“முதல்வர் ஸ்டாலின் விரைவில் பாஜகவோடு இணக்கமாக இருப்பார் என நம்புகிறேன்” – அண்ணாமலை பேட்டி

தமிழகத்தில் பாஜக ஆட்சியமைப்பது 2026ம் ஆண்டு வருமா, 2024ல் வருமா என்பது தெரியவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மேலும், “தமிழக முதலமைச்சர் மத்திய அரசுடன் ஏட்டிக்கு போட்டியாக செயல்படாமல், பாஜக வுடன் இணக்கமாக செயல்பட வேண்டும். விரைவில் செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது” என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
5 மாநில பாஜக தேர்தல் முடிவுகள் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது, தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கியும், பட்டாசு வெடித்தும் பாஜகவினர் அனைவருடன் அண்ணாமலை வெற்றியை கொண்டாடினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்த 5 மாநில தேர்தலின் முடிவுகளை பார்க்கும் பொழுது, மோடியுடன் இணைந்து பயணிப்போம் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர். உத்திரபிரதேசத்தில் 33 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு ஆளும் கட்சி, மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. உ.பி.யில் போட்டியிட்ட இடங்களில் 60% க்கு மேல் பாஜக வெற்றி பெற்றுள்ளது. 2017ல் கோவாவில் 13 உறுப்பினர்கள் மட்டுமே பாஜக-வினராக இருந்தனர், சுயேட்சை உறுப்பினர்களின் ஆதரவுடன் பாஜக ஆட்சியமைத்தது. இம்முறை தனிபெரும்பாண்மையுடன் கோவாவில் ஆட்சியமைக்க உள்ளது பாஜக.
மணிப்பூரில் கடுமையான உழைப்பால் தனிப்பெரும்பாண்மையுடன் ஆட்சிக்கு வந்துள்ளது பாஜக. சிறுபான்மையினர் அதிகமாக உள்ள மாநிலம் மணிப்பூர் உள்ளது. அங்கு பாஜக விற்கு மக்கள் மிகப்பெரிய அங்கீகாரம் வழங்கியுள்ளனர். இதே நிலை தமிழகத்தில் விரைவில் வரும். கோவாவில் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் பாஜகவுக்கு ஆதரவளித்துள்ளனர். இது தமிழகத்திலும் நிகழும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது. அந்த வகையில் தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்கும். என்றபோதிலும் அது 2026ம் ஆண்டு வருமா, 2024ல் வருமா என்பது தெரியவில்லை” எனக்கூறி நம்பிக்கை தெரிவித்தார்.
image
தொடர்ந்து பேசுகையில், “உக்ரைனை சேர்ந்த இளம் எம்பி-யொருவர் நம் பிரதமர் மோடி குறித்து பேசும் பொழுது, `மோடி தலையிட்டு போரை நிறுத்த வலியுறுத்த வேண்டும்’ என கோரிக்கை வைத்துள்ளார். அந்தளவிற்கு மோடி உலக அளவில் வளர்ந்துள்ளார். இந்தியாவில் சூரிய காந்தி எண்ணெய் 86% உக்ரைனில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. நடக்கும் போரினால், இறக்குமதி செய்யப்படாமல் இருக்கிறது. ஆனால் அதற்கும் மத்திய அரசும் மோடியும் தான் காரணமா?” என கேள்வி எழுப்பினார். பின்னர் தேர்தல் முடிவு குறித்து அவர் பேசுகையில், “இந்தத் தேர்தல் முடிவுகளின் மூலம், காங்கிரஸ் கட்சி மீது திமுகவிற்கு இருந்த சிந்தனை, இன்று முதல் மாறும் என நம்புகிறோம். சொல்லப்போனால் தமிழகத்தில் காமராஜர் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் மறைக்கப்பட்டுள்ளது.
2014ம் ஆண்டுக்கு முன்பு சாதி, மதம் அடிப்படையில் வாக்கு வங்கியை வைத்திருந்தனர். அதனை உடைத்தவர் மோடி. கொரோனாவை கையாண்ட விதத்திற்கு மக்கள் வழங்கிய பரிசு தான் இந்த வெற்றி. காங்கிரஸ் கட்சி பொய்யை மட்டுமே பேசி கடந்த காலங்களில் ஆட்சி அமைத்து வந்தது. அதே நம்பிக்கையில் பொய்யை கூறி ஆட்சி இப்போதும் அமைத்துவிடலாம் என நம்பியது. பல வருடங்கள் ஆண்ட காங்கிரஸ் கட்சி இப்படி மாறியதற்கு, மக்கள் பொய்யை பேசினால் ஏற்க மாட்டார்கள் என்பதற்கு உதாரணம். தமிழகத்தில் எதிர்காலத்தில் ஆட்சியில் அமைப்போம் என உறுதியேற்கிறோம்” என அண்ணாமலை சூளுரைத்தார்.
image
பின்னர் பேசுகையில், “மலிவு அரசியல் செய்த காங்கிரஸ் கட்சி, முழுமையாக இந்த தேர்தலின் மூலம் ஓரங்கட்டப்பட்டுள்ளது. ஆட்சியில் இருக்கும் இரண்டு மாநிலங்களில் மீண்டும் தேர்தல் வந்தால் அங்கும் காங்கிரஸ் ஆட்சி இழக்கும். இதனை பார்க்கும் பொழுது, தேசிய அளவில் பாஜக-விற்கு மாற்று அரசியல் கட்சி இல்லை என்பதே தெரிகிறது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தவறான வழிகாட்டுதல்களை சிலர் வழங்கி வருகின்றனர். இதனை முதலமைச்சர் உணர வேண்டும். மத்திய அரசு எதை செய்தாலும் திமுக ஏட்டிக்கு போட்டியாக செய்து வருகிறது. ஆனால், திமுகவின் அலை கும்மிடிபூண்டியை தாண்டி எங்கும் வீசவில்லை என்பதே உண்மை. 
கும்மிடிப்பூண்டியை தாண்ட முடியாத திமுக, மூன்றாவது கூட்டணியை எப்படி உருவாக்க முடியும்? ஜனநாயகம் கெட்டுப்போக முக்கிய காரணம் குடும்ப அரசியல் தான். அதனை மேற்கொண்டு வரும் திமுகவிற்கு விரைவில் தமிழகத்தில் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டப்படும். சொல்லப்போனால் அக்கட்சியில் முதலமைச்சரே தலைவராக இல்லாமல், கேளிக்கை பொருளாக தான் உள்ளார். தமிழகத்தில் குடும்ப அரசியலை மேற்கொண்டு வரும் திமுகவினை மக்கள் உணர்ந்துள்ளனர்.
image
5 மாநில தேர்தலுக்கு பிறகு பெட்ரோல் டீசல் விலை உயலும் என யாரும் பேசவில்லை, குவாட்டர் உள்ளிட்ட மதுபானங்களின் விலை உயர்வு பற்றி தான் பேசிக்கொண்டு உள்ளனர். தமிழகத்தில் 33 ஆயிரம் கோடி வருவாய் மதுக்கடைகளினால் வருகிறது. இந்த விலையேற்றத்தின் காரணமாக 2,000 கோடி கூடுதலாக வரவுள்ளது. இந்த 35,000 கோடியில் தான் அரசு செயல்படுகிறது. இது தான் திராவிட மாடல் ஆட்சியா? தமிழக பட்ஜெட்டில், 20% க்கும் அதிகமாக மின் கட்டணம் உயரும் என்பது உறுதி. ஏனெனில் மேயர் தேர்தல் தற்பொழுது தான் முடிந்துள்ள நிலையில், கொலுசு போன்ற பரிசு பொருட்களுக்காக செய்த செலவினை எடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்காக இந்த பட்ஜெட்டில் விலையேற்றம், வரி உயர்வு மட்டுமே பெரும்பாலாக இருக்கும்.
மேகதாது அணை விவகாரத்தில், தமிழக, கர்நாடக காங்கிரஸ்க்கும் கள்ள உறவு ஏன்? கர்நாடக காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தமிழக விவசாயிகளின் குரலாக காங்கிரஸ் தனது நிலைபாட்டை தெரிவிக்கவில்லை. தமிழக முதலமைச்சர் தமிழக காங்கிரஸ் தலைவர்களிடம் ஏன் மேகதாது விவகாரம் குறித்து எந்த கேள்வியும் எழுப்பவில்லை? தமிழக மக்களின் உரிமையை விட்டுக்கொடுக்க திமுக தயாராக உள்ளதா? மக்களுக்கு நன்மை பயக்க வேண்டும் என்றால், முதலமைச்சர் பாஜக-வுடன் இணக்கமாக செயல்பட வேண்டும். விரைவில் செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது” என தெரிவித்தார்.
பின்னர் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து அவர் பேசுகையில், “ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது. இதனால் நிச்சியமாக மாற்றம் உள்ளது. அது இன்று நேற்று வந்த விஷயமில்லை. சுதந்திரத்திற்கு பிறகு நடைபெற்ற 3 தேர்தல்கள் அவ்வாறே நடைபெற்றது. பிறகு காங்கிரஸ் ஆட்சியில் ராஜிவ்காந்தி பிரதமராக இருந்த பொழுது அதிமுக தரப்பில் முறை விதி 356யை பயன்படுத்தி ஆட்சியை கலைத்து, மீண்டும் தேர்தல் நடத்தியது. இதனால்தான் தேர்தல் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறியது” என விளக்கமளித்தார்.
– சுபாஷ் பிரபு, நிவேதா
சமீபத்திய செய்தி: “நகைச்சுவை கலைஞர்’ to பஞ்சாப் முதல்வர்” – வாக்கெடுப்பில் தேர்வான ஆம் ஆத்மியின் அரசியல் முகமான பகவந்த் மான்.. யார் இவர்?Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.