‘கைதாக முடிவு செய்துவிட்டார் அண்ணாமலை; உரிய நேரத்தில் அனுப்பி வைப்போம்’: ஆர்.எஸ் பாரதி

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துபாய் பயணம் பற்றி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துப் பேசியதற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால், 100 கோடி நஷ்டஈடு தர வேண்டும் என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை, வழக்கை நீதிமன்றத்தில் சந்திப்பேன் என்று கூறினார். மேலும், 6 மணிநேரம் கமலாலயத்தில் இருக்கிறேன், முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள் என்று சவால் விட்டார்.

இந்த நிலையில், திமுகவின் அமைப்புச் செயலாளரும் ராஜ்ய சபா எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி, அண்ணாமலை கைதாக முடிவு செய்துவிட்டார். அவரை உரிய நேரத்தில் அனுப்பி வைப்போம் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: “முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் துபாய் பயணம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிற காரணத்தினால், அதை தாங்கிக்கொள்ள முடியாதா புதியதாக வந்திருக்கக்கூடிய பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து பொய் மூட்டைகளையும் அவதூறுகளையும் பரப்பிக்கொண்டிருக்கிறார். அவர் பேசிய பேச்சுக்கு திமுகவின் அமைப்புச் செயலாளர் என்ற முறையில் நான் நோட்டீஸ் அனுப்பியிருந்தேன். 1995-ம் ஆண்டு ஜெயலலிதா டான்ஸி நிலத்தை வாங்கியபோது, நான் தான் நீதிமன்றத்திலே வழக்கு தொடர்ந்தேன். முதலமைச்சராக இருப்பவர் மீது வழக்கு தொடர வேண்டுமானால், ஆளுநர் அனுமதி பெற வேண்டும் என்பதுதான் விதி. அதையும் மீறி அவர் மீது கிரிமினல் கோர்ட்டில் வழக்கு போட்டு, அந்த வழக்கிலே தனிப்பட்ட குடிமகனாக இருந்து போட்ட் வழக்குதான் உச்ச நீதிமன்றம் வரை சென்று உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு அவர் மீது கடுமையான கண்டனங்களை தெரிவித்து வாங்கிய டான்சி நிலங்களை திரும்ப அளிக்கப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு தனிப்பட்ட ஆர்.எஸ்.பாரதி திமுகவின் பிரதிநிதி என்ற முறையில் பெற்றதுதான் அது என்பதை அண்ணாமலை புரிந்துகொள்ள வேண்டும்.

நான் அந்த நோட்டீஸில் தெளிவாக சொல்லியிருக்கிறேன். நான் 60 ஆண்டு காலமாக திமுக தொண்டனாக பணியாற்றிக்கொண்டிருக்கிறேன். 70 ஆண்டு காலம் பாரம்பரியம் உள்ள திமுகவின் தலைவராக இருக்கிற மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறாக பேசியக் காரணத்தினால் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பினேன். இதைக்கூட புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் அவர் எப்படி போலீஸ் ஆஃபிசராக இருந்தார் என்று தெரியவில்லை.

இன்றைக்கு சொல்கிறார் என்னை கைது செய்து பாருங்கள். கமலாலயத்தில் நான் 6 மணி நேரம் உட்காரப்போகிறேன். இது எப்படி இருக்கிறது என்றால் சினிமாவில் வடிவேலு ‘நான் ஜெயிலுக்கு போகிறேன்… நான் ஜெயிலுக்கு போகிறேன் என்று வண்டியில் ஏறின மாதிரி’ ஆரம்பிக்கிறார். கமலாலயத்தில் போய் உக்கார்ந்துகொண்டு என்னை கைது பண்ணுங்க என்னை கைது பண்ணுங்க என்கிறார். இவர் ஒரு ஐபிஎஸ் போலீஸ் ஆஃபிசர். இவருக்கு எப்படி ஐபிஎஸ் கொடுத்தார்கள் என்றே தெரியவில்லை. ஒரு புகார் கொடுத்தால் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற அவசியமே இல்லை. இன்னும் தெளிவாக அவருக்கு புரிகிற மாதிரி சொல்ல வேண்டும் என்றால், ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் தண்டனை கொடுத்தார்கள் இல்லையா, அதில் அவரை கைது செய்யப்படவில்லை. எல்லா வழக்குகளிலும் கைது செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இவருக்கு குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கிறது என்கிற மாதிரி, ஒரு புகார் கொடுத்தால் அந்த புகாரை பதிவு செய்து விசாரணை செய்து அதற்கு பிறகுதான் நடவடிக்கை எடுக்க முடியும். நான் சொன்னது எல்லாம் நீங்கள் மன்னிப்பு கேளுங்கள். அதற்கு அவர் நான் 4 மாடு 4 ஆடுதான் வைத்திருக்கிறேன் என்கிறார். 4 மாடு வைத்து அவர் பிழைத்துக்கொண்டு போகட்டும் அதைப் பற்றி கவலை இல்லை. ஆனால், பேசுவது பொறுப்போடு பேச வேண்டும். அதற்காகத்தான் நோட்டீஸ் கொடுத்தோம். எனக்கு அறிவில்லை என்கிறார். மூத்த வழக்கறிஞர் வில்சனைப் பற்றி பிஜிஆர் கம்பெனிக்கு அவர் ஆஜரானார் என்பதை பெரிய குற்றமாக சொல்கிறார். நான் அண்ணாமலைக்கு தெரிவித்துக்கொள்கிறேன். வில்சன் ஒரு மூத்த வழக்கறிஞர். ஒரு வழக்கறிஞரின் தொழில் என்ன என்பதை முதலில் அண்ணாமலை புரிந்துகொள்ள வேண்டும். ஒரு டாக்டர் இருக்கிறார் என்றால் ஒரு கொலைக் குற்றவாளி, கிரிமினல் குற்றவாளிக்கு உயிர் பாதிக்கப்படுகிறது என்றால் டாக்டர் தனது கடமைப்படி சிகிச்சை அளிக்க வேண்டும். அதுதான் தொழில். அதுமட்டுமல்ல, வில்சன் சீனியர் வழக்கறிஞர். அதனால், மூத்த வழக்கறிஞருக்கும் வழக்கு சம்பந்தப்பட்டவருக்கும் தொடர்பே கிடையாது. இது கூட அண்ணாமலைக்கு புரியவில்லை.

அண்ணாமலை இன்றைக்கு சொல்லியிருக்கிறார். திமுக தலைவர் மீது கடுமையாக கேவலமாக எல்லாம் பேசியிருக்கிறார். முடிகிற தருணத்தில் போயிருக்கிறார். உங்கள் மத்திய அரசில் இருந்து 2 அமைச்சர்கள் இருக்கிறார்கள். நேற்றுகூட ஒரு அமைச்சர் கண்காட்சியில் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தார். இவர்கள் எதற்கு போனார்கள்.

மு.க.ஸ்டாலினின் பயணம் வெற்றிகரமாக முடிந்துவிட்டது என்பதை தாங்கிக்கொள்ள முடியாமல், அண்ணாமலை அப்படி பேசுகிறார். அவரை கைது செய்ய வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு கிடையாது. திமுகவை தொடர்ந்து திட்டி பேசினால் பாஜகவில் ஏதாவது பதவி கிடைக்கும் என்பது ஃபேஷனாகிவிட்டது. ஏற்கெனவே, ஒருத்தர் பேசி பேசி கவர்னராகி விட்டார். இன்னொருத்தர் மத்திய அமைச்சராகிவிட்டார். அதே ஆசையில்தான் அண்ணாமலையும் இங்கே வந்திருக்கிறார். நான் இன்னும் பகிரங்கமாக அண்ணாமலைக்கு சவால் விட்டு கேட்கிறேன். நான் சொன்ன குற்றச்சாட்டுகள் அனைத்தும் முழு உண்மை. நீங்கள் என்னென்ன பண்ணீங்க யார் யாரை பிளாக்மெயில் பண்ணீங்க, இதெல்லாம் என்னிடம் பட்டியல் இருக்கிறது. நான் சொல்வதை உங்களால் ஜீரணிக்க முடியவில்லை என்று என் மேல் வழக்கு போடுங்கள். கோர்ட்ல நான் நிரூபிக்கிறேன். கர்நாடகாவில் காங்கிரஸ் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு அன்றைக்கு இருந்த ஆட்சியாளர்கள் மூலமாக எவ்வளவு பணம் அவங்களுக்கு போச்சு, அப்போது இவர் கர்நாடகாவில் போலீஸ் ஆஃபிசராக இருந்தார். இந்த தகவல்களை எல்லாம் நாங்கள் சேகரித்து வைத்திருக்கிறோம். ஆகையினால், அண்ணாமலை எச்சரிக்கையாக பேச வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

எனக்கு அறிவிருக்கிறதா, வில்சனுக்கு அறிவிருக்கிறதா என்பது பற்றி நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். வில்சனுடைய அறிவாற்றல்தான் இந்தியா பூராவும் 27 சதவீதம் ஓ.பி.சி இடஒதுக்கீடு உச்ச நீதிமன்றத்தின் மூலமாக அவருடைய வாதத் திறமையால் பெற்றுக்கொடுத்திருக்கிறார். அவருடைய ஆற்றல், அறிவு பற்றி அண்ணாமலை சான்றிதழ் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அண்ணாமலை ஜெயிலுக்கு போக வேண்டும் என முடிவு பண்ணிவிட்டார். அப்படி அவர் முடிவு பண்ணி இருக்கிறார் என்றால், அதற்கு உரிய நேரம் வரும் அனுப்பி வைப்போம். சூழ்நிலை ஏற்படுகிறபோது நிச்சயமாக அவர் குற்றம் உறுதி செய்யப்பட்டு உள்ளே செல்வார்.

அநாவசியாமாக நாங்கள் இவரை கைது செய்வதும் கிடையாது. இவரை பெரிய மனுஷனாக்க நாங்கள் விரும்பவும் இல்லை. நாங்கள் எவ்வளவு பேரை பார்த்துள்ளோம்” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.