சோனியா, ராகுல் ராஜினாமா செய்ய மறுப்பு?- உள்கட்சி தேர்தலை முன்கூட்டியே நடத்த திட்டம்

புதுடெல்லி:

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.

பஞ்சாப்பில் ஆளும்கட்சியாக இருந்த காங்கிரஸ் கடந்த முறை 77 இடங்களை கைப்பற்றி இருந்தது. இந்த தடவை 18 இடங்களை மட்டுமே பெற்று தோல்வியை சந்தித்துள்ளது.

இதுபோல உத்தரபிரதேசம் மாநிலத்திலும் காங்கிரஸ் வரலாறு காணாத தோல்வியை கண்டுள்ளது. மொத்தம் உள்ள 403 இடங்களில் 399 இடங்களுக்கு காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்தி இருந்தது. இதில் 387 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்து படுதோல்வியை அடைந்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதமும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி அடிமட்ட அளவில் ஆட்டம் கண்டு இருப்பது உறுதியாகி இருக்கிறது. இதனால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியும், சோர்வும் எழுந்துள்ளது.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் சோனியா, ராகுலுக்கு எதிராக குலாம்நபி ஆசாத் தலைமையில் 23 தலைவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். 5 மாநில சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்து இருப்பதால் அவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். நேற்று முன்தினம் டெல்லியில் கூடி அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.

காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருப்பது சோனியா விலகி விட்டு புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்று கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர்கள் சோனியா, ராகுலுக்கு தகவல்கள் அனுப்பி உள்ளனர். இதனால் காங்கிரசில் வரலாறு காணாத சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து 5 மாநில தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிப்பதற்காக டெல்லியில் இன்று மாலை 4.30 மணிக்கு காங்கிரஸ் செயற்குழு கூட்டம் சோனியா தலைமையில் நடைபெற உள்ளது. கட்சி நிர்வாகத்தில் எத்தகைய மாற்றங்கள் செய்வது பற்றி அந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

குறிப்பாக கட்சி நிர்வாகத்தை முழுமையாக மாற்றி அமைக்க வேண்டும் என்று அதிருப்தியாளர்கள் வலியுறுத்தி வருவதால் அதுபற்றி இன்றைய கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. எனவே உள்கட்சி தேர்தலை முன்கூட்டியே நடத்துவது பற்றி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இதற்கிடையே தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று பொறுப்புகளில் இருந்து சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோர் பதவிகளை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இதை காங்கிரஸ் மூத்த தலைவர்களில் பலர் மறுத்தனர்.

காங்கிரஸ் தோல்வி அடையும் போதெல்லாம் இப்படி ராஜினாமா நாடகம் உருவாகும். பிறகு அது காணாமல் போய் விடும். சோனியா, ராகுல் ஆதரவாளர்கள் அதிருப்தியாளர்களை முறியடிக்கும் வகையில் ஏதாவது செய்து எதிர்ப்புகளை முடங்க செய்வார்கள்.

அதுபோலதான் இன்று மாலையும் நடக்கும் என்று காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது. எனவே நிர்வாக பொறுப்புகளில் இருந்து சோனியா, ராகுல், பிரியங்கா விலக மாட்டார்கள் என்று தெரியவந்துள்ளது.

அப்படியே அவர்கள் விலக முன்வந்தாலும் வழக்கம்போல அதை சில மூத்த தலைவர்கள் ஏற்க மாட்டார்கள்.

எனவே காங்கிரஸ் செயற் குழு கூட்டத்தில் உள்கட்டமைப்பை சீரமைக்க புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது. மேலும் தலைவர் தேர்தலை விரைவில் நடத்த இன்றைய கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

அது மட்டுமின்றி விரைவில் குஜராத் உள்பட சில மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றியும் இன்று ஆலோசிக்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.