கடந்த 24 மணிநேரத்தில் ராஜபக்ஷ ரெஜிமென்டின் அதிரடி மாற்றங்கள்! திணறும் பொது மக்கள்



இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக மாற்றுவதாக சபதம் எடுத்த ராஜபக்ஷ ரெஜிமென்ட் அணி இன்று நாட்டு மக்களுக்கு வரலாறு காணாத அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

இலங்கையின் வரலாற்றில் எந்தவொரு அரசாங்கத்தின் போதும் இல்லாத வகையில் மக்களின் வாழ்க்கை செலவு சமகாலத்தில் ஏற்பட்டுள்ளது.

பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிப் பீடம் ஏறிய ராஜபக்ஷ சகோதரர்களை இலங்கையின் பொருளாதார நிலைமை படாதபாடு படுத்தி வருகிறது.

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பெருந்தொற்றினால் பெரும் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி அரசாங்கத்தை அதாள பாதாளத்திற்கு தள்ளியுள்ளது.

எரிபொருள், எரிவாயு பிரச்சினை நீண்டு கொண்டிருந்த நிலையில், சில தினங்களாக டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி வரலாறு காணாத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இதன் காரணமான அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டணங்களும் வரலாறு காணாத வகையில் அதிகரித்து மக்களின் வாழ்வில் பெரும் இடியாக மாறியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு வகையான பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டணங்கள் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வரலாற்றில் முதன் முறையாக நேற்றையதினம் டொலருக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி 250 ரூபாவை தாண்டியிருந்தது.

இதன் காரணமாக பெட்ரோல் 50 ரூபாவினாலும் டீசல் 75 ரூபாவினாலும் அதிகரித்துள்ளது.

கோதுமை மா 40 ரூபாவினால் அதிகரிதுள்ள நிலையில் பாணின் விலை 30 ரூபாவால் அதிகரித்துள்ளது. அத்துடன் கொத்து ரொட்டி 10 ரூபாவினாலும் சோற்றுப் பார்சல் 20 ரூபாவினாலும் அதிகரித்துள்ளது.

பால் மா ஒரு கிலோ 300 ரூபாவினாலும் 400 கிராம் 120 ரூபாவினாலும் அதிரித்துள்ளது.

மருந்து பொருட்கள் 29 வீதத்தினால் அதிகரித்துள்ள நிலையில் அனைத்து விதமான விமான டிக்கெட்டுகளும் 27 வீதத்தினால் அதிகரித்துள்ளது.

அத்துடன் தங்கத்தின் விலை 6000 ரூபாவினால் அதிகரித்துள்ள நிலையில் 14000 ரூபாவிற்கு ஒரு பவுண் தங்கம் விற்பனை செய்யப்படுகிறது.

இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக தங்கம் ஒன்று விற்பனை செய்யப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் இவையாகும்.

அடுத்த வரும் நாட்களில் பல மாற்றங்களை எதிர்பார்க்க முடியும். அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி 300 ரூபாவை தாண்டும் என பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக மக்களால் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு விலைவாசி இன்னும் அதிகரிக்கும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. 

இவ்வாறான நிலை நீடிக்குமாயின் இலங்கையில் பட்டினியால் மரணங்கள் அதிகரிப்பதுடன் சமூகம் சார்ந்த பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. உணவுக்காக திருடும் சம்பவங்களும் அதிகரிக்கும் அவல நிலை ஏற்படும்.

இவ்வாறான நெருக்கடியான நிலையில் சமகால அரசாங்கம் எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பதே நாட்டு மக்களின் ஏக்கமாக உள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.