பிரான்ஸ் – இலங்கை பாராளுமன்ற நட்புறவுச்சங்க பிரதிநிதிகள் சிலர் இலங்கை பாராளுமன்றம் விஜயம்

பிரான்ஸ் – இலங்கை பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவரும் பிரான்ஸ் பாராளுமன்ற செனட் உறுப்பினருமான ஜொஎல் கெரியோ (Joel Guerriau) உள்ளிட்ட பிரான்ஸ் – இலங்கை பாராளுமன்ற நட்புறவுச்சங்க பிரதிநிதிகள் சிலர் இலங்கை பாராளுமன்றத்துக்கு அண்மையில் விஜயம் செய்தனர்.

நட்புறவுச்சங்கத்தின் பிரதித் தலைவி செனட் உறுப்பினர் அனிக் ஜக்மன்ட் (Annik Jacquemet), சங்கத்தின் உறுப்பினர் அலன் ஹூபர்  (Alain Houpert) மற்றும் சங்கத்தின் நிறைவேற்று செயலாளர் திருமதி. ஏன் லோரா (Anne Laure) உள்ளிட்டோர் இதன்போது கலந்துகொண்டனர்.  

பிரதிநிதிகள் சபாநாயகரின் கலரியிலிருந்து பாராளுமன்ற அமர்வை பார்வையிட்டதுடன், இதன்போது தலைமை ஆசனத்திலிருந்த குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன் பிரான்ஸ் பிரதிநிதிகளை வரவேற்று சபையில் விசேட அறிவிப்பை மேற்கொண்டார்.

அதனையடுத்து, இரு நாட்டு பாராளுமன்ற நட்புறவுச் சங்கங்களுக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. இங்கு பிரதிநிதிகளை வரவேற்று உரையாற்றிய பாரளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன், ஏழு தசாப்தங்களாக இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையில் காணப்படும் வலுவான தொடர்புகளை இருநாட்டு பாராளுமன்ற நட்புறவுச்சங்கங்கள் ஊடாக மேலும் மேம்படுத்த எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். அபிவிருத்திக்கான பிரான்ஸ் முகவரகம் (AFD) மூலம் இலங்கைக்கு அபிவிருத்தி உதவிகளை வழங்குவது தொடர்பிலும் அவர் நன்றிகளை தெரிவித்தார்.

பிரான்ஸ் – இலங்கை பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவரும் பிரான்ஸ் பாராளுமன்ற செனட் உறுப்பினருமான ஜொஎல் கெரியோ (Joel Guerriau) குறிப்பிடுகையில், பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையில் பல்வேறு துறைகளில் காணப்படும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும், இலங்கையின் அபிவிருத்திக்கு தொடர்ந்தும் பங்களிப்பு செய்வதாகவும் தெரிவித்தார். இலங்கை சபாநாயகர் உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு பிரான்ஸ் வருமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லவரத்து, இலங்கை – பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் இசுறு தொடங்கொட, இராஜாங்க அமைச்சர் தாரக பலசூரிய, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜே.சி. அலவதுவல, யதாமினி குணவர்தன, கீதா குமாரசிங்க, டயனா கமகே, அரவிந்த குமார், ஹெக்டர் அப்புஹாமி, கோகிலா குணவர்தன, மேஜர் சுதர்ஷன தெனிபிடிய, வசந்த யாப்பா பண்டார, பிரேம்நாத் சி. தொலவத்த, மதுர விதானகே மற்றும் பாராளுமன்ற பணியாட்கள் தொகுதியின் தலைவரும் பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹனத்தீர ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.