ஆயிரக்கணக்கான மக்கள் அடைக்கலம் புகுந்த தியேட்டர் மீது ரஷ்யா தாக்குதல்| Dinamalar

கீவ்: உக்ரைனில் 22வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, மரியபோல் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் தஞ்சம் புகுந்திருந்த தியேட்டர் மீது தாக்குதல் நடத்தியது. அதில், எத்தனை பேர் உயிரிழந்தனர், காயமடைந்தனர் என்பது குறித்து தகவல் இல்லை.

22வது நாளாக உக்ரைனில் பல நகரங்கள் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்கு புகலிடம் தேடி சென்றுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்த நிலையில், மரியபோல் நகரில் 2,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த நகரில், ரஷ்யாவின் தாக்குதலுக்கு பயந்தும், வீடுகளை இழந்தோரும் தியேட்டர் ஒன்றில் தங்கியிருந்தனர். இந்த தியேட்டர் மீது ரஷ்ய விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதில், அந்த தியேட்டர் நொறுங்கியது. இதில் எத்தனை பேர் உயிரிழந்தனர், காயமடைந்தனர் என்பது குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை. அங்கு தாக்குதல் நடந்துள்ளதாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகமும் தெரிவித்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளான தியேட்டர் கட்டடத்தின் முன்பக்கத்தில் ரஷ்ய மொழியில் குழந்தைகள் என ரஷ்ய மொழியில் எழுதப்பட்டிருந்தது.

ரஷ்யா மறுப்பு

அதேநேரத்தில் இந்த தாக்குதலை நாங்கள் நடத்தவில்லை என தெரிவித்துள்ள ரஷ்யா, பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்தவில்லை எனவும் கூறியுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.