இது புரட்சித் தலைவரை அவமானப்படுத்தும் செயல்.. திமுக அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்.!!

மத்திய சதுக்க சுரங்க நடைபாதை திறப்பு விழா விளம்பரத்தில், புரட்சித்தலைவர் என்ற அடைமொழியை விடுத்து, டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய இரயில் நிலையம் என்று மட்டும் குறிப்பிட்டிருப்பது திமுக அரசின் காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது. இச்செயலுக்கு எனது கடும் கண்டனங்கள் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார் 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மத்திய சதுக்கத் திட்டத்தின்கீழ் அழகுபடுத்தப்பட்ட நில மேம்பாட்டு வசதிகள் மற்றும் சுரங்க நடைபாதையை இன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைப்பது தொடர்பான விளம்பரம் முக்கியமான நாளிதழ்களில் இன்று இடம் பெற்றிருந்தன. இந்த விளம்பரத்தில், இந்த விழா நடைபெறும் இடம் “டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் மத்திய இரயில் நிலையம்” என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆனால், அந்த இடத்திற்கு “புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் மத்திய இரயில் நிலையம், சென்னை ” என்றுதான் பெயர். ‘புரட்சித் தலைவர்’ என்ற சொற்கள் விளம்பரத்தில் வேண்டுமென்றே விடுபட்டு இருக்கிறது. இது தி.மு.க. அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு ஓர் எடுத்துக்காட்டு.

மறைந்த தி.மு.க. தலைவர் பெயரை “கலைஞர்” என்ற அடைமொழியோடு குறிப்பிடுகின்ற நேரத்தில், தி.மு.க. ஆட்சிக்கு வந்ததற்கு மூல காரணமானவரும், பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு, தனியாக ஒரு கட்சியை ஆரம்பித்து அந்தக் கட்சியை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி மாபெரும் மக்கள் புரட்சி செய்தவருமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்குள்ள அடைமொழியான “புரட்சித் தலைவர்” என்ற வார்த்தைகள் விடுபட்டு இருப்பது புரட்சித் தலைவரை அவமானப்படுத்தும் செயலாகும். இதனை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். இனி வருங்காலங்களில், ‘புரட்சித் தலைவர்’ என்ற அடைமொழி இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.