சரமாரி கத்திக்குத்து… பெட்ரோல் ஊற்றி எரிப்பு – பள்ளி மாணவி தந்தையை திட்டம் தீட்டிக் கொன்ற இளைஞர்!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நத்தப்பட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (45). இவர் வேடசந்தூரில் ஸ்டுடியோ நடத்தி வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர் மகள் பள்ளபட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படிக்கும் ஒட்டன்சத்திரம் தாலுகா சின்னகுளிப்பட்டியைச் சேர்ந்த விமல்ராஜ் என்பவருக்கும் ஒராண்டாக பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது சிறுமியின் தந்தைக்கு தெரிய வந்ததை அடுத்து கடந்த வாரம் சின்னகுளிப்பட்டியில் உள்ள விமல்ராஜ் வீட்டிற்குச் சென்று இனிமேல் என் மகளை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கண்டித்துள்ளார். பிறகு தனது வீட்டிற்கு வந்த பாலசுப்பிரமணிமகளின் செல்போனை வாங்கி உடைத்துள்ளார்.

கொலையாளிகள்

இந்த நிலையில், பாலசுப்பிரமணி வெள்ளிக்கிழமை இரவு தனது வீட்டிற்கு அருகே பைக்குடன் உடல் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து வேடசந்தூர் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். அதில் பாலசுப்ரமணியின் மகளிடம் பழகிய விமல்ராஜை கண்டித்ததால் ஏற்பட்ட விரோதத்தால் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் முதலில் விமலை பிடித்து விசாரித்தனர். முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்த அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியிருக்கின்றனர்.

திண்டுக்கல் குளிப்பட்டி தி.மு.க நிர்வாகியான தங்கராஜின் மகன் விமல்ராஜ் பள்ளியில் பயிலும் போதே பாலசுப்பிரமணியின் மகளிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த பாலசுப்பிரமணி மகளையும், விமல்ராஜையும் கண்டித்து செல்போனிலும் பேசவிடாமல் தடுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த விமல்ராஜ் தன் நண்பன் சரவணனிடம் புலம்பியுள்ளார். சரவணன் அவர் நண்பரான அரவக்குறிச்சியைச் சேர்ந்த அஜித்திடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். பிறகு மூவரும் சேர்ந்து பாலசுப்பிரமணியைக் கொலை செய்ய திட்டம் போட்டுள்ளனர்.

வேடசந்தூர் காவல் நிலையம்

இதில் அஜித் சம்பவ இடத்துக்கு செல்போன் கொண்டு செல்லக்கூடாது என்றும், கைரேகைகள் பதியாமல் இருக்க கொலை செய்துவிட்டு பெட்ரோல் ஊற்றி எரித்தால் கைரேகை தெரியாது என்றும் பயங்கரமாக திட்டங்களை தீட்டி கொடுத்துவிட்டு தன்னால் ஸ்பாட்டுக்கு வரமுடியாது எனக் கூறிச் சென்றுள்ளார். இந்தத் திட்டத்தை கைவிடக் கூடாது என்ற எண்ணத்தில் விமல்ராஜூம், சரவணனும் சேர்ந்து வேடசந்தூர் அடுத்த நத்தபட்டியில் உள்ள பாலசுப்ரமணியின் தோட்டத்து வீட்டின் அருகே இரவு 10:30 மணியளவில் சென்று நோட்டமிட ஆரம்பித்துள்ளனர். இரவு 12 மணி அளவில் பைக்கில் வந்த பாலசுப்பிரமணியின் முகத்தில் மிளகாய்பொடியைத் தூவியுள்ளனர்.

மேலும், அவரின் பின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கியதில் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அவரின் நெற்றி, முகம் என சரமாரியாக கத்தியால் குத்தியதில் பாலசுப்பிரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

குற்றத்தை மறைப்பதற்கு தன் நண்பர் அஜித் போட்டுக் கொடுத்த திட்டத்தின்படி, பெட்ரோலை பாலசுப்பிரமணி மீதும் அவர் பைக்கிலும் ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.

அதையடுத்து மூவரையும் போலீஸார் கைது செய்தனர்.

போலீஸார்

கொலை நடந்த 24 மணி நேரத்தில் வேடசந்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் மகேஷ் தலைமையிலான தனிப்பிரிவு போலீஸார் குற்றவாளிகளான விமல்ராஜ், சரவணன், கொலைக்கு திட்டம் வகுத்துக் கொடுத்த அஜித் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.