தென்னிந்திய ஊடகம் & பொழுதுபோக்கு துறையின் கருத்தரங்கு… ஏப். 9 ம் தேதி சென்னையில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்…

தென்னிந்திய ஊடகம் & பொழுதுபோக்கு துறையின் கருத்தரங்கு வரும் ஏப்ரல் மாதம் 9 ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது, இந்த கருத்தரங்கை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைக்க இருக்கிறார்.

இந்திய தொழில் துறை கூட்டமைப்பு நடத்தும் தென்னிந்திய ஊடகம் & பொழுதுபோக்கு துறையின் கருத்தரங்கில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானுக்கு சிறந்த ஐகான் விருது வழங்கப்பட இருக்கிறது.

“தக்ஷின்” என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த கருத்தரங்கு சென்னை வர்த்தக மைய்யத்தில் ஏப்ரல் 9 மற்றும் 10 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற இருக்கிறது.

இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டலாக,  திரைத்துறை சாதனையாளர்கள், ஆளுமைகள், பிரபலங்கள் பங்குகொள்ளும்  தென்னிந்திய ஊடகம் & பொழுதுபோக்கு துறையின் இந்த கருத்தரங்கு குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனர்,  தக்ஷின் மீடியா & பொழுதுபோக்கு  சப்மிட்டின் தலைவர் மற்றும் நிர்வாகப் பங்குதாரர் திரு.டி.ஜி. தியாகராஜன், மற்றும் இந்த உச்சிமாநாட்டின் வழிநடத்தல் குழு உறுப்பினர்களான திருமதி. சுஹாஷினி மணிரத்னம், திருமதி.குஷ்பு சுந்தர், திருமதி. சுஜாதா விஜயகுமார், திருமதி. லிஸ்ஸி லக்ஷ்மி, திரு.ஜி.தனஞ்செயன் மற்றும் பலர் உச்சிமாநாட்டின் நோக்கம் மற்றும் அதன் இலக்குகளை விளக்கினார்கள்.

இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் மாநில பிரிவு தலைவர் திரு. ஜேயிஷ் பேசியதாவது…

இந்திய தொழில்துறை கூட்டமைப்பு சார்பில்  ஏப்ரல் 9 & 10 தேதிகளில் தென்னிந்தியாவுக்கான இந்த மாபெரும் கருத்தரங்கு நிகழ்வு நடைபெறுகிறது. தென்னிந்திய திரையுலகு ஊடகத்துறையில் மட்டும், 55 லிருந்து 70 பில்லியன் வரை வருமானம் 2020 , 22 ஆண்டுகளில் வருமென கணிக்கப்பட்டுள்ளது. இது அனிமேஷன், வீடியோ கேமிங் துறைகளையும் சார்ந்தது. தொலைக்காட்சி ஊடக துறையில் இந்தியாவில் தென்னிந்தியா மிகப்பெரும் பங்கு வகிக்கிறது.

தென்னிந்திய மீடியா என்றால் எல்லோரும் திரைத்துறையை மட்டுமே என நினைக்கிறோம். ஆனால் அதை தாண்டி மிகப்பெரும் துறைகள் இருக்கிறது. அனிமேசன், வீடியோ கேமிங், ஓடிடி என பெரிய உலகம் இருக்கிறது. இதனை பற்றிய விழிப்புணர்வு தரும் வகையில் தான் இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது. இந்திய தொழில்துறை கூட்டமைப்பு, வட இந்தியாவில் இதை போல் பல நிகழ்வுகளை நடத்துகிறது. தென்னிந்தியாவில் இதனை நடத்த முக்கிய காரணமாக இருக்கும் தென்னிந்திய தொழில்துறை கூட்டமைப்பிற்கு தலைமை தாங்கும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனர்  திரு.டி.ஜி. தியாகராஜன் அவர்களுக்கு நன்றி. இந்திய ஊடக பொழுதுபோக்கு துறை கூட்டமைப்பு இங்கு கால் பதிப்பது மிக மகிழ்ச்சி. தக்ஷின் திரைத்துறை பிரபலங்களை மட்டும் காட்டாது. விஷுவல் எபெக்ட்ஸ், கேமிங் உட்பட வருங்காலத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வாக இருக்கும் நன்றி.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனர் திரு.டி.ஜி. தியாகராஜன் பேசியதாவது…

இந்திய தொழில்துறை கூட்டமைப்பு சார்பில்  ஏப்ரல் 9 & 10 தேதிகளில் தென்னிந்தியாவுக்கான இந்த மாபெரும் கருத்தரங்கு நிகழ்வு நடைபெறுகிறது. இதற்கு உங்களை வரவேற்பதில் மிகவும் பெருமை, இந்த தொழில்துறை கூட்டமைப்பு  மூலம் இதனை நடத்த எனக்கு உதவியாக இருந்து இந்த கருத்தரங்கு நிகழ்வு நடைபெற காரணமாக இருந்த நண்பர்களுக்கு நன்றி. இதற்கு தக்ஷின் என பெயரிட்டுள்ளோம். இரு நாட்களில் என்னென்ன நிகழ்வுகள் நடக்குமென உங்களுக்கு விளக்கப்படும். நன்றி.

திருமதி. சுஹாஷினி மணிரத்னம் பேசியதாவது…

இந்த நிகழ்வு என்ன என்று விளக்குமுன் இதனை எதற்காக நடத்துகிறோம் என்பதை விளக்கி விடுகிறேன். ஒரு இடத்தில் திரைத்துறை விழா நடக்கும் போது அங்கு பிரபலங்கள் வருவதும், வெளிச்ச மழை பொழிவதுமான விழா இதுவல்ல, ஒரு திரைப்படைப்பு எப்படி நடக்கிறது, அதன் நோக்கம் என்ன, அதனை எப்படி திட்டமிடுகிறார்கள், ஒரு படைப்பை மக்களுக்கு பிடிக்கும்படி எப்படி உருவாக்குகிறார்கள், என்பது தான் இந்த நிகழ்வின் முக்கிய சாராம்சம் ஆகும். திரைக்கல்லூரியில் படித்தவர்கள் அங்கு வரும் ஆளுமைகளிடம் திரைத்துறை பற்றி கற்றுக்கொள்வார்கள் ஆனால் அது அனைவருக்கும் கிடைப்பதில்லை, அதனை அனைவருக்கும் எடுத்து செல்லும் தளம் தான் தக்ஷின். திரைத்துறை ஊடக துறையில் ஆர்வமுள்ளவர்கள் இதில் பங்குகொள்ளலாம்.

முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இந்த விழாவினை துவக்கி வைக்கிறார். இந்த விழாவிற்கு  இந்திய தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனர் திரு.டி.ஜி. தியாகராஜன் பங்கு கொள்கிறார் அவருடன் பல திரைத்துறையினர் பங்குகொள்கிறார்கள்.

ஜெயம் ரவி, பகத் பாசில், சிவராஜ்குமார், எஸ் எஸ் ராஜமௌலி, இயக்குநர் மணிரத்னம் இந்த துவக்க  விழாவில் பங்கு கொள்கிறார்கள். முதல் நாள் 7 கருத்தரங்கு கலந்துரையாடல் உள்ளது, தென்னிந்திய திரைத்துறை, பன்னிந்திய திரைப்படத்தை தருவது பற்றி கருத்தரங்கு நடக்கும் இதில் இயக்குநர் மணிரத்னம், எஸ் எஸ் ராஜமௌலி,  சுகுமார் ஆகியோர் பங்குகொள்ள தொகுப்பாளிணியாக அனு ஹாசன்  பங்கு பெறுகிறார்.

வருங்கால திரை ஊடகம் பற்றிய கருத்தரங்கு ஒளிப்பதிவாளர் செந்தில்குமார், கலை இயக்குநர் சாபு சிரில், ஶ்ரீனிவாச மோகன் விஷுவல் எஃபெக்ட் துறை மேலாளர், இந்திய கேமிங் துறை சார்ந்த ரோலின் லாண்டஸ் பங்கு கொள்கிறார்கள். ஊடக துறையில் பாலினம் குறித்து கருத்தரங்கு, ரம்யா ரீமா கலிங்கல், டாப்ஸி பன்னு பங்குகொள்கிறார்கள், திரைத்துறையில் சமூக வலைதளங்களின் தாக்கம் குறித்த கருத்தரங்கு, அச்சுத்துறை மீட்டுருவாக்கம் பற்றிய கருத்தரங்கு, மில்லினிய உலகிற்கு கதை சொல்வது குறித்த அருமையான கருத்தரங்கு கார்த்திக் சுப்புராஜ், திரி விக்ரம் ஶ்ரீனிவாஸ் பங்குகொள்கிறார்கள், இது முதல் நாள் மட்டுமே,  திரைத்துறை ஆர்வலர்கள் கற்றுக்கொள்ள மிகப்பெரும் பாக்கியமாக இந்த கருத்தரங்கு இருக்கும், அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் நன்றி.

இரண்டாம் நாள் கருத்தரங்கு குறித்து திருமதி குஷ்பூ சுந்தர் பேசியதாவது…

உலகம் முழுக்க சினிமா விழாக்கள் நடக்கிறது. ஆனால் இந்திய சினிமா என சொல்லும் போது தென்னிந்திய சினிமா ஒதுக்கி வைக்கப்படுகிறது. எல்லா நடிகர்கள், கதைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் என வரும்போது தென்னிந்தியாவிலிருந்து கடுமையாக உழைக்கிறார்கள் ஆனால் விருதுகளில் நாம் பின் தங்கி இருக்கிறோம். நாம் இது பற்றி உயர்த்தி குரல் கொடுக்க வேண்டும், அதனை நடத்தி காட்ட தான் நம் திறமையை வெளிக்காட்டதான், இந்திய தொழில்துறை கூட்டமைப்பு  நடத்தும் இந்த  நிகழ்வு. இந்த விழாவிற்காக இந்திய தொழில்துறை கூட்டமைப்பிற்கு  மிகப்பெரும் நன்றி.

இரண்டாம் நாள், தொலைக்காட்சி கொடுக்கும் தாக்கம் குறித்த கருத்தரங்கு. சிறு பட்ஜெட் படங்கள் குறித்த கருத்தரங்கு, தொலைக்காட்சி படைப்புகள் குறித்த கருத்தரங்கு. புதிய துவக்கம், ஐடியா பற்றிய கருத்தரங்கு,  டிஸ்னி ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ் உட்பட பலர் இதில் கலந்து கொள்கிறார்கள். தியேட்டர் நடத்துவது பற்றிய கருத்தரங்கு, ஊடக துறையில் பைனான்ஸ்  குறித்த கருத்தரங்கு, கேள்விகள் பதில்களுடன் உரையாடலாக இந்த கருத்தரங்கு இருக்கும். இவ்விழாவில் இந்திய சினிமாவின் அடையாளம் என  ஐகான் விருது திரு ஏ ஆர் ரஹ்மான் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. திரு எல்.முருகன் விருது வழங்கவுள்ளார். திரைத்துறை பற்றிய அறிவை வளர்த்து கொள்ள இந்த விழாவில் கலந்து கொள்ளுங்கள் நன்றி.

திருமதி. லிஸ்ஸி லக்ஷ்மி பேசியதாவது…

நிறைய பேர் கடுமையாக உழைத்து இந்த கருத்தரங்கை நடத்தவுள்ளோம், இது மக்களுக்கு சென்றடைய நீங்கள் தான் உதவ வேண்டும், இளைய தலைமுறையினருக்கு இது சென்றடைய வேண்டும் நம் திறமை பற்றி உலகம் முழுக்க தெரிய வேண்டும் நன்றி.

திரு.ஜி.தனஞ்செயன்  பேசியதாவது…

2012 கமலஹாசன் கலந்து கொள்ள இந்திய தொழில்துறை கூட்டமைப்பு கருத்தரங்கு நடைபெற்றது, அதற்கு பிறகு 9 ஆண்டுகளாக இது நடைபெறவில்லை. இப்போது இந்திய தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் டி ஜி தியாராஜன் முயற்சியில் தென்னிந்தியாவில் நான்கு திரைத்துறை பிரபலங்களும் கலந்துகொள்ள, இந்த கருத்தரங்கு நடக்கவுள்ளது. இதற்கு பின்னணியில் நாங்கள் கடுமையாக உழைத்துள்ளோம். இந்த கருத்தரங்கு பற்றி அனைத்து மக்களிடம் நீங்கள் கொண்டு சேர்க்க வேண்டும். இது  அனைவரும் அசந்து போகும் வகையில் ஒரு அற்புதமான கருத்தரங்காக இருக்கும். இந்த விழா நடக்க இங்கிருக்கும் பெண்கள் மிக முக்கிய காரணமாக இருந்தார்கள். இந்த இரண்டு நாள் கருத்தரங்கை தவறவிடாதீர்கள் நன்றி.

இந்த கருத்தரங்கில் கலந்துகொள்ளும் நபர்களுக்கான நுழைவு தொகை விபரமும் இந்த சந்திப்பின் போது தெரிவிக்கப்பட்டது :

நுழைவு தொகை  (நபர் ஒன்றுக்கு ஜி எஸ் டி உட்பட )

CII உறுப்பினர்             :  ரூபாய் 3540

தனி நபர் : ரூபாய் 4720

மாணவர்கள் : ரூபாய் 1770

www.cii-dakshin.in

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.