ஹேமா கமிட்டி அறிக்கையில் சினிமா பிரபலங்களின் முகத்திரை கிழியும்: பார்வதி ஆவேசம்

2017ம் ஆண்டு மலையாள சினிமாவின் முன்னணி நடிகை கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் முன்னணி நடிகர் திலீப் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு நடந்து வருகிறது.

இதை தொடர்ந்து மலையாள சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண் தொழில்நுட்ப கலைஞர்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சினைகள் குறித்து விசாரித்து, அறிக்கை வழங்க நீதிபதி ஹேமா தலைமையிலான கமிஷன் ஒன்றை கேரள அரசு நியமித்தது. இந்த குழு தனது அறிக்கையை 2019ம் ஆண்டு டிசம்பரிலேயே சமர்ப்பித்து விட்டது. ஆனாலும் அரசு அதனை இதுவரை வெளியிடவில்லை. இந்த அறிக்கை குறித்து ஆய்வு செய்ய மற்றொரு குழுவை அமைத்து காலம் தாழ்த்துகிறது அரசு. காரணம் அந்த அறிக்கையில் பல முன்னணி நடிகர்கள் பற்றிய ரகசியங்கள் சொல்லப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து நடிகை பார்வதி கடுமையாக பேசியுள்ளார். தனியார் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பார்வதி இதுகுறித்து கூறியதாவது: கேரள அரசு முடிந்தவரை இந்த அறிக்கையை முடக்க முயற்சிக்கிறது. இதனால், மூன்று ஆண்டுகளாக இந்த அறிக்கைக்கான காத்திருப்பு நீடிக்கிறது. அறிக்கையை இறுதி செய்து மூன்று ஆண்டுகள் ஆகியும் வெளியிடப்படவில்லை. அதற்கு பதிலாக, இந்த அறிக்கையை ஆய்வு செய்ய மற்றொரு குழு அமைக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்னும் ஒரு குழு அமைக்கப்படலாம்.

தேர்தல் வந்தவுடன் இந்த அறிக்கை திடீரென வெளிவரும். பெண்களுக்கு ஆதரவான அரசாக இது மாறும் . இது என்னுடைய கணிப்பு. எனவே தேர்தல் வரும் வரை காத்திருப்போம். அதேநேரம், இந்த அறிக்கை வெளிவந்தால் திரையுலகில் நாம் கொண்டாடும் பல முக்கிய பிரபலங்களின் முகத்திரைகள் கிழியும். என்று பேசியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.