பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களின் தலையீடுக்கு முற்றுப்புள்ளி: மக்களவையில் சோனியா வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘இந்தியாவின் ஜனநாயகத்தை ஹேக் செய்வதற்காக உலகளாவிய சமூக ஊடக நிறுவனங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதால், அவற்றின் தலையீடுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்,’ என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மக்களவையில் வலியுறுத்தி இருக்கிறார். மக்களவையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று பேசியதாவது: அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அவர்களது பினாமிகளால் அரசியல் கட்டுக்கதைகளை வடிவமைப்பதற்கு பேஸ்புக், டிவிட்டர் போன்ற உலகளாவிய சமூக ஊடக நிறுவனங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றது. நமது ஜனநாயகத்தை ஹேக் செய்வதற்காக சமூக வலைதளங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படும் அபாயம் அதிகரித்து வருகின்றது.  மற்ற அரசியல் கட்சிகளுடன் ஒப்பிடும்போது தேர்தல் விளம்பரங்களுக்காக பாஜ.வுக்கு மலிவான சலுகைகளை பேஸ்புக் வழங்கியதாக அல்ஜசீரா, தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்ட்டிக் ஆகியவை அறிக்கை வெளியிட்டுள்ளன.இந்த அறிக்கைகள் பெரிய நிறுவனங்கள், ஆளும் கட்சிகள், உலகளாவிய சமூக வலைதள நிறுவனவங்களுக்கு இடையே வளர்ந்து வரும் தொடர்பை காட்டுகின்றன. உணர்ச்சிபூர்வமான தவறான தகவல்களால் இளைஞர்கள்,  முதியவர்களின் மனங்கள் வெறுப்பால் நிரப்பப்படுகின்றன. பேஸ்புக் போன்ற அதிகாரம் பெற்ற பிரதிநிதியாக செயல்படும் விளம்பர நிறுவனங்கள், இதன் மூலமாக லாபம் ஈட்டுகின்றன. ஆளும் கட்சியோடு இணைந்து சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் பேஸ்புக்கின் செயல்பாடு ஜனநாயகத்துக்கு ஆபத்தானது. உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் தேர்தல் அரசியலில் பேஸ்புக் போன்ற சமூக வலைதள நிறுவனங்களின் தலையீடு, செல்வாக்கை முடிவுக்கு கொண்டு வருமாறு அரசை கேட்டுக் கொள்கிறேன். இது கட்சிகளுக்கு, அரசியலுக்கு அப்பாற்பட்டது. ஆட்சியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும், நாம் நமது ஜனநாயகத்தையும், சமூக நல்லிணக்கத்தையும் பாதுகாப்பது அவசியமாகும். இவ்வாறு அவர் பேசினார்.ராகுல் காந்தி அச்சம்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேர்தலின்போது வாக்காளர்களை சென்றடைய பாஜ.விற்கு சமூக ஊடக நிறுவனங்கள் உதவியதாக வெளிவந்த செய்தியை தனது டிவிட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் தனது பதிவில், ‘பேஸ்புக் போன்றவை ஜனநாயகத்துக்கு மிகவும் தீங்கானவை,’ என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.