நேட்டோ அமைப்பில் உறுப்பினராக சேர மாட்டேன்; ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சு நடத்த தயார்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பகிரங்க அறிவிப்பு

கீவ்: ‘‘அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பின் உறுப்பினராக சேர மாட்டேன். ரஷ்ய அதிபர் புதினுடன் நேரடியாக சமரச பேச்சுவார்த்தை நடத்தத் தயார்’’ என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்புடன் சேரவும் ஐரோப்பிய நாடுகளுடன் நெருங்கிய உறவு வைத்துக் கொள்ளவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மிகவும் பிடிவாதமாக இருந்து வந்தார். இது ரஷ்யாவுக்கு பாதகமான விஷயம் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தொடர்ந்து எச்சரித்து வந்தார். எனினும், நேட்டோவில் சேர்வதற்கு ஜெலன்ஸ்கி தீவிரம் காட்டி வந்தார். இதையடுத்து கடந்த மாதம் 24-ம் தேதி உக்ரைன் மீதான ராணுவ தாக்குதலை ரஷ்யா தொடங்கியது.

ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானங்களில் இந்தியா, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட பல நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணித்தன. இதனிடையே, உக்ரைனின் பல நகரங்களை ரஷ்ய படைகள் பிடித்து விட்டன. தலைநகர் கீவ் நகரை ரஷ்ய படைகள் நெருங்கின. போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ரஷ்யா – உக்ரைன் இடையே 3 சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. எனினும்எந்த இறுதி முடிவும் எட்டப்படவில்லை.

இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, தனியார் செய்தி நிறுவனத்துக்கு நேற்று முன்தினம் அளித்த பேட்டியில் கூறியதாவது: நேட்டோ அமைப்பில் உக்ரைனை உறுப்பினராக சேர்த்துக் கொள்ளும்படி இனிமேல் நான் வலியுறுத்த மாட்டேன். உக்ரைனைச் சேர்ந்த டோனஸ்க் மற்றும் லுகான்ஸ்க் ஆகிய 2 நகரங்களை தன்னாட்சி பிரதேசமாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைனைச் சேர்ந்த அந்த பகுதிகள் மட்டும் எப்படி தனித்து இயங்க முடியும். இந்த பகுதிகள் குறித்து திறந்த மனதுடன் சமரச பேச்சு நடத்த இறங்கி வருகிறேன். ரஷ்ய அதிபர் புதினுடன் நேரடியாக சமரச பேச்சுவார்த்தை நடத்த நான் தயார்.

உக்ரைனை சேர்த்துக் கொள்ள நேட்டோ அமைப்பு தயாராக இல்லை. சில சர்ச்சைக்குரிய விஷயங்களில் நேட்டோநாடுகள் பயப்படுகின்றன. ரஷ்யாவை நேரடியாக பகைத்துக் கொள்ள அவை தயாராக இல்லை. நேட்டோ நாடுகளிடம் மண்டியிட்டு பிச்சை கேட்கும் ஒரு நாட்டின் அதிபராக இருக்க நான் விரும்பவில்லை. இவ்வாறு அதிபர் ஜெலன்ஸ்கி பேட்டியில் கூறியுள்ளார்.

கவிழ்ப்பது நோக்கமல்ல..

இதனிடையே, ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா நேற்று கூறும்போது, ‘‘உக்ரைன் நடுநிலை வகிப்பதை உறுதி செய்வதே ரஷ்யாவின் இலக்காகும். இதை பேச்சுவார்த்தை மூலம் அடையவிரும்புகிறோம். உக்ரைன் அரசை கவிழ்ப்பது ரஷ்ய அரசின் நோக்கம் அல்ல. உக்ரைனுடனான அடுத்து சுற்று பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய விரும்புகிறோம். ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை அதன் திட்டத்தை அடையும் நோக்கில் நடந்து கொண்டிருக்கிறது” என்றார்.

நேட்டோ அமைப்பில் சேர மாட்டேன் என்று ஜெலன்ஸ்கி வெளிப்படையாக தெரிவித்து விட்டதால், உக்ரைன் -ரஷ்யா போர் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.