தி.மலையில் 2 ஆண்டுக்கு பிறகு நடந்த பவுர்ணமி கிரிவலம்: பக்தர்கள் உற்சாக வழிபாடு

திருவண்ணாமலை: கரோனா பெருந்தொற்று பொது முடக்கத்திற்கு பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு கழித்து, இன்று (வியாழக்கிழமை) திருவண்ணமலையில் பவுர்ணமி கிரிவலம் சென்று பக்தர்கள் உற்சாகமாக அண்ணாமலையாரை வழிபட்டனர்.

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும், திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் பிரசித்தி பெற்றது. கரோனா தொற்று பரவல் மற்றும் பொதுமுடக்கம் காரணமாக, 2020-ம் ஆண்டு பங்குனி மாதம், பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டது. தொற்று பரவல் குறைந்த போதும், கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பவுர்ணமி கிரிவலம் செல்லத் தடை தொடர்ந்தது.

இதற்கிடையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு எதிரொலியாக, அண்ணாமலையார் கோயிலில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற கார்த்திகைத் தீபத் திருவிழா மற்றும் பவுர்ணமி நாளில் கிரிவலம் செல்ல அனுமதி கிடைத்தது. அதற்கு பின்னர் மீண்டும் கிரிவலம் செல்லத் தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், தடையை மீறி, பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர்.

இந்நிலையில், பங்குனி மாத பவுர்ணமி கிரிவலத்துக்கு 2 ஆண்டுகளுக்கு பிறகு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. இதையடுத்து அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் முன்பு விளக்கு மற்றும் சூடம் ஏற்றி கிரிவலத்தை பக்தர்கள் இன்று (வியாழக்கிழமை) தொடங்கினர். காலை முதல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மாலை 5 மணிக்கு பிறகு பக்தர்களின் வருகை அதிகரித்தது. உள்ளூர் பக்தர்கள், வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில பக்தர்கள் கிரிவலம் சென்றனர். 14 கி.மீ., தொலைவு உள்ள மலையை வலம் வந்து வழிபட்டனர். கோயிலுக்கு சென்று மூலவர் மற்றும் அம்மனை தரிசனம் செய்தனர்.

இது குறித்து பக்தர்கள் கூறும்போது, “கிரிவலம் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு பிறகு கிரவலம் செல்கிறோம். மலையே மகேசன் என போற்றப்படும் அண்ணாமலையாரை வழிபடுவது என்பது மனதுக்கு நிறைவை கொடுத்துள்ளது. உலகை அச்சுறுத்திய கரோனா தொற்று ஒழிந்து, உடல் நலத்துடன் மக்கள் அமைதியாக வாழ இறைவனை வேண்டிக் கொண்டுள்ளோம்” என்றனர். போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படாததால், கிரிவலம் முடிந்து பக்தர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.