ரூ. 85 லட்சத்தை ஏமாற்றிய புகாரில் தயாரிப்பாளர், நடிகர் மீது மோசடி வழக்கு: ஐதராபாத் போலீசார் அதிரடி

ஐதராபாத்: ரூ. 85 லட்சம் மோசடி புகாரின் அடிப்படையில் தெலுங்கு பட தயாரிப்பாளர் மற்றும் அவரது மகனும் நடிகருமான சாய் ஸ்ரீனிவாஸ் ஆகியோர் மீது ஐதராபாத் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நகர நீதிமன்ற உத்தரவின் கீழ் மத்திய குற்றப்பிரிவு (சிசிஎஸ்)  போலீசார் ரூ.85 லட்சம் மோசடி செய்த புகாரின் அடிப்படையில் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷ் மற்றும் அவரது மகனும் நடிகருமான பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக நிதி நிறுவன உரிமையாளர்  ஸ்ரவன் குமார் என்பவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த 2018ம் ஆண்டு புதியதாக திரைப்படம் எடுப்பதற்காக, சினிமா தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷ் மற்றும் அவரது மகனும் நடிகருமான பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் ஆகியோர் என்னிடம் ரூ. 85 லட்சம் வாங்கினர். இருவரும் தவணை முறையில் பணத்தை வாங்கினர். கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் உருவாகும் படத்தில், என்னை உதவி தயாரிப்பாளராக அறிமுகப்படுத்துவதாக கூறினார். அவர்களின் வார்த்தையை நம்பி பணத்தை கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னை ஏமாற்றிவிட்டனர். எனவே, சுரேஷ் மற்றும் அவரது ஸ்ரீனிவாஸ் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார். இம்மனுவானது நகர நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அதன் அடிப்படையில்   சுரேஷ் மற்றும் அவரது மகன் சாய் ஸ்ரீனிவாஸ் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 406 (குற்றவியல் நம்பிக்கை மீறல்), 417, 420 (ஏமாற்றுதல்), 120 பி (குற்றச் சதி) ஆகியவற்றின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.