பிம்ஸ்டெக் மாநாட்டில் ,ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் ஆற்றிய உரை

பிம்ஸ்டெக் மாநாட்டில் ,ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள்  மாநாட்டின் வரவேற்பு உரையும் நாட்டிற்காக ஆற்றிய உரையும்(30.03.2022)

 “பிம்ஸ்டெக் – ஒரு நெகிழ்ச்சியான பிராந்தியம், வளமான பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியமான மக்களுக்காக”

கௌரவ அரச தலைவர்களே,

பிரதிநிதிகளே,

அதிதிகளே,

முதன்முறையாக இணையத்தின் ஊடாக நடைபெறும் 5ஆவது பிம்ஸ்டெக் மாநாட்டிற்காக  உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

முதலில், உங்களின் கெளரவமான பங்கேற்பிற்கு நான் நன்றி தெரிவிப்பதோடு, இந்த மாநாட்டை ஏற்பாடு செய்ய கடுமையாக உழைத்த பிம்ஸ்டெக் பொதுச் செயலாளர், செயலக ஊழியர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று நாம் அனைவரும் ஒரு சவாலான தருணத்தில் சந்திக்கிறோம்.

கொவிட்-19 தொற்றுநோயால் இந்த நூற்றாண்டின் மிக மோசமான நெருக்கடியை உலகம் எதிர்கொண்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான பாதிக்கப்பட்டவர்களுக்கும், தமது உயிர்களை இழந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொற்றுநோய் அனைத்து நாட்டு மக்களையும் பாதித்தது. பல நாடுகள் குறிப்பிடத்தக்க பொருளாதார, சமூக மற்றும் அரசியல் மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளன.

அதன் தாக்கம் உலகப் பொருளாதாரத்தில் தொடர்ந்தும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றதுடன்,  அதிகரிக்கும் எண்ணெய் விலை, போக்குவரத்து கட்டணங்கள் மற்றும் விநியோக கட்டுப்பாடுகள் ஆகியவை உலகளாவிய பணவீக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினால், கணக்கிலடங்காத எண்ணிக்கையிலான வர்த்தகங்கள் மூடப்பட்டதன் காரணமாக, மில்லியன் கணக்கானவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொருளாதார வாய்ப்புகள் குறைவடைந்ததோடு,  சில சமயங்களில் முழுமையான தொழில்களும் வீழ்ச்சி கண்டன.

அண்மைக் காலத்தில் ஏற்பட்ட ஏனைய உலகளாவிய நெருக்கடிகளுடன் சேர்ந்து, இந்த வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதார நிலைமைகள், விசேடமாக மில்லியன் கணக்கான மக்கள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள, அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்த நிலையில் இருந்து மீள்வதற்கு எதிர்வரும் மாதங்கள் மற்றும் ஆண்டுகளில் சர்வதேச மற்றும் பிராந்தியங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது அவசியமாகும்.

கௌரவமான அதிதிகளே,

தொற்றுநோய்க்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் மூலம் பெரியளவிலான உயிரிழப்புகளைத் தடுக்க முடிந்தமை இலங்கை அடைந்துகொண்ட வெற்றியாகும்.

வலுவான பொது சுகாதார கட்டமைப்புடன், ஒட்டுமொத்த அரசாங்க தடுப்பூசி அணுகுமுறை மூலம், 12 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கையர்களில் 82 சதவீதத்துக்கும் அதிகமானோர் இதுவரை முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளனர். 54 சதவீதமானோர் பூஸ்டர் டோஸ் பெற்றுள்ளனர். இது பல சமூகத் தடைகளைக் குறைத்து, ஒரு குறிப்பிட்ட அளவிலான இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு வழியமைத்தது.

எவ்வாறாயினும், பல அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளைப் போலவே, குறிப்பாக இலங்கையும் தொற்றுநோயின் பொருளாதார விளைவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் வைரஸ் பரவுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நமது பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையையும் கடுமையாக பாதித்துள்ளன.

சுற்றுலா கைத்தொழில் வருமான இழப்பு மற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பணப் பரிமாற்ற இழப்பைப் போன்று சுகாதாரப் பாதுகாப்புத் திட்டங்களின் செலவை ஏற்க வேண்டிய நிலை மற்றும் தொற்றுநோயினால் தமது வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குதல், அதிகரித்து வரும் உலகளாவிய பணவீக்கம் மற்றும் நமது பழைய கடன் சேவை பொறுப்புக்களுடன் சேர்ந்து தற்போது இலங்கைக்கு சவால்மிக்க பொருளாதார நிலையொன்றை உருவாக்கியுள்ளது.

எவ்வாறாயினும், காலப்போக்கில் நாங்கள் ஆராய்ந்து பார்த்த நமது மக்களின் பெரும் வலிமை மற்றும் நெகிழ்ச்சி மற்றும் எங்கள் பிராந்திய மற்றும் சர்வதேச பங்காளிகளின் ஒத்துழைப்புடன் இந்த சிரமங்களை இலங்கை வெற்றி கொண்டு, விரைவான பொருளாதார மீட்சியை அடையும் என்று நான் நம்புகிறேன்.

இந்த முயற்சியில் பல பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பை நான் குறிப்பாக பாராட்டுகிறேன்.

கௌரவமான அதிதிகளே,

1997ஆம் ஆண்டு அதன் ஆரம்பம் முதல், பிம்ஸ்டெக் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் தங்கள் அனுபவங்கள், பலம் மற்றும் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், ஒருவருக்கொருவர் ஒத்துழைப்ப வழங்குவதற்கான ஒரு முக்கிய தளமாக மாறியுள்ளது.

நமது பிராந்தியத்தின் புவிசார் மூலோபாய முக்கியத்துவம், பொருளாதார வலிமை மற்றும் உலக மக்கள்தொகையில் 1/5க்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டிருக்கின்றமை ஒரு முக்கியமான விடயமாகும்.

உறுப்பு நாடுகளுக்கிடையில் உருவாக்கப்பட்ட ஒத்துழைப்பு, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், அதிக பொருளாதார மீட்சி, மிகச் சிறந்த பொது சுகாதாரம் மற்றும் நீண்டகால பிராந்திய நெகிழ்ச்சியின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

இந்த அபிலாஷைகள் இந்த மாநாட்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கருப்பொருளில் நன்கு பிரதிபலிக்கின்றன.

ஒரு நெகிழ்ச்சியான பிராந்தியம், வளமான பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியமான மக்கள்தொகை ஆகியவற்றின் இந்த மதிப்புமிக்க அபிலாஷைகளை அர்த்தமுள்ள பிராந்தியங்களுக்கிடையிலான ஒத்துழைப்பின் மூலம் நாம் அடைவோம் என்று நான் நம்புகிறேன்.

இன்று கையொப்பமிடப்பட்ட பிம்ஸ்டெக் சாசனம், பிராந்தியத்தில் மட்டுமன்றி, உலகளாவிய விவகாரங்களிலும் ஆசியாவில் ஒரு உந்து சக்தியாக இந்த அமைப்பின் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய மைல் கால்லாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கௌரவமான அதிதிகளே,

வங்காள விரிகுடா பிராந்தியம் உலக தொடர்வுகளுக்கும் வர்த்தகத்திற்கும் மிகவும் முக்கியமானதாக உள்ளது.

இந்த நீர் வழியாக பயணிக்கும் சர்வதேச கப்பல் பாதைகள் உலகப் பொருளாதாரத்தின் இயந்திரத்தை செயற்படுத்துவதற்கு  உதவுகின்றன.

இந்த நீர் மற்றும் பிராந்திய அரசுகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தலைத் தடுப்பதற்காக கடல்சார் நாடுகள் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமாகும்.

இத்தகைய அச்சுறுத்தல்களில் போதைப்பொருள் கடத்தல், மனித கடத்தல் மற்றும் பயங்கரவாதம் உள்ளிட்ட சர்வதேச குற்றங்களைப்போன்று இந்தப் பிராந்தியத்தில் மத தீவிரவாதம் பரவுதலும் உள்ளடங்கும்.

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய இலங்கையின் அனுபவம், இத்தகைய ஆபத்தான சித்தாந்தங்கள் எவ்வளவு விரைவாக நாடுகள் முழுவதும் பரவி அழிவை ஏற்படுத்தும் என்பதை காட்டுகிறது.

இத்தகைய அச்சுறுத்தல்களை முகாமை செய்வதற்கு பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளுக்கிடையே புலனாய்வுதுறைப் பகிர்வு மற்றும் அரசுகளுக்கிடையேயானதும் நிறுவனங்களுக்கு இடையேயானதுமான ஒத்துழைப்பு அவசியம்.

இதன் மூலம் அனைத்து நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் பிராந்தியத்தின் பாதுகாப்பை மேம்படுத்த முடியும்.

வங்காள விரிகுடா பிராந்தியத்தில் பரந்த பொருளாதார வாய்ப்புகளைப் பாதுகாப்பதும் மேம்படுத்துவதும் ஒருசேர முக்கியமானது.

பல்வேறு பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளில் மீன்பிடித்தலையே தங்கள் வாழ்வாதாரமாக நம்பியிருக்கும் மக்கள் அதிகமாக உள்ளனர். அவர்களின் கடல் எல்லையில் சட்டவிரோதமாக மீன்பிடிப்பதற்கு பயன்படுத்தப்படும் மிக நவீன கப்பல்களினால் எழும் தேவையற்ற போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாப்பது முக்கியம்.

எனவே, இவ்வாறான சம்பவங்களுடன் அதிகளவில் மீன்பிடித்தல், கட்டுப்பாடற்ற முறைகளைப் பயன்படுத்தி அத்துமீறி மீன்பிடித்தல் மற்றும் சட்டவிரோத மீன்பிடித்தல் போன்ற சம்பவங்களை தடுப்பதற்கு நாம் கூட்டாக ஒரு பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும்.

பிராந்தியத்தில் வர்த்தகம் மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளை அதிகரிக்க முயற்சிப்பதும் முக்கியம்.

இந்தியப் பெருங்கடலின் மத்தியில் தனது மூலோபாய இடத்தைக் கொண்டுள்ள இலங்கை, பிராந்தியத்தில் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதில் பங்கு வகிக்கத் தயாராக உள்ளது.

கப்பல் போக்குவரத்து மற்றும் தொடர்புகள் எமது தேசியப் பொருளாதாரத்தின் தூண்களாக உள்ளதோடு, கடல்சார், விமானப் போக்குவரத்து மற்றும் வர்த்தக மையமாக இலங்கையை அபிவிருத்தி செய்வது பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கக்கூடிய வர்த்தக நடவடிக்கைகளின் வளர்ச்சிக்கு ஏதுவாக அமையும்.

இத்தகைய சூழலில், மிகச் சிறந்த பிரதிபலன்களை அடைந்துகொள்ளக்கூடிய வகையில், பிராந்தியத்தில் வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பதில் பிம்ஸ்டெக் ஆற்றிய முக்கிய பங்கிற்கு அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.

அதே சமயம், உறுப்பு நாடுகளுக்கு இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்தும்போது, வறிய நாடுகளின் தொழில் வளர்ச்சி வாய்ப்புகளை பாதுகாப்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கும் அதேவேளையில், எமது மனித மூலதனத்தையும் உற்பத்தித்திறனையும் மேம்படுத்தக்கூடிய தொழிநுட்ப அறிவு தேவைப்படும் திட்டங்கள் மற்றும் கைத் தொழில்களில் செய்யப்படும் முதலீடுகளை இலங்கை வரவேற்கிறது.

விரிவான கல்வி சீர்திருத்தங்கள் மூலம் நமது மனித வளத்தை மேம்படுத்துவது எனது அரசாங்கத்தின் முக்கிய கொள்கையாகும்.

பொருளாதார வளர்ச்சியில் மனித மூலதன வளர்ச்சியின் பங்கும் தொழில்நுட்பத்தின் பயன்பாடும் மிகையாகாது. பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகள் இதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும் இவற்றில் பல நாடுகள் ஒப்பீட்டளவில் இளம் மற்றும் சுறுசுறுப்பான மக்கள் தொகையைக் கொண்டிருக்கின்றமை ஒரு அதிஷ்டமாகும்.

எதிர்கால தொழில் சந்தை தேவைகளுக்கு ஏற்ப அறிவு மற்றும் திறன்களை வளர்த்துக் கொள்ள உதவும் கல்வி சீர்திருத்தங்கள் மூலம் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உலகுக்கு இலகுவாக அணுகுவதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

டிஜிட்டல் தொழிநுட்பத்திற்கான இலங்கையின் முழுமையான அரச பிரவேசத்தின் மூலம் டிஜிட்டல் தொழில்முனைவோரை ஊக்குவித்தல், தொழிநுட்ப ரீதியாக அறிவுள்ள தொழிற் படையையை கட்டியெழுப்புதல் மற்றும் அனைவருக்கும் பொது சேவைகளை வழங்கும் திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

விஞ்ஞானம், தொழிநுட்பம் மற்றும் புத்தாக்கப் பிரிவை வழிநடத்தும் பொறுப்பை வகிக்கும் உறுப்பு நாடு என்ற வகையில், கொழும்பு பிம்ஸ்டெக் தொழில்நுட்ப பரிவர்த்தனை வசதியை நடைமுறைப்படுத்துவதற்கு வழிவகுக்க கிடைத்தமைக்காக இலங்கை பெருமை கொள்கிறது.

இந்த வசதிகள் மூலம் உறுப்பு நாடுகளுக்கு இடையில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறைகளில் எதிர்கால ஒத்துழைப்பை மேம்படுத்தி அதன் மூலம் உறுப்பு நாடுகளுக்கு இடையே பொருளாதார செழுமையை அடைந்துகொள்ள பங்களிப்பை வழங்க முடியும்.

இந்தச் சூழலில், நமது நாடுகளுக்கு பொதுவாக உள்ள மத மற்றும் கலாசார பாரம்பரியம், ஆழமான வரலாற்று நாகரீக உறவுகள் மற்றும் ஏராளமான இயற்கையின் கொடைகளை அடைந்துகொண்டுள்ளதன் பாக்கியத்தை வலியுறுத்துவதும் முக்கியம் ஆகும்.

ஏறக்குறைய இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு புத்துயிர் பெற்று வரும் சுற்றுலாத் துறை, அனைத்து பிம்ஸ்டெக்  நாடுகளுக்கும் பெரும் ஆற்றலை வழங்குகிறது.

எனவே, பிராந்தியத்தில் சுற்றுலாக் கைத்தொழிலை மேம்படுத்துவதில் பிம்ஸ்டெக்கின்  நிகழ்ச்சி நிரலில் முக்கிய அவதானத்தை செலுத்த வேண்டும்.

இது குறுகிய கால பொருளாதார மீட்சிக்கு வழிவகுக்காமல், நீண்ட கால அடிப்படையில் உறுப்பு நாடுகளுக்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும்.

மேலும் முன்னேற்றமான பிராந்திய புரிதல் மற்றும் மீள்தன்மையை அடைவதற்காக பிராந்தியத்தில் உள்ள மக்களை இணைத்துக் கொள்வதும் முக்கியம்.

கௌரவமான அதிதிகளே,

எதிர்பாராத நிகழ்வுகளின் போது நமது சமூகம் எவ்வளவு விரைவாக மாறுகிறது என்பதை

கடந்த கால நிகழ்வுகள் நமக்குக் கற்றுத்தந்த மிகக் கடினமான பாடங்களில் ஒன்றாகும்.

எவ்வாறு இருப்பினும், அனைத்து நாடுகளிலும் மோசமாக தொற்றுநோய் பரவினாலும், மனிதனால் உருவாக்கப்பட்ட காலநிலை மாற்றத்தின் விளைவுகள் நீண்ட காலம் நீடிப்பதோடு மிக மோசமான நிலையை அடையும் வாய்ப்பும் உள்ளது.

ஏற்கனவே, பல பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகள் பருவநிலை மாற்றத்தின் அபாயத்தில் உள்ளன. காலநிலை மாற்றம் மோசமடைவதால், இந்த நிலைமைகளில் அதன் தாக்கம் அதிகரிக்கும்.

அதனால்தான் பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினைகளில் உறுப்பு நாடுகள் தொடர்ந்தும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும்.

எதிர்கால அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள பிராந்தியத்தை தயார்படுத்துவதற்கு சுற்றுச்சூழல் திட்டங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் ஆகியவற்றிலும் நாம் இணைந்து பணியாற்ற வேண்டும்.

புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்தல், புதுப்பிக்கத்தக்க வலுசக்தியில் முதலீடு செய்தல் மற்றும் பிராந்தியத்தில் முழுவதும் பசுமை அல்லது இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தல், அத்துடன் உணவுப் பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை ஆகியவற்றை மேம்படுத்துதல் அவசியம்.

காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு சாசனத்துக்கு ஏற்ப நமது இலட்சியம் மற்றும் புதுப்பிக்கப்பட்டதும் தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புடன் பிரதிபலிக்கின்ற வகையில் இலங்கையின் கொள்கை கட்டமைப்பில் நிலைத்தல் தன்மை முக்கிய பங்கு வகிக்கிறது.

2030 ஆம் ஆண்டளவில் தேசிய வலுசக்தி தேவைக்கு புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்களின் பங்களிப்பை 70% வரை அதிகரிப்பதற்கும், 2050 ஆம் ஆண்டளவில் இலங்கையை கார்பன் பூஜ்ஜிய நாடாக மாற்றுவதற்கும், புதிய நிலக்கரி அற்ற வலுசக்தி சாசனத்தின் இணைத் தலைவராக புதிய நிலக்கரி வலுத்திட்டங்கள் செயற்படுத்தப்பட மாட்டாது என்பதை உறுதி செய்வதற்கு நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம்.

நிலையான நைட்ரஜன் மேலாண்மை தொடர்பான கொழும்பு பிரகடனத்தின் மூலம்  2030 ஆம் ஆண்டளவில் நைட்ரஜன் கழிவு வெளியேற்றத்தை பாதியாக குறைக்க நாடுகளை ஊக்குவிக்கிறது.

பொதுநலவாய அமைப்பின் ‘நீல சாசனம்’ மூலம் சதுப்புநிலப் பாதுகாப்பிற்காக இலங்கை தலைமைத்துவம் வழங்கி முன்னணி வகிக்கிறது.

பசுமை விவசாயமும் இலங்கை அரசாங்கத்தின் முக்கிய திட்டமாக மாறியுள்ளது.

நமது கிராமப்புற மக்களில் பெரும்பாலானோர் விவசாயம் அல்லது அதை சார்ந்த துறைகளில் தொழில்களில் ஈடுபடுகிறார்கள்.

சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தாமல் விவசாய உற்பத்தியை அதிகரிக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முறைகள் மற்றும் நடைமுறைகளை பின்பற்றுவது இத்துறையின் நிலையான வளர்ச்சிக்கு அவசியம்.

செயற்கை உரங்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பது நமது எதிர்கால சந்ததியினரின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பங்களிக்கும்.

தொழிற்சாலைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளால் நதிகள் மற்றும் கடல் மாசடைவதைக் குறைப்பதுடன் நிலத்தடி நீரைப் பாதுகாப்பதும் ஒரு சேர அவசியம் ஆகும்.

இந்த விடயங்களில் உறுப்பு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை மேம்படுத்த பிம்ஸ்டெக் உடன் இணைந்து பணியாற்ற இலங்கை தயாராக உள்ளது.

கௌரவமான அதிதிகளே,

எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் இருந்தபோதிலும், பிம்ஸ்டெக்கின் எதிர்காலம் தெளிவாகவும் வலுவாகவும் உள்ளது என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

நமது கூட்டு முயற்சிகள் மூலம், பிம்ஸ்டெக்கின் இன்றைய மாநாட்டின் கருப்பொருளில் முன்னிலைப்படுத்தப்பட்ட அபிலாஷைகளை நாம் அடைய முடியும்.

பிம்ஸ்டெக் ஆனது, உலகில் ஆசியாவில் ஒரு முக்கியமான கூட்டுக் குரலாக மாறுவதற்கான ஆற்றலையும் கொண்டுள்ளது.

நமது பிராந்தியம், நமது நாடுகள் மற்றும் நமது மக்கள் அனைவருக்காகவும் இதனை அடைய நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.

உங்கள் அனைவருக்கும் நன்றி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.