ஆந்திர அமைச்சரவை விரைவில் கூண்டோடு மாற்றம் : நடிகை ரோஜா அமைச்சராகிறார்?

திருமலை: ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது முதல்வர் ஜெகன் மோகன் பேசியதாவது: நான் முதல்வராக பதவியேற்று மூன்று ஆண்டுகள் ஆகிய நிலையில் தற்போது அமைச்சரவை மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே 90 சதவீதம் தற்போது உள்ள அமைச்சர்களை நீக்கி, புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தற்போது அமைச்சர்களாக உள்ளவர்கள், புதிதாக 13 மாவட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், 26 மாவட்டத்திற்கும் மாவட்ட அளவில் கட்சி பொறுப்பு வழங்கப்படும். கட்சியை பலப்படுத்தி வரும் தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவது குறித்து நீங்கள் வியூகம் வகுக்க வேண்டும். மீண்டும் நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு உங்களுக்கு அமைச்சர்களாக மீண்டும் பதவி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். தற்போது அமைச்சர்களாக உள்ளவர்களில் 10 சதவீதத்தினருக்கு மட்டுமே அமைச்சரவையில் பதவி கிடைக்கும் என்பதால், அதில் யார் யாருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. மேலும், யார் யார் பதவிபோகும் என்ற கவலையும் ஏற்பட்டுள்ளது. அமைச்சரவை விரிவாக்கத்திற்கு காத்திருந்த பலர் தங்களுக்கு அமைச்சரவையில் இடம் பெறுவதற்காக தங்கள் தரப்பில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சித்தூர் மாவட்டம், நகரி தொகுதி எம்எல்ஏவாக இரண்டாவது முறையாக தொடர்ந்து வெற்றி பெற்ற நடிகை ரோஜாவுக்கு, கடந்த அமைச்சரவை கூட்டத்திலேயே இடம் கிடைக்கும் என பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. இந்த முறை அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.