ராஜீவ் கொலை வழக்கு; 32 ஆண்டுகளுக்கு பிறகு பேரறிவாளனுக்கு ஜாமீன்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

Supreme court grants bails to Rajiv Gandhi assassinated case convict Perarivalan: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை பெற்று வரும் பேரறிவாளனுக்கு, 32 ஆண்டுகளுக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் கடந்த 32 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் அனைவரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி, அரசியல் கட்சியினர் மற்றும் திரை பிரபலங்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனையடுத்து, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக, தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் மாளிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆளுநர் இதுவரை இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை.

இந்தநிலையில், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்டோருக்கு தமிழக அரசு அடுத்தடுத்து பரோல் விடுப்பு வழங்கி உள்ளது. பேரறிவாளனுக்கு ஒவ்வொரு மாதமும் பரோல் நீட்டிப்பும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 10 மாதங்களாக பேரறிவாளன் பரோலில் உள்ளார்.

இதனிடையே, பேரறிவாளன் தனக்கு ஜாமீன் வழங்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தம் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்பதால் தம்மை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.

விசாரணையின் போது, 7 பேர் விடுதலை தொடர்பான தமிழக சட்டமன்ற தீர்மானத்தின் மீது ஆளுநர் தரப்பில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருப்பதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். அப்போது, ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சர்வதேச பின்னணி குறித்த விசாரணைக்காக காத்திருப்பதாக ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பேரறிவாளன் மனுவுக்கும் ஆளுநர் தரப்பின் கருத்துக்கும் தொடர்பு இல்லை எனவும் உச்சநீதிமன்றம் கூறியது.

இதையும் படியுங்கள்: சூர்யா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு: வட மாவட்டங்களில் படம் ரிலீஸ் ஆகுமா?

அப்போது பேரறிவாளன் தரப்பில், இவ்விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்க காலதாமதம் ஆகும். தற்போது பரோல் விடுப்பில் இருக்கும் பேரறிவாளன், யாரையும் சந்திக்க முடியாத நிலையில் இருக்கிறார். பேரறிவாளன் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டது போல் இருக்கிறார். ஆகையால் அவருக்கு இந்த வழக்கு முழுமையாக முடியும் வரை ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், பேரறிவாளன் ஜாமீன் கோரும் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் ராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது என மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் இதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், சிபிஐ விசாரித்து வருவது பற்றி எங்களுக்கு தெரியும். அது பற்றி பின்னர் முடிவெடுக்கலாம். இப்போது பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்குவது என நாங்கள் தீர்மானமாக உள்ளோம் என நீதிபதிகள் கூறினர். இதனையடுத்து, இன்று பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.