உக்ரைனுக்கு 10 மில்லியன் டாலர் உதவி அளித்த லியானார்டோ டிகார்ப்பியோ

ஹாலிவுட் நடிகரும், அழியா காதல் காவியமான 'டைட்டானிக்' பட நாயகனுமான லியானார்டோ டிகார்ப்பியோ உக்ரைன் நாட்டிற்கு 10 மில்லியன் யுஎஸ் டாலர் உதவி வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

லியானார்டோ டிகார்ப்பியோவின் பாட்டி ஹெலென் டென்பிர்கென், உக்ரைன் நாட்டின் ஒடெஸ்ஸா நகரில் ஜெலினா ஸ்டெபனோவ்னா ஸ்மிர்ன்நோவா என்ற பெயரில் பிறந்தவராம். அவர் 1917ம் ஆண்டு தனது பெற்றோருடன் ஜெர்மனிக்கு புலம் பெயர்ந்துள்ளார். அங்குதான் லியானார்டாவின் அம்மா பிறந்தாராம்.

தனது அம்மா வழி பாட்டி மீது மிகவும் பாசம் கொண்டவராம் லியானார்டா. நடிப்பதற்காக முயற்சி செய்த போது பாட்டிதான் அவரை அதிகம் ஊக்கப்படுத்தினாராம். 2008ல் தனது 93வது வயதில் இறந்த அந்த பாட்டி தனது பேரன் நடித்த பல படங்களின் பிரிமீயர் காட்சிகளில் கலந்து கொண்டு சிறப்பித்திருக்கிறாராம்.

தன் பாட்டி மீதுள்ள பாசத்தால் தான் தற்போது உக்ரைனுக்கு அவ்வளவு பெரிய தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளார் லியானார்டோ என்கிறார்கள். சர்வதேச அளவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் சர்வதேச வைஸ்கார்டு பன்ட் என்ற அமைப்பின் மூலம் இத்தகவல் வெளியாகி இருக்கிறது. இதை அமெரிக்க ஊடகங்களும் வெளியிட்டிருக்கின்றன.

1998ல் தனது 25வது வயதில் லியானார்டோ டிகார்ப்பியோ பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை ஆரம்பித்த லியானார்டோ உலக அளவில் பல்வேறு விதமான தொண்டுகளை செய்து வருகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.