புதிய என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்: யார் இந்த எஸ்.ஐ இசக்கி ராஜா?

சென்னையில் ரவுடிகள், தாதாக்கள், கட்டப்பஞ்சாயத்து புள்ளிகளை ஒடுக்க, கடந்த ஆண்டு இறுதியில் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை தலைமையில் காவல்துறை சிறப்புப் படை அமைக்கப்பட்டது. அதனால், பலரும் தலைநகர் பகுதியில் ரவுடிகளின் என்கவுண்ட்டர் நடக்க வாய்ப்புள்ளது என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அதற்கு நேர் எதிரான திசையில் தெற்கே திருநெல்வேலி மாவட்டத்தில் என்கவுண்ட்டர் நடைபெற்றது. இந்த என்கவுண்ட்டர் மூலம் புதிய என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக இசக்கி ராஜா பெயர் மீண்டும் டாக் ஆகியிருக்கிறது. இதனால், யார் இந்த எச்.ஐ இசக்கி ராஜா என்று பலரும் கேட்டு வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே பிரபல ரவுடி நீராவி முருகனை மார்ச் 16ம் தேதி திண்டுக்கல் போலீசார் கைதுசெய்ய சென்றபோது போலீசாரை தாக்கியதால் எஸ்.ஐ. இசக்கி ராஜா துப்பாக்கியால் சுட்டுள்ளார். என்கவுண்ட்டரில் பலியான ரவுடி நீராவி முருகன் மீது 3 கொலை வழக்கு உள்பட 60க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரவுடி நீராவி முருகன் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து தென் மண்டல போலீஸ் ஐ.ஜி அன்பு, போலீசார் தற்காப்புக்காகவே நீராவி முருகனை துப்பாக்கியால் சுட்டதாக தெரிவித்தார்.

பிரபல ரவுடி நீராவி முருகனை துப்பாக்கியால் சுட்ட புதிய என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் எஸ்.ஐ. இசக்கி ராஜா யார் என்று பலரும் இணையத்தில் தேடி வருகின்றனர்.

எஸ்.ஐ. இசக்கி ராஜா, ஏற்கெனவே ஊடகங்களில் பேசப்பட்ட பெயர்தான். ரவுடிகளுக்கு ஆடியோ வெளியிட்டு எச்சரிக்கை விடுத்தவர். கிக் பாக்ஸிங்கில் தங்கம் வென்றவர் என சினிமா போலீஸ்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கும் ரியல் போலீசாக இருக்கிறார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றியவா் இசக்கி ராஜா. இவா் 2018ஆம் ஆண்டு ரவுடிகளை எச்சரித்து வெளியிட்ட ஆடியோ அப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த ஆடியோவில், “என்ன நினைச்சிட்டு இருக்கீங்க, காசு கொடுத்து தான் வெட்டத் தொியும். சுயமா எதுவும் செய்ய முடியாது. உங்களை எல்லாம் காசு கொடுத்து தீவிரவாதி மாதிாி வச்சிருக்காங்க. மூளைச்சலவை செஞ்சி சாராயம் வாங்கி கொடுத்து உங்களை எல்லாம் தீவிரவாதியாக்கி வச்சிருக்காங்க. இந்த அப்துல் ரகீம் கிட்ட சொல்லு. நான் கோவில் பட்டில இருக்குர வரைக்கும் கூலிப்படைய வச்சி அருவா புடிக்கணும்னு நினைச்சா இசக்கி ராஜா என்ன பண்ணுவேன்னு தொியாது. எங்க இருந்தாலும் தூக்குவேன். யாராவது குரூப் ஆரம்பிச்சா தொலைச்சிருவேன்.” என்று எஸ்.ஐ இசக்கி ராஜா கூறியது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.

எஸ்.ஐ இசக்கி ராஜா கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தை தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி தாலுகா காவல் நிலையம், ஆகியவற்றில் உதவி ஆய்வாளராக பணியாற்றி உள்ளார். இதையடுத்து, திண்டுக்கல் மாவட்ட தனிப்பிரிவிலும் இருந்தார்.

இசக்கி ராஜா காவல்துறையில் மட்டுமல்ல கிக்பாக்ஸிங் விளையாட்டிலும் தேசிய அளவில் தங்கம் வென்றுள்ளார். ஹைதராபாத்தில் நடைபெற்ற தேசிய சீனியர் கிக்பாக்ஸிங் போட்டியில் தமிழக அணி சார்பாக கலந்து கொண்ட இசக்கி ராஜா, 85 முதல் 90 கிலோ பிரிவு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். சாம்பியன் ஆப் சாம்பியன் போட்டியில் கலந்துகொண்டு சாம்பியன் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

ரவுடி நீராவி முருகனை என்கவுண்டர் செய்ததன் மூலம் தமிழக காவல்துறையில் புதிய என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக வெளிச்சத்திற்கு வந்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் நடைபெற்ற கொள்ளை தொடர்பாக ரவுடி நீராவி முருகனை கைது செய்ய முயன்றபோதுதான், இசக்கி ராஜா ரவுடி நீராவி முருகனை என்கவுண்ட்டர் செய்துள்ளார்.

ரவுடிகளை ஒழிக்க போலீசார் நடத்தும் என்கவுண்ட்டர்கள் ஒரு பக்கம் ஆதரவு பெற்றாலும், இவை மனித உரிமை மீறல் என்று கண்டனங்களும் எழுந்துள்ளன.

குறைந்தபட்சம் 5 மனித உரிமை மீறல் வழக்குகளை எதிர்கொண்டுள்ள சப்-இன்ஸ்பெக்டர் இ.சக்கிராஜாவை ரவுடி நீராவி முருகன் என்கவுண்ட்டருக்கு பிறகு, தென் மண்டல ஐ.ஜி அன்பு, அவரை திண்டுக்கல் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்துள்ளார்.

இசக்கி ராஜா சர்ச்சைகளுக்கு பெயர் போனவர், அவர், ஏற்கெனவே, வீட்டு காவலர் அங்குராஜ் சூர்யா, வேல்முருகன் (பத்திரிகை நிருபர்கள்), பழனிக்குமார் (பொறியாளர்) மற்றும் மாமன்னர் புலித்தேவர் மக்கள் நல இயக்கத்தின் செல்வத்தேவர் ஆகிய 5 பேர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில், இசக்கி ராஜா மீது மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் குறைந்தது ஐந்து வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இசக்கி ராஜா தங்களை சித்திரவதை செய்ததாக குற்றம் சாட்டியவர்களிடமிருந்து 6 வழக்குகளில் அவருக்கு எதிராக நீதிமன்ற விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. மாடசாமி என்ற வரலாற்றுத் தாளாளருடன் அவர் பேசியதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல் சமூக ஊடகங்களில் வைரலானபோது சர்ச்சையானது.

கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு முன்பு, திருநெல்வேலி நீதிமன்றத்தின் முன்பு, இசக்கி ராஜா சுடுவதற்கு துப்பாக்கி எடுத்தார் என்று வழக்கறிஞர் இசக்கிபாண்டி அளித்த புகாரின் பேரில், பாளையங்கோட்டை போலீஸார் இசக்கி ராஜா மீது வழக்குப் பதிவு செய்தனர். கோவில்பட்டி சப் டிவிஷனில் பணியாற்றிய இசக்கிராஜா, தற்போது தூத்துக்குடி தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வந்தார். இந்த என்கவுண்ட்டருக்கு பிறகு, அவர் திண்டுக்கல் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.