பள்ளிச் சென்றுத் திரும்பிய மகளுக்குக் காத்திருந்த அதிர்ச்சி! – திருவள்ளூரில் சோகம்

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அருகில் உள்ள கீழ் நல்லாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல். இவர் அர்ச்சனா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு 14 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர். வடிவேல் ரேவதி என்ற பெண்ணை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டிருக்கிறார். வடிவேல், ரேவதி தம்பதியினருக்கு 13 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். வடிவேலு, தன் முதல் மனைவியைப் பிரிந்து தற்போது இரண்டாவது மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்துவந்துள்ளார்.

தற்கொலை

வடிவேல் தனியார் நிறுவனத்தில் காவல் பணியாளராக வேலைபார்த்து வருகிறார். இந்த நிலையில், வழக்கம் போல ரேவதியின் மகள் பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் வராண்டாவில் ரேவதியும், வீட்டின் அறையினுள் வடிவேலுவும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதைக் கண்டு கதறி அழுதிருக்கிறாள். குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்திருக்கின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்குத் தகவல் கூறப்பட்டது. தகவலறிந்து வந்த மணவாளநகர் காவல்துறையினர், இறந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இருவரும் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில், வடிவேலுக்கும், ரேவதிக்கும் அவ்வப்போது தகராறு ஏற்படும் என்று தெரியவந்துள்ளது.

தற்கொலை

மேலும், சமீபத்தில்தான் ரேவதியின் பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார்கள். அதோடு, ரேவதிக்கு ஒரு புதிய இருசக்கர வாகனத்தை வாங்கி கொடுத்திருக்கிறார் வடிவேலு. இவர்களின் தற்கொலைக்கு, குடும்ப பிரச்னை காரணமா இல்லை கடன் தொல்லையா என்பது குறித்து காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தாய், தந்தை இருவரையும் இழந்து தனியே தவிக்கும் குழந்தை குறித்த செய்தி அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.