புதுடெல்லி: டெல்லி விக்யான் பவனில் நேற்று மூன்றாவது தேசிய நீர் விருது வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேசிய அளவில் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கிய மாநிலங்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதற்கான விருதுனை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அனைத்து மாநிலங்களின் நீர் வளத்துறை செயலாளர்களும் கலந்து கொண்டனர். இதில், தமிழகத்தின் சார்பாக நீர்வளத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா கலந்து கொண்டார். தேசிய அளவில் நீர் மேலாண்மையில் மூன்றாவது மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழகத்திற்கான விருதுனை தமிழக நீர்வளத்துறை கூடுதல் செயலாளர் சந்தீப் சக்சேனாவிடம், ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் வழங்கினார். இதேப்போன்று தமிழகத்தில் இருந்து காவேரிப்பட்டினம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வளர்மதி, வெள்ளப்புதூர் பஞ்சாயத்து துணைத் தலைவர் விஜயகுமார், புதுச்சேரி அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி ஆகியோரும் விருதுகளை பெற்றனர்.
