அரசியலுக்கு கட்! ஆபாசத்திற்கு ஓகே! – சென்சார் போர்டு பாரபட்சம்!

மதிமாறன்
இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, வாகை சந்திரசேகர் உள்ளிட்டோர் நடிக்கும்,
செல்ஃபி திரைப்படம்
இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. .

தனியார் கல்லூரிகளில் புதிதாக மாணவர்களை சேர்க்கும் புரோக்கர்களாக சீனியர் மாணவர்கள் ஆக்கப்படுவது குறித்த திரைப்படம்.

படத்தின் இறுதியில் ஒரு கார்டு போடப்படுகிறது. அதில், ‘ சில கல்லூரிகளின் கல்வி வணிகத்தில் மாணவர்கள் கல்வி தரகர்களாக மாறிக்கொண்டு இருப்பது பெரும் துயரம்.

சமூக நீதியும், ‘….. ‘ம், கட்டமைத்து முன்னேற்றிய நம் கல்வியை மீட்பது நம் அனைவரின் கடமை’ என்று வார்த்தைகள் இருந்தன.

இதுதொடர்பாக இயக்குநர் மதிமாறனிடம் கேட்கப்பட்டபோது,

அவர், “அந்த இடத்தில் ‘இருமொழிக் கொள்கை’ என்ற வார்த்தைகளை வைத்திருந்தேன். தணிக்கை குழு (சென்சார்) உறுப்பினர்கள், ‘மும்மொழிக் கொள்கை’ என போடுங்கள்’ என உத்தரவிட்டார்கள். அதில் எனக்கு உடன்பாடில்லை.. ஆகவே, அந்த வார்த்தைகளை அழித்துவிட்டேன்” என்றார்.

ஒன்றிய அரசு மும்மொழிக் கொள்கை என்பதற்கான அலுவல் ரீதியான உத்தரவு எதையும் இதுவரை வெளியிடவில்லை. அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மூன்று மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டால் அனைத்து பள்ளிகளிலும் மும்மொழி படிக்க வேண்டும் என்கிறது ஒன்றிய அரசு. இது இன்னும் அமல்படுத்தப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தமிழக அரசின் நிலைபாடு இருமொழி கொள்கைதான் என காலம் காலமாக முதலமைச்சர்கள் – மாநில அரசுகள் சொல்லி வருகின்றன. கடந்த அ.தி.மு.க. ஆட்சிகாலத்தில்கூட அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.. தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் இருமொழி கொள்கைதான் என்று தெரிவித்துள்ளார். .

ஆனால், தணிக்கை குழுவோ, மும்மொழி கொள்கை என்று போடுங்கள். இல்லாவிட்டால் அங்கு வார்த்தைகளே வரக்கூடாது என்பது அதிர்ச்சி அளிப்பதகாவும், தமிழில் உருவாக்கப்பட்டு, தமிழ்நாட்டில் வெளியாகும் திரைப்படத்தில், தமிழக அரசின் கொள்கையை வெளியிட முடியவில்லை என்பதே உண்மை நிலவரமாக இருக்கிறது.

பாரபட்சம் காட்டும் சென்சார் போர்டு

காலம்காலமாகவே சென்சார் போர்டு இப்படித்தான் இருக்கிறது. திரைத்துறைக்கு தொடர்பே இல்லாத லீலா சாம்சன், 2011ல் மத்திய தணிக்கை குழு தலைவராக நியமிக்கப்பட்டார். “சினிமாவுக்கும் எனக்கும், படம் பார்ப்பேன் என்பதுதான் தொடர்பு” என வெளிப்படையாகவே சொன்னவர் தான் லீலா சாம்சன்.

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு சொல்லவே வேண்டாம். 2015ல், ‘மத்திய தணிக்கை குழு’வில் இந்துத்துவா சிந்தனை கொண்டவர்கள் நியமிக்கப்பட்டார்கள். குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட பஹ்லாஜ் நிஹாலனி, நரேந்திர மோடிக்கான பிரசார வீடியோவை தயாரித்தவர். குழு உறுப்பினர்களில் ஒருவரான ரமேஷ் படாங்கே. ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதி; விவேக் தலைப்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பற்றி புத்தகம் எழுதியவர். அவர்களோடு, பாரதிய ஜனதாவின் பொதுச்செயலர் வாணி திரிபாதி, பா.ஜ.க. பிரமுகர்களில் ஒருவரான ஜீவிதா ராஜசேகர் உள்ளிட்டோரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

திரைப்படங்களை கலையாகப் பார்க்காத, பார்க்க முடியாத கண் உடையவர்கள்தான் தணிக்கை வாரியத்துக்கு நியமிக்கப்படுகிறார்கள். இதனால்தான் ஒன்றிய அரசை அரசியல் ரீதியாக விமர்சிக்கும் படங்கள் தடைக்கும், வெட்டுக்கும் ஆளாகின்றன.

ராஜூ முருகன் இயக்கத்தில் ஜீவா நடித்த ஜிப்ஸி திரைப்படத்தைச் சொல்லலாம். ஒருவழியாக பல காட்சிகள் வெட்டப்பட்டு 2019ல் வெளியானது. ‘தொடர்பற்ற காட்சிகளால் படம் புரியவில்லை’ என்றனர் ரசிகர்கள்! எல்லாம் தணிக்கை குழுவின் கைவண்ணம். படம் தோல்வி அடைந்தது. ப்ளூ சட்டை மாறன் இயக்கிய ஆன்ட்டி இன்டியன் திரைப்படத்துக்கு முழுமையாக தடை விதித்தது தடைக்குழு. பிறகு 30க்கும் மேற்பட்ட வெட்டுகளைக் கொடுத்தது. இல்லாவிட்டால் திரையிட தடை என்றது.

இதற்கு ஒப்புக்கொள்ளாத படக்குழு, நீதிமன்றத்தை நாடியது. ‘படத்தை தடை செய்ய எந்த காரணமும் இல்லை. படத்தைப் பார்த்து சான்றிதழ் கொடுங்கள்’ என உத்தரவிட்டது நீதிமன்றம். பிறகு (ஒரு இடத்தில் மியூட் என்பதோடு) படம் வெளியானது.

அரசியல் ரீதியான படங்களுக்குத்தான் இந்த தடை,வெட்டு எல்லாம். ஆபாசத்துக்கோ, வன்முறைக்கோ இல்லை என்பதுதான் சோகம்.

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற ஒரு திரைப்படம் வெளியானது நினைவில் இருக்கும். படு ஆபாச திரைப்படம் என முகம் சுழிக்கவைத்தது. “இவ்வளவு ஆபாசமாக படத்தை எப்படி சென்சார் போர்டு அனுமதித்தார்கள்” என சினிமா துறையை சேர்ந்த பலரே விமர்சித்தனர், கண்டனம் தெரிவித்தனர். அந்த படம் தணிக்கை சான்றிதழ் பெற்று வெளியானது.

அதே போல வன்முறை காட்சிகளும் தணிக்கை குழுவினரின் கண்களில் படுவதில்லை. பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த கபாலி திரைப்படத்தை உதாரணமாகச் சொல்லலாம் இதில் வன்முறை காட்சிகள் அதிகம் இருக்கின்றன என, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட சில நாடுகளில் சிறுவர்கள் பார்க்க தடை விதிக்கப்பட்டது. ஆனால் தமிழ், தெலுங்கு, இந்தியில் இங்கு வெளியான இப்படத்துக்கு கிடைத்தது யு சான்றிதழ். அதாவது சிறுவர் உள்ளிட்ட அனைவரும் பார்க்கலாம் என்கிறது சென்சார் போர்டு. இதில் ஆச்சரியம் என்னவென்றால், “படத்தில் வன்முறை அதிகம் என்பதை ஒத்துக் கொள்கிறேன். இது எதார்த்தத்திற்கு மீறியதுதான். கதையின் சுவாரஸ்யத்திற்காக வைத்தேன்” என்றார் இயக்குநர் பா.ரஞ்சித்.

இந்த களேபாரத்துக்கிடையேதான், டிரிபியூனல் என்கிற தணிக்கை அமைப்பை அதிரடியாக கலைத்தது பாஜக அரசு. மண்டல தணிக்கை அலுவலத்தில் கொடுக்கப்பட்ட சான்றிதழ், வெட்டுகளில் படக்குழுவினருக்கு திருப்தி இல்லை என்றால் ட்ரிபியூனலை அணுகலாம்.

இது கலைக்கப்பட்டதால், நேரடியாக , நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டும். நீதிமன்றத்தின் பல வழக்குகளில் இவையும் சேர்வதால் தாமதமாகும். தவிர பணச் செலவும் அதிகம். இதற்கிடையேதான், ஒன்றிய அரசு கொண்டு வர திட்டமிடும் ‘ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா’ மிரட்டுகிறது. இது நடைமுறைக்கு வந்தால் தணிக்கை குழுவுக்கு – ஒன்றிய அரசுக்கு இன்னும் அதிகாரம் குவியும்.

உதாரணமாக, தணிக்கை ஆகி வெளியான திரைப்படத்தை மீண்டும் தணிக்கை செய்ய முடியும். ஆனால் இப்போதே அதுபோன்ற நிலை ஏற்பட்டுவிட்டதோ என எண்ண வைக்கிறது,
செல்ஃபி
படத்தில், இருமொழிக் கொள்கை என்ற வார்த்தைகள் நீக்கப்பட்ட விசயம்.!

சில படங்கள் வெளியான பிறகு, சாதி மத அமைப்புகளால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு சிக்கலை சந்திக்கின்றன. இனி, தணிக்கை குழுவிலேயே அது போன்ற பிரச்சினைகளை (இன்னும் அதிகமாக) சந்திக்க வேண்டி இருக்கும் என தோன்றுகிறது.

வாழ்க கருத்து சுதந்திரம்!

விமர்சகர்

டி.வி.சோமு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.