உக்ரைன் போரால் பல்வேறு பொருளாதாரத் தடைகளுக்கு ஆளாகியிருக்கும் ரஷ்யாவிடமிருந்து சீனா விலகி நிற்கிறது.
எல்லையற்ற நட்பை கடந்தமாதம்தான் இருநாடுகளும் கூட்டாக அறிவித்தன. ஆனால் தற்போது உலகம் முழுவதும் ரஷ்யாவின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் சூழலில் ரஷ்யா சீனாவை சார்ந்து இருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஆனால் சீனா ஓரளவுக்குதான் ரஷ்யாவுக்கு உதவ முடியும் என்று கூறியுள்ளது. உக்ரைன் பிரச்சினையில் சீனா தலையிட விரும்பவில்லை என்றும் ரஷ்யாவுக்கு ஆதரவளிப்பதால் சீனா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுவதை விரும்பவில்லை என்றும் சீன வெளியுறவு அமைச்சர் ஸ்பானிய அமைச்சருடன் நடத்திய தொலைபேசி உரையாடலில் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுடன் நட்பாக இருக்கவும் அதே நேரத்தில் அமெரிக்காவை பகைத்துக் கொள்ளாமல் இருக்கவும் சீனா சமன் படுத்த முயற்சித்து வருவதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ரஷ்யாவின் கரன்சியான ரூபிள் டாலருக்கும் யூரோவுக்கும் நிகரான மதிப்பில் மேலும் சரிந்துள்ளது. அது 20 சதவீதம் மதிப்பை இழந்த நிலையில் சீனாவின் யுவான் கரன்சிக்கு நிகராகவும் ரூபிள் மதிப்பு சரிந்துவிட்டது. இதனை சீனா தடுக்க முயற்சிக்கவில்லை.