'அவர்கள் சொல்வது பொய்' – டிவி செய்தி நேரலையில் NO WAR பதாகையுடன் நுழைந்த ரஷ்ய பெண் பத்திரிகையாளர்

மாஸ்கோ: உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் நேற்று 19வது நாளை எட்டிய நிலையில், ரஷ்ய பெண் பத்திரிகையாளரின் போருக்கு எதிரான துணிச்சலான குரல் சர்வதேச கவனம் பெற்றுள்ளது.நேற்று மாலை ரஷ்யாவின் பெர்வி கானால் எனும் அரசு தொலைக்காட்சியில் வழக்கம்போல் நேரலையாக செய்தி வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது பின்னால் ஒரு பதாகையுடன் இளம் பெண் பத்திரிகையாளர் வந்து நின்றார்.

அந்தப் பதாகையில் கையால் ரஷ்ய, உக்ரைன் தேசியக் கொடிகள் வரையப்பட்டிருந்தன. கூடவே ரஷ்ய மொழியில், போர் வேண்டாம். போரை நிறுத்தங்கள். போலிப் பிரச்சாரங்களை நம்பாதீர்கள். இங்கிருந்து உங்களிடம் பொய் சொல்கிறார்கள். ரஷ்யர்களுக்கு போரின் மீது விருப்பமில்லை என்று எழுதப்பட்டிருந்தது. ஆங்கிலத்தில் NO WAR என்றும் எழுதப்பட்டிருந்தது.

மேலும் அந்தப் பெண் போர் வேண்டாம் என்று கோஷமிட்டார். இதனால் நேரலையில் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு சில விநாடிகளில் பின்னால் இருந்த ஃப்ரேம் மாற்றப்பட்டது.

யார் அந்த துணிச்சல்காரி! அந்தப் பெண் பெர்வி கானால் செய்தி ஊடகத்தின் எடிட்டர் மரினா ஓவ்ஸியானிகோவா என்ற அடையாளம் தெரிந்தது. இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய சில நிமிடங்களிலேயே மரியா ஏற்கெனவே பதிவு செய்து வைத்திருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

அதில் அவர், “உக்ரைனில் நடப்பது ஒரு குற்றம். ரஷ்யா அடக்குமுறை நாடு. இந்த அடக்குமுறை, அத்துமீறலுக்கு ஒரே ஒரு நபர் தான் காரணம். அவர் பெயர் விளாடிமிர் புதின். எனது தந்தை ஒரு உக்ரேனியர், என் தாய் ஒரு ரஷ்யப் பெண். நான் இத்தனை நாட்களாக ரஷ்ய அரசு ஊடகத்தில் வேலை செய்ததற்கு மிகவும் வருந்துகிறேன். கடந்த சில ஆண்டுகளாக பார்வி கானாலில் பணியாற்றி க்ரெம்ளின் மாளிகை (ரஷ்ய அதிபரின் அதிகாரபூர்வ மாளிகை) கூறிய பொய்ப் பிரச்சாரங்களை எல்லாம் பரப்பினேன் என நினைக்கும்போது வெட்கப்படுகிறேன். ரஷ்ய மக்கள் ஜாம்பி மனநிலைக்கு வர நான் காரணமாக இருந்ததற்காக வெட்கப்படுகிறேன்.

இப்போது ஒட்டுமொத்த உலகம் ரஷ்யாவை ஒதுக்கிவைத்து தனது முதுகைக்காட்டியுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளாவது ரஷ்ய தலைமுறையினர் இந்த சகோதர யுத்தத்தின் கொடூர கரையைத் துடைக்க முடியாமல் வாடுவார்கள். ரஷ்யர்களாகிய நாங்கள் புத்திசாதுர்யத்துடன் யோசிக்கிறோம். இந்த முட்டாள்தனத்தைக் கொண்டு வரும் சக்தி நம்மிடம் தான் உள்ளது. போருக்கு எதிரான போராட்டத்தில் இணையுங்கள். அஞ்ச வேண்டாம். அவர்களால் நம் அனைவரையும் கைது செய்ய இயலாது” என்று கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.