'1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் நோக்கிய பயணத்தின் மற்றொரு மைல்கல்' – அமேசான் அலுவலகத்தை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தில் அமேசான் நிறுவனத்தின் மிகப் பெரிய அலுவலகத்தைத் திறந்துவந்த முதல்வர் ஸ்டாலின், “இது ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய தமிழகப் பயணத்தின் மற்றொரு மைல்கல்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (29.3.2022) பெருங்குடி, உலக வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள அமேசான் நிறுவனத்தின் மிகப் பெரிய அலுவலகத்தை திறந்து வைத்தார். அமேசான் நிறுவனம் முதன்முதலில் தமிழகத்தில் 50 பணியாளர்களுடன் தொடங்கப்பட்டு இன்று 14,000 பணியாளர்களுடன் செயல்பட்டு வருகிறது. பெருங்குடியில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள அமேசான் நிறுவனத்தின் மிகப் பெரிய அலுவலகமானது, 8.23 லட்சம் சதுர அடி பரப்பளவில், 18 தளங்களுடன், 6,000 பணியாளர்கள் பணிபுரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் அமேசான் நிறுவனத்தின் நான்காவது அலுவலகம் ஆகும்.

அமேசான் நிறுவனத்தின் இந்த முதலீடு குறித்து வாழ்த்து தெரிவித்த முதல்வர், தமிழகத்தின் சிறப்பான உள்கட்டமைப்பு வளர்ச்சி, முதலீட்டிற்கு உகந்த அரசின் கொள்கைகள், மாநிலத்தில் உள்ள திறமையாளர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன என்றும், அமேசான் நிறுவனம் இந்தியாவின் புதிய அலுவலகத்தை சென்னையில் தொடங்குவது மாநிலப் பொருளாதாரத்தில் பன்மடங்கு நல்விளைவை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், விரிவாக்கம் மற்றும் முதலீடு நமது மாநிலத்தின் பொருளாதார, சமூக நல்வாழ்வை இணைக்கும் என்றும், அமேசான் இந்தியா நிறுவனத்திடமிருந்து இந்த வளர்ச்சியை நாங்கள் வரவேற்கிறோம், அவர்களின் புதிய அலுவலகத்தைத் தொடங்குவதற்கு வாழ்த்துகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மைச் செயலாளர் நீரஜ் மிட்டல் மற்றும் அந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதனிடையே, அமேசான் நிறுவனத்தின் மிகப் பெரிய அலுவலகத்தை திறந்தது குறித்து முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “தமிழகத்தில் அமேசான் நிறுவனத்தின் மிகப் பெரிய அலுவலகமும், இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய அலுவலகமுமான இவ்வலுவலகத்தை திறந்து வைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய தமிழகப் பயணத்தின் மற்றொரு மைல்கல் ஆகும். தமிழகத்தில் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் உள்கட்டமைப்பு விரிவாக்கம் ஆகியவற்றிற்கான அமேசான் நிறுவனத்தின் தொடர்ச்சியான முயற்சிகளை எதிர்நோக்குகிறோம்” என்று ஆங்கிலத்தில் கூறியிருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.