தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 29 பெண்களுக்கு நாரி சக்தி விருது: ஜனாதிபதி வழங்கி கவுரவிப்பு

புதுடெல்லி: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பல்வேறு துறைகளில் சிறப்பாக விளங்கிய 29 பெண்களுக்கு ‘நாரி சக்தி விருது’ வழங்கி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கவுரவப்படுத்தினார். ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் தொழில் முனைவோர், விவசாயம், புதுமை, சமூக பணி, கல்வி மற்றும் இலக்கியம்,  மொழியியல், கலை மற்றும் கைவினை, அறிவியல், தொழில்நுட்பம், மாற்றுத்திறனாளிகள் உரிமை போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பை வழங்கும் பெண்களை கவுரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் ‘நாரி சக்தி விருது’ வழங்கப்படுகிறது. அதன்படி, நேற்று சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, 29 பெண்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ‘நாரி சக்தி விருது’ வழங்கி கவுரவித்தார். கடந்த 2020ம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட 14 விருதுகள் (15 பேருக்கு), 2021ம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட 14 விருதுகள் (14 பேருக்கு) வழங்கப்பட்டுள்ளது. விருது பெற்றவர்களில் சமூக தொழில் முனைவோர் அனிதா குப்தா, இயற்கை விவசாயி மற்றும் பழங்குடி ஆர்வலர் உஷாபென் தினேஷ்பாய் வாசவா, கண்டுபிடிப்பாளர் நசிரா அக்தர், இன்டெல் – இந்தியா தலைவர் நிவ்ருதி ராய், டவுன் சிண்ட்ரோம் பாதிக்கப்பட்ட கதக் நடனக் கலைஞர் சைலி நந்த்கிஷோர் அகவனே, முதல் பெண் பாம்பு மீட்பாளர் வனிதா ஜக்தியோ பி.சர்வதேச உள்ளிட்டோர் அடங்குவர். விருது பெற்றவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வாழ்த்து தெரிவித்தார். இந்த விருது பெற்றவர்களில் 3 பெண்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள். நீலகிரியை சேர்ந்த தோடா எம்பிராய்டரி கைவினைஞர்களான ஜெயமுத்து, தேஜம்மா ஆகியோருக்கு 2020ம் ஆண்டுக்கான பெண் சக்தி விருதும், சென்னையை சேர்ந்த மனநல மருத்துவரும், ஆராய்ச்சியாளருமான டாக்டர் தாரா ரங்கசாமிக்கு 2021ம் ஆண்டுக்கான பெண் சக்தி விருதும் வழங்கப்பட்டது.* தலை வணங்குகிறேன்சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘கவுரவம் மற்றும் வாய்ப்புக்கு முக்கியத்துவம் அளித்து, பல்வேறு திட்டங்கள்  மூலம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் தனது அரசாங்கம் கவனம் செலுத்தும். நாரி சக்தி விருது பெற்றவர்கள், பல்வேறு துறைகளில் அவர்கள் செய்த சாதனைகளுக்கு தலை வணங்குகிறேன்,’ என்று கூறி உள்ளார். * சமுதாயத்தை மாற்றும் திறன் கொண்டவர்கள்- ராகுல் காந்திகாங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘பெண்கள் தங்கள் ஞானம், அர்ப்பணிப்பு, வலிமையால் ஒரு சமூகத்தையே மாற்றும் திறன் கொண்டவர்கள். அவர்கள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பலனைப் பெற வேண்டும்,’ என்று கூறி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.