அமைதியின்மைக்கு சித்தராமையா காரணம்! மாஜி முதல்வர் குமாரசாமி ஆவேசம்| Dinamalar

கோலார் : ”கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள அமைதியில்லாத சூழ்நிலை மற்றும் அனைத்து அசம்பாவிதங்களுக்கும் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவே மூல காரணம்,” என ம.ஜ.த., முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றம்சாட்டினார்.
3கோலாரில் அவர் நேற்று கூறியதாவது:புனித தலங்களில், ஒரு சமுதாய மக்களுக்கு வியாபாரம் செய்ய வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஹிஜாப், காவி சால்வை என கூறி, பள்ளி, கல்லுாரிகளில் மோதல் உருவாக்கப்பட்டது. இது போன்ற சூழ்நிலைக்கு, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் காங்கிரசின் சித்தராமையாவே காரணம்.கூட்டணி அரசு கவிழ காரணமாக இருந்த அவர், பா.ஜ., அரசு அமைய ஒத்துழைப்பு கொடுத்தார். மாநில மக்களின் நலனுக்காக, எங்களுக்கு விருப்பமில்லை என்றாலும், காங்கிரசுடன் சேர்ந்து அரசு அமைத்தோம். இரண்டு தேசிய கட்சிகளுக்கு எதிராக, போராட்டம் நடத்திய நாங்கள், காங்கிரசுடன் கைகோர்த்தோம்.காங்கிரசுக்கு, 2004லிலும் நாங்கள் ஆதரவளித்தோம். அப்போது எங்களை அவமதித்து இம்சித்தனர். எனவே கட்டாயத்தின் காரணமாக, வேறு தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது. இதற்கும் சித்தராமையாவே காரணம்.’பா.ஜ.,வின் பி – டீம்’ கடந்த சட்டசபை தேர்தலின் போது, ம.ஜ.த.,வை, ‘பா.ஜ.,வின் பி – டீம்’ என அவப்பிரசாரம் செய்தனர். எனவே பா.ஜ., 105 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. இல்லையென்றால் அக்கட்சியினருக்கு, 75 தொகுதிகளுக்குள் கிடைத்திருக்கும்.இப்போது அதே புண்ணியவான், மாநிலத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளார். ம.ஜ.த., – பா.ஜ.,வுடன் அட்ஜெஸ்ட்மென்ட் செய்து கொண்டதாக பிரசாரம் செய்கிறார். அவர் பா.ஜ.,வுடன் என்னென்ன உள் ஒப்பந்தங்கள் வைத்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும்.அவரது ஆட்டம், இனி நடக்காது. அவரது தலையில் சரக்கில்லை. இதனால் ம.ஜ.த., பெயரை கூறுகிறார்.மாநில மக்கள் அமைதியாக, நிம்மதியாக வாழ்வது பா.ஜ., மற்றும் காங்கிரசுக்கு படிக்கவில்லை. அவர்களுக்கு அதிகாரம் மட்டுமே வேண்டும். அதற்காக என்ன செய்யவும் தயங்கமாட்டார்கள். அவை, ஒரே நாணயத்தின் இரண்டு முகங்கள்.எத்தினஹொளே திட்டத்துக்கு, 2014ல் சிக்கபல்லாபூரில் அடிக்கல் நாட்டப்பட்டது. ஒரே ஆண்டில் தண்ணீர் கொடுப்பதாக பொய் கூறினர். அன்றைய தினம் நான், கோலாரில் தான் இருந்தேன். ஒரு ஆண்டில் தண்ணீர் கொண்டு வந்தால், என் தலையை மொட்டை அடித்துக்கொள்வதாக சவால் விடுத்தேன். இது, 2022ம் ஆண்டு. இவர்கள் தண்ணீர் கொடுக்க, இன்னும் எத்தனை ஆண்டுகள் வேண்டும்?ஆரம்பத்தில் 8,000 கோடி ரூபாய் செலவில் திட்டத்தை துவங்கினர். இப்போது 24 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இன்னும் எத்தனை கோடி அதிகரிக்குமோ தெரியாது. தேவனதுர்கா அருகில், 10 டி.எம்.சி., தண்ணீர் சேகரிப்பு திறன் கொண்ட அணை கட்டுவதாக கூறினர். அதன்பின் அது முடியாது; பைரகொண்டலு அருகில் 5.6 டி.எம்.சி., தண்ணீர் சேகரிப்பு திறன் கொண்ட அணை கட்டுவதாக கூறினர்.

பகீரதர் ரமேஷ்குமார் தற்போது 2 டி.எம்.சி.,க்கு வந்து நின்றுள்ளது. இவர்கள் சிக்கபல்லாபூர்,- கோலாருக்கு தலா 5 டி.எம்.சி., தண்ணீர் கொடுப்பரா? கோலாரில் ஒரு பகீரதர் ரமேஷ்குமார் இருக்கிறார். கே.சி.வேலி திட்டத்தின் மூலம், தண்ணீர் கொண்டு வந்ததாக கூறிக்கொள்கிறார். அந்த தண்ணீர் எப்படிப்பட்டது, அதன் பின் விளைவுகள் என்ன என்பது, இன்னும் சில நாட்களில் மக்களுக்கு தெரியும்.

இவர், மக்களின் ஆரோக்கியம் மற்றும் உயிருடன் விளையாடுகிறார்.மேகதாது திட்டம் உறங்குகிறது. பத்ரா மேலணை திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்க முற்பட்டனர். பணமில்லாமல் மவுனமாகினர். 50 ஆண்டுகளாகியும், கிருஷ்ணா மேலணை திட்டம் முடியவில்லை. என் தந்தை தேவகவுடா முதல்வராக இருந்ததன் பலனாக, முதலாவது, இரண்டாவது கட்ட பணிகள் முடிந்து, மக்களுக்கு தண்ணீர் கிடைக்கிறது. இல்லையென்றால் இந்த திட்டமும் செத்து போயிருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.