"நீங்க ஆடக் கூடாது".. தடை போட்ட கோவில்.. ஏன் இந்த அநீதி.. குமுறலில் செளம்யா!

கேரள கோவில்கள் தற்போது சர்ச்சைக் களங்களாக மாறி வருகின்றன. இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவரான பரதநாட்டியக் கலைஞர் மான்சியாவுக்கு கோவிலில் நடனமாட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தற்போது

கிறிஸ்தவரான நாட்டியக் கலைஞர்
செளம்யா சுகுமாறன்
டான்ஸ் ஆடவும் ஒரு கோவில் நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.

பிரபலமான பரதநாட்டியக் கலைஞரான மான்சியா சமீபத்தில் திருச்சூர் மாவட்டம் கூடல்மாணிக்கம் கோவில் விழாவில் நடனமாடுவதாக இருந்தது. ஆனால் திடீரென கோவில் நிர்வாகம் அவர் நடனம் ஆட அனுமதி மறுத்து விட்டது. அவர் முஸ்லீம் என்பதால் ஆடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்துக்கள் அல்லாதோர் நடனமாட முடியாது என்று அதற்குக் காரணம் கூறப்பட்டது.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளையும், விமர்சனத்தையும் கிளப்பியது. காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் இந்த சம்பவத்தைக் கண்டித்திருந்தார். இந்த நிலையில் அதேபோல இன்னொரு சம்பவம் நடந்துள்ளது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் நாட்டியக் கலைஞர் செளம்யா சுகுமாறன். இவர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். இவரும் அதே கூடல்மாணிக்கம் கோவிலில் நடனமாடுவதாக இருந்தார். ஆனால் கிறிஸ்தவர் என்பதால் இவருக்கும் நடனம் ஆட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செளம்யா கூறுகையில்,எனக்கு ஏன் அனுமதி இல்லை கேட்டபோது நான் கிறிஸ்தவர் என்பதாலும், இந்துக்கள் அல்லாதோர் நடனமாட அனுமதி இல்லை என்றும் பதில் கிடைத்தது. அதற்கு நான் எனது தந்தை இந்துதான். அவர் தனது திருமணத்திற்குப் பின்னர் மதம் மாறியவர் என்றேன். ஆனால் அந்த விளக்கத்தை அவர்கள் ஏற்கவில்லை. கோவிலுக்கு வெளியே விழா நடப்பதாக இருந்தால் பரவாயில்லை, நடனமாட அனுமதிக்க முடியும். ஆனால் இந்த நடன விழா கோவிலுக்குள் நடப்பதால் அனுமதிக்க முடியாது என்று கூறி விட்டனர். இதனால் நான் எனது வாதத்தை விட்டு விட்டு வந்து விட்டேன் என்றார்.

செளம்யா மேலும் கூறுகையில், நான் கோவில்களில் இந்துப் பாடல்களுக்கு நடனமாடுவதால் எனது மதத்திலும் கூட எனக்கு பல பிரச்சினைகள் வருகின்றன. நான் சர்ச்சுகளில் மத வழிபாட்டு சேவைகளை நடத்த அனுமதிக்கப்படுவதில்லை. இப்போது நான் எந்த மதத்தைச் சேர்ந்தவள் என்றே எனக்குத் தெரியவில்லை என்றார்.

முன்னதாக இந்த விவகாரம் குறித்து சசி தரூர் கூறகையில்,கலைக்கு எந்த மதமும் இல்லை. குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு மட்டுமே கலைஞர்களைச் சொந்தம் கொண்டாடினால் பக்திப் பாடல்களுக்கு மட்டுமே நம்மால் நடனம் ஆட முடியும்.

கோவில்களில் கருவறை உள்ளிட்ட சில பகுதிகளுக்கு பிற மதத்தவர் செல்வதற்குக் கட்டுப்பாடு உள்ளதை நான் அறிவேன். அதேசமயம், கோவில் வளாகத்தில் நடனம் ஆடுவதற்கு அனுமதி மறுப்பது ஏன் என்றுதான் புரியவில்லை. கோவில் நிர்வாகம் கலைஞர்களை நடனமாட அனுமதி மறுத்துள்ளது வருத்தத்திற்குரியது. இது நமது சமூகத்திற்கு கேடாகும். மேலும் நமது மதம் குறித்த தவறான கருத்தை பிற மதத்தவர் மத்தியில் ஏற்படுத்தி விடும் என்றார் சசி தரூர்.

தமிழகத்திலும் கூட இதேபோன்ற ஒரு பிரச்சினை சமீபத்தில் வெடித்தது. ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்ற இஸ்லாமியரான பரதநாட்டியக் கலைஞர் ஜாகிர் உசேனை உள்ளே வரக் கூடாது என்று கூறி வெளியேற்றப்பட்டார். இதனால் பெரும் சர்ச்சை வெடித்தது. இந்த நிலையில் இப்போது கேரளாவிலும் அடுத்தடுத்து நடனக் கலைஞர்களுக்கு தடை வருவது பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.

அடுத்த செய்திபாதுகாப்பு முக்கியத்துவம்: பிரதமர் மோடி வலியுறுத்தல்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.