ஆந்திரா அரசு மருத்துவமனையில் எலி கடித்து நோயாளி சாவு: 2 டாக்டர்கள் சஸ்பெண்ட்

திருமலை: தெலங்கானா மாநிலம், ஹனுமகொண்டா மாவட்டம், பீமாரான் பகுதியை சேர்ந்தவர் சீனிவாஸ் (40). சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட இவர், சில நாட்களுக்கு முன்பு வாரங்கல் எம்ஜிஎம். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசம் அளித்து, மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வந்தார்.இந்நிலையில், 4 நாட்களுக்கு முன்பு சீனிவாஸின் கால், கை விரல்களை மருத்துவமனையில் சுற்றித் திரிந்த எலிகள் கடித்து குதறின. ரத்த காயங்களுடன் சீனிவாஸ் இருப்பதை கவனித்த அவரது உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்து, மருத்துவமனை நிர்வாகத்துடன் கடும் வாக்குவாதம் செய்தனர்.இதையடுத்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைக்கு பிறகு அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் சீனிவாச ராவ் நேற்று முன்தினம் இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும், பணியில் அலட்சியமாக இருந்ததாக 2 டாக்டர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில், மாநில பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் எர்ரபெல்லி தயாகர் ராவ், மருத்துவ கல்வி இயக்குநர் ரமேஷூடன் நேற்று முன்தினம் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தார். சீனிவாஸின் உடல் நிலை குறித்து அங்கிருந்த டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.அவருக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுவதை அறிந்த அமைச்சர், ஐதராபாத் அரசு நிம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றி உரிய சிகிச்சை அளிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, சீனிவாஸ் உடனடியாக ஐதராபாத் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சீனிவாஸ் நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.