பள்ளி மாணவர்களுக்கு தொல்லை கொடுத்த விடுதி காப்பாளர் கைது


தமிழக மாவட்டம் திருவண்ணாமலையில், ஆரணி அருகே விடுதியில் தங்கி பயிலும் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, விடுதி காப்பாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

ஆரணி அருகே பத்தியாவரம் கிராமம் சூசைநகர் பகுதியில் அரசு நிதிஉதவி பெறும் புனித வளனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு சுமார் 2000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியின் அருகே உள்ள விடுதியில் 113 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று விடுதியில் தங்கி பயின்று வரும் 9,10,11,12-ஆம் வகுப்பு மாணவர்கள், திருவண்ணாமலை சமூக நலத்துறைக்கு இணையதளம் மூலம் புகார் ஒன்று அனுப்பியுள்ளனர்.

அந்த புகாரில் விடுதி துணை காப்பாளர் துரைப்பாண்டி (35) என்பவர் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களை ஓரின சேர்க்கையில் ஈடுபட கட்டாயப்படுத்தி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

புகாரின் பேரில், பாதிக்கப்பட்ட 8 மாணவர்களை திருவண்ணாமலையில் உள்ள குழந்தைகள் காப்பகத்திற்கு அழைத்துச் சென்று சமூகநலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் துரைப்பாண்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து சமூகநலத்துறை அதிகாரிகள் அவர் மீது சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து, விடுதிக்கு சென்ற போலீசார் துரைப்பாண்டியனிடம் விசாரித்த போது அவன் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக்கொண்டார். இந்நிலையில், துரைப்பாண்டியை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடியைச் சேர்ந்த துரைப்பாண்டி, கடந்த 2 ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விடுதி காப்பாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.