நீதிமன்ற உத்தரவுகளை உடனே தெரிந்து கொள்ள புது சாப்ட்வேர்: உச்ச நீதிமன்றத்தில் அறிமுகம்

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை கீழமை நீதிமன்றங்கள் உடனடியாக தெரிந்து கொள்ள வசதியாக புதிய சாப்ட்வேர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குற்ற வழக்கில் சிக்கிய குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியும்,  அதற்கான உத்தரவுகள் கிடைக்காததால் அவர்களை விடுவிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இது தொடர்பான வழக்கை தாமாக முன்வந்து ஏற்று கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ‘இந்த நவீன தொழில்நுட்ப காலத்தில் நீதிமன்ற உத்தரவுக்காக புறாவை எதிர்நோக்கி வானை பார்க்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையை தவிர்க்க நீதிமன்ற தீர்ப்புகளை வெளியிடும் வகையில் புதிய சாப்ட்வேர் கண்டுபிடிக்க வேண்டும்,’ என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  இந்நிலையில், நீதிமன்ற செயல்பாடுகளுக்காக ‘பாஸ்ட்டர்’ என்ற  புதிய சாப்ட்வேரை தேசிய தகவலியல் மையம் கண்டுபிடித்துள்ளது. இதன் அறிமுக விழா நேற்று டெல்லியில் நடந்தது. தொடக்க விழாவில் பேசிய தலைமை நீதிபதி ரமணா, ‘‘இந்த சாப்ட்வேர் குறுகிய காலத்துக்குள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் இணைக்கும் வகையில் 73  நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். நோடல் அதிகாரிகள் அனைவரும் பிரத்யேக தொலைதொடர்பு நெட்வொர்க்கில் இணைக்கப்படுவர். இந்த திட்டத்துக்காக நாடு முழுவதும் 1,887 இ மெயில் முகவரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஜாமீன்  கோரிய வழக்கில் நீதிமன்ற உத்தரவுகள், தீர்ப்புகள் உள்ளிட்டவை  சம்பந்தப்பட்ட நோடல் அதிகாரிகள் மற்றும் நீதிமன்றங்களுக்கு அனுப்பப்படும். இந்த முறையில்  நேரம் வீணாவது பெருமளவு தவிர்க்கப்படும். அதே போல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும்  முடிவுகள் எடுக்கும் வகையில் அவர்களுக்கு உடனே உத்தரவுகள் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும்,’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.