கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாமை தொடங்கி வைத்தார் மாநகராட்சி மேயர்.!

கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமினை சென்னை அடையாறில் மாநகராட்சி மேயர் பிரியா இன்று தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஏழை, எளிய மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே இலவச சிறப்பு மருத்துவ பரிசோதனை மற்றும் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து நோய்களுக்கான சிகிச்சைகளை உடனடியாக அளிப்பதற்கு கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் என்ற உன்னதத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திரு.வி.க.நகர் மண்டலம், கொளத்தூர் பள்ளி சாலை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி பொதுமக்களின் உயிர்காக்கும் உன்னதத் திட்டமான கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார்.

கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவம் உள்ளிட்ட 17 வகையான மருத்துவ வசதிகள் சிறப்பு மருத்துவர்களால் அளிக்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட திரு.வி.க.நகர் மண்டலம் மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலம் ஆகியவற்றில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. திரு.வி.க.நகர் மண்டலத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமில் 3,000 நபர்களும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 2,021 நபர்களும் மருத்துவ சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு-178, தரமணி, பாரதியார் தெருவில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளியில் மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமினை இன்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம், கோவிட் தடுப்பூசி முகாம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த மருத்துவ முகாமில் 30 மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.  தொடர்ந்து இந்த முகாம்கள் மீதமுள்ள அனைத்து மண்டலங்களிலும் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் துணை மேயர் மு.மகேஷ் குமார், வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜே.எம்.எச்.ஹசன் மௌலானா, துணை ஆணையாளர்கள் டாக்டர் எஸ்.மனிஷ், திரு.சிம்ரன்ஜீத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.