பாரத் பந்த் முதல் நாள் | தமிழகத்தில் தாக்கம் எப்படி? – கள நிலவரம் காட்டும் புகைப்படங்கள்

சென்னை: மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுள்ள இரண்டு நாள் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தால், முதல் நாளான இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பேருந்து மற்றும் வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்ப்டடன. தொழிற்சங்கங்கள் சார்பில் பல்வேறு இடங்களில் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றன.

மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி நிலுவையை உடனே வழங்க வேண்டும்; மத்திய அரசு அலுவலகங்களில் 8.75 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்க கூடாது என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் இன்றும், நாளையும் (மார்ச் 28, 29) நாடுதழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் மத்திய, மாநில அரசு ஊழியர்களின் அகில இந்திய அமைப்புகள், காப்பீட்டு நிறுவனங்கள், வங்கி உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளன. இன்றைய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தின் தாக்கத்தைச் சொல்லும் தமிழக கள நிலவரப் படங்கள் இவை…

பொது வேலைநிறுத்தப் போராட்டத்தின் காரணமாக வாடிக்கையாளர்கள் யாருமின்றி வெறிச்சோடி காணப்பட்ட திண்டுக்கல் கனரா வங்கியின் பிரதான கிளை | படம்: ஜி.கார்த்திகேயன்

மத்திய அரசைக் கண்டித்து திண்டுக்கல் சப்-கலெக்டர் அலுவலக சாலையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். | படம்: ஜி.கார்த்திகேயன்

மத்திய அரசைக் கண்டித்து நடந்துவரும் இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தின் காரணமாக கோவை உக்கடம் பேருந்து பணிமனையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள அரசுப் பேருந்துகள் | படங்கள்: மனோகரன்

குறைவான எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்பட்டதால் பேருந்திற்காக கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் காத்திருந்த பொதுமக்கள் | படம்: மனோகரன்

பேருந்துகள் இயக்கப்படாததால் ஈரோடு மத்தியப் பேருந்து நிலையத்தில் காத்திருந்த பொதுமக்கள் | படம்: எம்.கோவர்தன்

பொது வேலை நிறுத்தப் போராட்டத்தின் காரணமாக வெறிச்சோடிக் காணப்பட்ட அடையாறு காந்திநகர் பேருந்து நிலையம் | படம்: கே.வி.சீனிவாசன்

எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னை சைதாப்பேட்டை பேருந்து நிலையம் வேலைநிறுத்தப் போராட்டத்தின் காரணமாக வெறிச்சோடி காணப்பட்டது | படம்: கே.வி.சீனிவாசன்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மத்திய அரசைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் | படம்: எம்.பெரியசாமி

கிருஷ்ணகிரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் | படம்: என்.பாஸ்கரன்

பொது வேலைநிறுத்தப் போராட்டத்தின் காரணமாக அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால் கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட தனியார் பேருந்துகளில் பொதுமக்கள் பயணித்தனர் | படம்: எம்.பெரியசாமி

மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து திருச்சியில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் வெறிச்சோடி காணப்பட்டது | படம்: எம்.ஸ்ரீநாத்

14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் திருச்சி ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினரை போலீசார் தடுத்து நிறுத்தினர் | படம்: எம்.ஸ்ரீ நாத்

ஈரோடு காந்திஜி சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் | படம்: எம்.கோவர்தன்

மத்திய அரசைக் கண்டித்து மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் | படம்: ஜி.மூர்த்தி

பாரத் பந்த @ தமிழகம் | கவனம் ஈர்த்த புகைப்படங்கள்:

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை பேருந்து நிறுத்தம் | படம்: ஆர்.ரகு
சென்னை – சென்ட்ரல் அருகே மாட்டுவண்டி பயணம் | படம்: ஆர்.ரகு
ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் | படம்: ஆர்.ரகு
சென்னை பல்லவன் பணிமனை | படம்: ஆர்.ரகு
வேலூர் அண்ணா சாலையில் மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் | படம்: வி.எம்.மணிநாதன்
வேலூர் கொணவட்டம் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்துகள் | படம்: வி.எம்.மணிநாதன்
வேலூர் தலைமை தபால் நிலையத்தில் ஊழியர்கள் பணிக்கு வராததால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. | படம்: வி.எம்.மணிநாதன்

தமிழகத்தில் 50 லட்சம் பேர் உட்பட நாடு முழுவதும் 25 கோடி பேர் வேலைநிறுத்தப் போராட்டத் தில் பங்கேற்பர் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் ஆளும் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தன. எனினும், அரசு ஊழியர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்க மத்திய, மாநில அரசுகள் தடை விதித்தது. தடையை மீறி வேலைநிறுத்தம் செய்தால், பணிக்கு வராத நாட்களுக்கு சம்பளம், படி கிடையாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. தனியார் பேருந்துகள் முழுமையாக இயங்கும் என்று பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது. மெட்ரோ ரயில் உட்பட அனைத்து ரயில்களும் வழக்கம்போல இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பேருந்துகள் மிக குறைவான எண்ணிக்கையிலேயே இயக்கப்பட்டன. இதனால் பள்ளி மற்றும் வேலைக்குச் செல்லும் மாணவர்கள், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதுதவிர தொழிற்சங்கங்களின் சார்பில் மாவட்ட தலைநகரங்களின் பிரதான சாலைகள் மற்றும் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டங்கள் நடைபெற்றதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனிடையே, தொழிற்சங்கங்கள் சார்பில் சென்னை பல இடங்களில் இன்று ஆர்ப்பாட்டம், சாலை மறியல் நடைபெற்றன. இதையடுத்து, நகரில் 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.இதே போல் திருச்சி, கோவை, மதுரை, ஈரோடு,கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொழிற்சங்கத்தினர் மத்திய அரசைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வங்கி ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் இன்றும் நாளையும் வங்கிகள் செயல்படாது. ஏப்.1-ம் தேதி வங்கிகள் செயல்பட்டாலும், வருடாந்திர கணக்கு முடிக்கும் பணியால் வாடிக்கையாளர் சேவை இருக்காது. ஏப். 2-ம் தேதி சனிக்கிழமை தெலுங்கு வருடப் பிறப்பு என்பதால் அன்றும் வங்கிகளுக்கு விடுமுறை.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை நாளாகும். எனவே, இந்த வாரத்தில் புதன், வியாழன் (மார்ச் 30, 31) ஆகிய 2 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும். இதனால், வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும். எனினும், ஆன்லைன் சேவைகள் எப்போதும் போல தடையின்றி செயல்படும் என்றும் ஏடிஎம் மையங்களில் பணத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க போதிய அளவு பணம் இருப்பு வைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.