கர்ப்பிணி பெண் உட்பட 17 பேர் படுகாயம்| Dinamalar

மரியுபோல்:உக்ரைனில் மருத்துவமனைகளை குறிவைத்து, ரஷ்ய ராணுவத்தினர் நேற்று நடத்திய ஏவுகணை தாக்குதல்களில், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி பெண் உட்பட 17 பேர் படுகாயமடைந்தனர்.

ரஷ்ய ராணுவம், கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில் நுழைந்து, இரண்டு வாரங்களுக்கும் மேலாக தாக்குதல்களை நடத்தி வருகின்றது. குறிப்பாக, தலைநகர் கீவ் உள்ளிட்ட நாட்டின் பிரதான நகரங்களில் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது.குண்டுகள் மற்றும் ஏவுகணைகளை வீசி, கட்டடங்கள் தகர்க்கப்பட்டு வருகின்றன. ரஷ்ய படையின் தாக்குதலில் இருந்து உயிர்பிழைக்க, மக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

இதற்கிடையே, ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்கள், அண்டை நாடுகளுக்கு அகதிகளாக சென்ற வண்ணம் உள்ளனர்.இந்நிலையில், நாட்டின் துறைமுக நகரமான மரியுபோலில், நேற்று ரஷ்ய படையினர் ஏவுகணைகளை வீசி தாக்குதல்களை அரங்கேற்றினர். இதில், குழந்தைப்பேறு மருத்துவமனை ஒன்று சேதமடைந்தது. இதில், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி பெண் ஒருவர் உட்பட, 17 பேர் படுகாயம் அடைந்தனர். பின், அந்த பகுதிக்கு விரைந்து போலீசார், காயமடைந்தோரை மீட்டு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

இதேபோல், தலைநகர் கீவில் நேற்று குண்டுகள் வீசி நடத்தப்பட்ட தாக்குதல்களில், குழந்தைகள் மருத்துவமனை உள்ளிட்ட இரண்டு மருத்துவமனைகள் சேதமடைந்தன. மருத்துவமனைகள் மீதான தாக்குதல்களுக்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்து, ‘வீடியோ’ செய்தி ஒன்றை வெளியிட்டார்.

அதில் அவர் கூறியதாவது:குழந்தைகள் மருத்துவமனை, குழந்தைப்பேறு மருத்துவமனை மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இவை ரஷ்யாவுக்கு எந்த வகையில் அச்சுறுத்தலாக இருந்தன என்பது எனக்கு தெரியவில்லை.ரஷ்ய படையினர், மிகப்பெரிய குற்றத்தை இழைத்துள்ளனர். எந்த நியாயமும் இல்லாமல் போர் தொடுத்து வருகின்றனர். ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள், மேலும் கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும். அப்போதுதான், இந்த இனப்படுகொலையை ரஷ்யா நிறுத்தும்.இவ்வாறு அவர் கூறினார்.


ரஷ்யா மறுப்பு

உக்ரைனில், மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டை, ரஷ்யா திட்டவட்டமாக மறுத்துள்ளது. அந்த மருத்துவமனைகளை ஏற்கனவே தங்கள் ராணுவத்தினர் கைப்பற்றிவிட்டதாக கூறியுள்ள ரஷ்யா, அவற்றில் தாக்குதல் நடந்த போது, அங்கே யாரும் இல்லை என விளக்கம் அளித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.