்தவங்களும் நமக்கு உதவி பண்ண போய் நிற்க முடியாது. அவங்களுக்கு நம்மளை பார்த்து பயம் ; நமக்கு அவங்களை பார்த்து பயம். என் அப்பா மருத்துவமனையில சிகிச்சையில இருந்தபோது, எஸ்.பி.பி சாரும் அதே மருத்துவமனையிலதான் இருந்தார். அவ்ளோ பெரிய மனுஷன். ஆனா, அவர்கூட சரண் சார் மட்டும்தான் இருந்தார். சூழல் அப்படிதான் இருந்தது. அப்படியான சூழல்ல எனக்கு சிலர் உதவி பண்ணினாங்க. அதுல இருந்து யாருக்கெல்லாம் பெட் இல்லைனு கஷ்டப்பட்டாங்களோ என்னால முடிஞ்ச உதவிகளை செஞ்சேன். இப்படிதான் லாக்டெளன் ஓடுச்சு”

“திருமண வாழ்க்கை எப்படி இருக்கு?”

”ரொம்ப நல்லா போயிக்கிட்டிருக்கு. எனக்கு பெரிய சப்போர்ட் அவங்கதான். பையன் பிறந்து மூணு மாசமாகுது. நான் என் அப்பாக்கூட ரொம்ப க்ளோஸ். அதனால, அவருடைய இழப்பு அவ்ளோ கஷ்டத்தை கொடுத்தது. இப்போ என் அப்பாவே எனக்கு மகனா வந்து பிறந்திருக்கார்னு தோணுது. ரொம்ப நெகிழ்ச்சியாவும் சந்தோஷமாவும் இருக்கு. என்னை சுத்தி நிறைய பாசிட்டிவிட்டி உருவாகியிருக்கு”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.