எரிபொருள் விலை அதிகரிப்பு – நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கண்டனம்

பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்புக்கு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இரண்டுநாள் விடுமுறைக்கு பிறகு, இன்று காலை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடியதும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்கள் மூலம் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மாநிலங்களவையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயர்வு மற்றும் இன்று நடைபெறும் வேலைநிறுத்தம் ஆகியவை குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அளித்த ஒத்திவைப்பு தீர்மானத்தை மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு நிராகரித்தார். இதனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.
image
இதற்கிடையே, வேறு பல விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்தவும் கோரிக்கை எழுந்தது. அவை அலுவல்களை நடத்த முடியாத அளவு எதிர்ப்பு அதிகரித்ததால், மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், நிதி மசோதா மற்றும் நிதிஒதுக்கீடு மசோதா உள்ளிட்ட பட்ஜெட் தொடர்பான மசோதாக்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
மக்களவையிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. கேள்வி நேரத்துக்கு பின்னர், எரிபொருள் விலை உயர்வு குறித்து பேசலாம் என சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள், அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. பெட்ரோல், டீசல் விலையை உடனே குறைக்க வேண்டும் என திமுக எம்.பி. டி ஆர் பாலு வலியுறுத்தினார்.
பின்னர் குற்றவியல் நடைமுறை (அடையாளம்) மசோதா, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டபோது, எதிர்க்கட்சிகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எதிர்ப்பு தீர்மானங்கள் மீது முழு வாக்கெடுப்பு வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியதால், சபாநாயகர் ஓம் பிர்லா வாக்கெடுப்புக்கு உத்தரவிட்டார். வாக்கெடுப்பில் எதிர்கட்சிகளின் தீர்மானங்கள் தோற்கடிக்கப்பட்ட நிலையில், குற்றவியல் நடைமுறை (அடையாளம்) மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
அடுத்த அலுவலாக, பழங்குடிகள் பட்டியலில் சில மாநிலங்களில் திருத்தம் செய்வதற்கான மசோதா மக்களவையில் விவாதிக்கப்பட்டது. ஒவ்வொரு மாநில பட்டியலாக விவாதிப்பதை விட, அனைத்து மாநிலங்களின் பட்டியலையும் ஒரே மசோதாவாக விவாதிக்கப்பட்டு திருத்தங்கள் ஒன்றாக செய்யப்பட வேண்டும் என திமுக சார்பாக ஆ. ராசா வலியுறுத்தினார்.
image
மாநிலங்களவையில் நிதி மசோதா மற்றும் நிதிஒதுக்கீடு மசோதா மீதான விவாதம் நடைபெற்றபோது, காங்கிரஸ் கட்சி சார்பாக பேசிய ப. சிதம்பரம், பல திருத்தங்களை முன்மொழிந்தார். புதிய வருமான வரி சட்டத்தை கொண்டு வர வேண்டும் என சிதம்பரம் வலியுறுத்தினார். முன்னாள் மத்திய நிதி அமைச்சரான சிதம்பரம், பட்ஜெட் விவாதத்தில் பங்கேற்று அரசுக்கு ஆலோசனைகளை அளித்தார். திருத்தத்துக்கு மேல் திருத்தம் என்று வருமான வரி சட்டம் மிகவும் குழப்பத்தை விளைவிக்கக்கூடிய சிக்கலான சட்டமாக மாற்றப்பட்டுள்ளது. ஆகவே, இந்த சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும் என சிதம்பரம் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.