மொத்தப் பேரும் "கெத்து" வெற்றி.. 3 பேருக்கு மட்டும் பட்டை நாமம்.. உ.பி. பாஜகவில் களேபரம்!

உத்தரப் பிரதேசத்தில் அமோகமாக வெற்றி பெற்ற பாஜகவில், 3 வேட்பாளர்கள் மட்டும் டெபாசிட்டைப் பறி கொடுத்து மோசமாக தோல்வியைத் தழுவியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தலில்
பாஜக
அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இந்த வெற்றியை பாஜகவினர் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். ஆனால் 3 வேட்பாளர்கள் மட்டும் இன்னும் சோகத்திலிருந்து மீளவில்லை. அந்த 3 பேரும் டெபாசிட்டைப் பறி கொடுத்து பரிதாபத் தோல்வியைத் தழுவியுள்ளனர்.

பிரதாப்கர் மாவட்டம் குன்டா, ஜான்பூர் மாவட்டம் மல்ஹானி, பலியா மாவட்டம் ரசரா தொகுதிகளில் போட்டியிட்ட
பாஜக வேட்பாளர்கள்
படு மோசமாக தோல்வியுற்றுள்ளனர். குன்டா தொகுதியில் பாஜக சார்பில் சிந்துஜா மிஸ்ரா போட்டியிட்டார். இவருக்கு வெறும் 16,445 வாக்குகளே கிடைத்துள்ளன. இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜன்சத்தா தள் லோக்தந்திரிக் கட்சியின் வேட்பாளர் ராஜா பைய்யா 99,612 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2வது இடம் சமாஜ்வாதிக் கட்சிக்குக் கிடைத்தது.

ராஜா பைய்யா உ.பி அரசியலில் மிக முக்கியமானவர், வலுவான அரசியல் தலைவர். தனித்த செல்வாக்கு கொண்டவர். அவரை வெல்வது மிக மிக கடினம். இருந்தாலும் பாஜக இந்தத் தொகுதியில் தீவிரப் பிரசாரம் மேற்கொள்ளவே செய்தது. ஆனாலும் ராஜா பைய்யாவின் செல்வாக்குக்கு முன்பு பாஜக இங்கு பெரும் அடி வாங்கி தோல்வியுற்றுள்ளது.

மல்ஹானி தொகுதியில் பாஜக வேட்பாளர் கிருஷ்ண பிரதாப் சிங்குக்கு 18,319 வாக்குகளே கிடைத்தன. இத்தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் லக்கி யாதவ் 42.57 சதவீத வாக்ககுகளைப் பெற்று ஐக்கிய ஜனதாதளம் வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றார்.

ரஸரா தொகுதியில் பகுஜன் மசாஜ் கட்சியின் உமா சஹ்கர் சிங் வெற்றி பெற்றார். இந்த இடத்தில் மட்டுமே பகுஜன் சமாஜ் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பப்பன், 24,235 வாக்குகள் மட்டுமே பெற்று வென்றார்.

உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கு 255 தொகுதிகளில் வெற்றி கிடைத்த நிலையில் 3 பேர் மட்டும் பரிதாபமான தோல்வியைத் தழுவியுள்ளது கட்சியை அதிர வைத்துள்ளது. ஆனால் அதில் ஒரு ஆறுதல் என்னவென்றால் இந்த 3 தொகுதிகளில் எதிலுமே காங்கிரஸ் வெல்லவில்லை என்பதே. உத்தரப் பிரதேசத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றும் கூட 3 தொகுதிகளில் மட்டும் ஏன் டெபாசிட் போகும் அளவுக்கு மோசமான தோல்வி கிடைத்தது என்பது குறித்து தற்போது பாஜக தலைவர்கள் ஆய்வு செய்து வருகின்றனராம். ஆனால் இந்தத் தொகுதிகளில் சாதி வாக்குகள் மிக முக்கிய அம்சமாக திகழ்ந்ததே தோல்விக்கு முக்கியக் காரணமாக இருக்கும் என்றும் உள்ளூர் தலைவர்கள் தெரிவிக்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.