10% வரை விலை உயரும் மருந்துகள் – மயக்கம் வர வைக்குமோ மருந்து விலை? – ஓர் அலசல்

மளிகைப் பொருட்களை போல மாதாந்திர பட்ஜெட்டில், மருந்து மாத்திரைகளை பட்டியலிடும் குடும்பங்கள் பல நம் நாட்டில் உள்ளன. அதிலும், முதியோர்கள் உள்ள குடும்பங்கள் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை மருந்துகளுக்காக செலவிட வேண்டிய சூழல் உள்ளது. அத்தகையோரின் பட்ஜெட்டில் அடுத்த மாதம் முதல் துண்டு விழ செய்ய போகிறது மருந்துகளின் விலை உயர்வு.
குறிப்பாக, 10.77 சதவிகிதம் வரை விலையை உயர்த்திக்கொள்ள மருந்து நிறுவனங்களுக்கு தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதனால் அத்தியாவசிய மருந்துகளின் தேசிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள சுமார் 850 மருந்துகளின் விலை வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அதிலும் காய்ச்சல், இருதய நோய், புற்றுநோய், நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், கொழுப்பு, தோல் நோய், வலி மற்றும் தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுக்கான மருந்துகளின் விலை 10 சதவிகிதம் உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் சாமானிய குடும்பத்தில் உள்ள உறுப்பினர் ஒருவருக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மருந்து வாங்க வேண்டும் என்றால் இனிமேல் அதற்கு கூடுதலாக 300 ரூபாய் செலவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மருந்துகளின் விலையை 10.77 சதவிகிதம் உயர்த்திக்கொள்ள அனுமதி வழங்கியதற்கு, மொத்தவிலை பணவீக்கம் அதிகரித்து வருவதே காரணம் என தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரியில் 2.51சதவிகிதமாக இருந்த மொத்தவிலை பணவீக்கம் நடப்பாண்டின் பிப்ரவரியில் 13.11 சதவிகிதமாக உயர்ந்துள்ளதையும் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
image
இதற்கிடையில், பணியாட்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்கியது, மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு போன்ற காரணங்களால் விலையை உயர்த்த அனுமதி கோரி வந்ததாக கூறும் மருந்து உற்பத்தி நிறுவனங்கள், இந்த அறிவிப்பை வரவேற்பதாக கூறுகின்றன.
அதேநேரம், விலையேற்றதால் தங்கள் தொழிலும் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளதாக மருந்து வணிகர்கள் கூறுகின்றனர். எந்தெந்த நோய்களுக்கு தினசரி மருந்து, மாத்திரைகள் உட்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. பல குடும்பங்களில் மருந்து, மாத்திரைகளுக்கு மட்டுமே சராசரியாக எவ்வளவு ரூபாய் செலவாகிறது? உள்ளிட்ட கூடுதலான தகவல்கள் குறித்து புதிய தலைமுறை நியூஸ் 360 டிகிரி வீடியோவில் விரிவாகக் காணலாம்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.