மேற்கு வங்க சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்கள் கைகலப்பு: எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட 5 பேர் சஸ்பெண்ட்

கொல்கத்தா: பிர்பும் கலவரம் தொடர்பாக மேற்கு வங்க சட்டப்பேரவையில் ஆளும் கட்சி, எதிர்கட்சி எம்எல்ஏக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் எம்எல்ஏகள் பலர் காயமடைந்தனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் இன்று சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்றது. பேரவைக் கூட்டம் தொடங்கியதும், பாஜக எம்எல்ஏக்கள், பிர்பும் அருகே போக்டுய் கிராமத்தில் 8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக குரல் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். அப்போது ஆளுங்கட்சிக்கு எதிராக கோஷம் எழுப்பிய பாஜக எம்எல்ஏக்கள், உள்துறையை வைத்திருக்கும் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலகவேண்டும் என்று கோரினர்.

இதனைத் தொடர்ந்து, சபாநாயகர் பிமன் பானர்ஜி எதிர்கட்சி எம்எல்ஏக்களை அவர்களின் இருக்கையில் அமருமாறு பலமுறை கேட்டுக்கொண்டார். அதனைப் பொருட்படுத்தாத பாஜக எம்எல்ஏக்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில். அரைமணிநேரம் கழித்து ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், எதிர்கட்சி உறுப்பினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து எதிர்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி கூறுகையில், “பேரவைக்குள் வைத்து பாஜக எம்எல்ஏக்கள் தாக்கப்பட்டனர். இதில் பாஜக தலைமைக் கொறடா மனோஜ் திக்கா, எம்எல்ஏ நரஹரி மஹதோ உள்ளிட்ட பல தலைவர்கள் காயமடைந்ததனர். சந்தனா பவுரி முதலான பெண் எம்எல்ஏக்களும் தாக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.

அதேவேளையில், எதிர்கட்சி எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையின் பெண் பாதுகாப்பு அதிகாரிகளை தாக்கியதாகவும், அதிகாரபூர்வ ஆணவனங்களைச் சேதப்படுத்தியதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த கைகலப்பில் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ அசித் மஜூம் தாரிக்கு மூக்கில் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் எஸ்எஸ்கேஎம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்தக் அவைக் கலவரத்தைத் தொடர்ந்து பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இந்த நிலையில், எதிர்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, தீபக் பர்மன், ஷங்கர் கோஷ். மனோஜ் திக்கா, நரஹரி மஹதோ ஆகிய 5 பாஜக எம்எல்ஏக்களை இடைநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

கடந்த வாரத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்து துணைத்தலைவர் ஒருவர் வெடிகுண்டு வீசிக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்தக் கிராமத்தில் கலவரம் மூண்டு வீடுகளுக்கு தீவைக்கப்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர். இந்தக் கலவரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.