வேலூர்: 9-ம் வகுப்பு மாணவனுக்கு பிளேடு வெட்டு; 14 தையல்! -சக மாணவன் வெறிச்செயல்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள பரதராமி பூஜாரி வலசை கிராமத்திலிருக்கும் அரசு உயர்நிலைப் பள்ளியில், வடக்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒன்பதாம் வகுப்பு படித்துவருகிறான். நேற்றைய தினம் சக மாணவன் ஒருவனுடன் அந்தச் சிறுவனுக்குத் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற அந்த சிறுவன் வகுப்பறையில் புத்தகப் பையை வைத்துவிட்டு பென்சில் வாங்குவதற்காக அருகிலுள்ள கடைக்குச் சென்றுள்ளான். அப்போது, நேற்று தகராறில் ஈடுபட்ட அந்த மாணவன் கையில் மறைத்து வைத்திருந்த பிளேடால் சிறுவனை சரமாரியாக தாக்கியுள்ளான். பிளேடால் கிழித்ததில் சிறுவனின் இடதுப் பக்க மார்பு, வலது கை, முதுகுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. சீருடை முழுவதும் ரத்தக்கறைப் படியவே வலி தாங்க முடியாமல் சிறுவன் கீழே விழுந்து கதறி அழுதான்.

காயமடைந்த மாணவன்

ஆசிரியர்கள் அங்கு ஓடி வந்து, சிறுவனை மீட்டு 108 ஆம்புலன்ஸை வரவழைத்து குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெட்டப்பட்ட சிறுவனுக்கு 14 தையல்கள் போடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் குறித்து பரதராமி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி, மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) மோகன், குடியாத்தம் சப் கலெக்டர் தனஞ்செயன், டி.எஸ்.பி ராமமூர்த்தி ஆகியோரும் அந்தப் பள்ளிக்குச் சென்று மாணவர்களிடம் நல்லொழுக்கம் குறித்து அறிவுரை வழங்கினர். இது குறித்து, முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமியிடம் கேட்டபோது, “காயமடைந்த மாணவன் சிகிச்சைக்குப் பின்பு நலமாக இருக்கிறார். மாவட்ட கல்வி அலுவலர் துறை ரீதியாக விசாரணை நடத்திவருகிறார். மோதல் போக்கைக் கைவிட மாணவர்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும்’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.