கேரள ஓட்டலில் பயங்கரம் நீரில் மூழ்கடித்து குழந்தை கொலை பாட்டியின் கள்ளக்காதலன் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் ஓட்டல் அறையில் பெண் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற பாட்டியின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே அங்கமாலியை சேர்ந்தவர் சஜீவ். அவரது மனைவி டிக்சி. இந்த தம்பதிக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தை, ஒன்றரை வயதில் நோரா மரியா என்ற ஒரு பெண் குழந்தை. சஜீவனின் தாய் சிப்சி (50). தாய், மகன் 2 பேரும் போதைப்பொருள் கடத்தல் உள்பட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த விவரம் முதலில் டிக்சிக்கு தெரியாது. பின்னர் தெரிந்ததும், கணவனை விட்டு விலகி டிக்சி தாய் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்றுவிட்டார். இந்த நிலையில் டிக்சிக்கு துபாயில் ஒரு ஓட்டலில் வேலை கிடைத்தது. இதையடுத்து குழந்தைகளை பெற்றோரிடம் விட்டுவிட்டு துபாய் சென்றார். இதற்கிடையே தனது குழந்தைகள், மனைவியின் வீட்டில் பாதுகாப்பாக இல்லை என்று கூறி சஜீவ் குழந்தைகள் நல அமைப்பிடம் புகார் செய்தார். இதையடுத்து குழந்தைகள் 2 பேரையும் சஜீவின் பெற்றோரிடம் ஒப்படைக்க குழந்தைகள் நல அமைப்பு உத்தரவிட்டது. இதனால் கடந்த சில மாதங்களாக 2 குழந்தைகளையும் சஜீவின் தாய் சிப்சி தான் கவனித்து வந்தார். இதற்கிடையே சிப்சிக்கும் எர்ணாகுளத்தை சேர்ந்த ஜான் பினோய் டிக்ரூஸ்க்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தனது மகனின் 2வது குழந்தை தனக்கு பிறந்தது என்றும், அதற்கு ஜான் தான் காரணம் என்று கூறி ஜானை சிப்சி மிரட்டி வந்துள்ளார். இதனால் சிப்சி மீது ஜானுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதையடுத்து குழந்தையை கொல்ல ஜான் திட்டமிட்டார். இந்த நிலையில் கடந்த 5ம் தேதி கொச்சி கலூரில் உ்ளள ஒரு ஓட்டலில் சிப்சியும், ஜானும் அறை எடுத்து தங்கினர். அப்போது யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க சிப்சி 2 பேரக் குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தார். ஆகவே 3 நாள் தொடர்ந்து 4 பேரும் ஓட்டல் அறையில் தங்கி இருந்தனர். இந்த நிலையில் கடந்த 8ம் தேதி 2 குழந்தைகளையும் ஜானிடம் விட்டுவிட்டு சிப்சி வெளியே சென்று இருந்தார். அன்று இரவு குழந்தையை கொல்ல ஜான் திட்டமிட்டார். அதன்படி ஓட்டல் கழிப்பறையில் இருந்த வாளித் தண்ணீரில் குழந்தையை மூழ்கடித்து கொன்றார். அதன் பிறகு சிப்சிக்கு போன் செய்த ஜான், குழந்தை மயங்கிக் கிடப்பதாக கூறி உள்ளார். உடனே அவர் ஓட்டல் அறைக்கு விரைந்து சென்றார். பின்னர் மயங்கிக் கிடந்த குழந்தையை எடுத்துக்கொண்டு 2 பேரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். பால் குடிக்கும் போது குழந்தை மயங்கி விட்டதாக அங்கிருந்த டாக்டர்களிடம் 2 பேரும் கூறி உள்ளனர். ஆனால் குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். மேலும் இதுகுறித்து போலீசாருக்கு தகவலும் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். இதில், குழந்தையை ஜான் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். சிப்சியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.