காங்கிரஸுக்கு கொடுத்த ஆதரவை திமுக விலக்கிக் கொண்டிருந்தால் நீட் பிரச்சினையே வந்திருக்காது: ஓபிஎஸ்

சென்னை: நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட போதே, மத்திய காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவை திமுக விலக்கிக் கொண்டிருந்தால் பிரச்சனையே வந்திருக்காது என சட்டப்பேரவை துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “2010ம் ஆண்டு மத்திய காங்கிரஸ் அரசால் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட போதே, மத்திய காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவை திமுக விலக்கிக் கொண்டிருந்தால் இன்று ‘நீட்’ என்ற பிரச்சனையே வந்திருக்காது. ஆனால், இதை திமுக செய்யவில்லை. இதன் காரணமாக பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் ஏழை, எளிய கிராம மக்கள்.

எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டுமென்பதற்காக, 2021ம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது, திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு உடனடியாக ரத்து செய்யப்படும் என்றும், அதனை ரத்து செய்கின்ற ரகசியம் திமுக-விற்கு தெரியும் என்றெல்லாம் தேர்தல் பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆனால், இன்று வரை நீட் தேர்வு ரத்து குறித்து எந்தவிதமான அறிவிப்பும் இல்லை. மத்திய அரசில் அங்கம் வகித்தபோது செய்யாத திமுக, இப்போது அதை ரத்து செய்யப் போவதாக கூறுவது தும்பை விட்டு வாலைப் பிடிப்பது போல் அமைந்துள்ளது என்ற எண்ணம் மக்கள் மனதில் மேலோங்கி உள்ளது.

“திமுக ஆட்சி அமையும்போது ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்படும். நீட் தேர்வினால் வாய்ப்பை இழந்தவர்களுக்கு பொதுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவம் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். இது உறுதி. எட்டு மாதங்கள் பொறுத்திருங்கள். கலங்காதிருங்கள். விடியல் பிறக்கும்” என்று தமிழக சட்டமன்றப் பேரவைத் தேர்தலுக்கு முன் அறிக்கை விடுத்தவர் முதல்வர். இந்தச் செய்தி 12-9-2020 நாளிட்ட பத்திரிக்கைகளில் செய்தியாக வந்துள்ளது.

தமிழக சட்டமன்றப் பேரவைப் பொதுத் தேர்தலை முன்னிட்டு மக்களுக்கு தேர்தல் வாக்குறுதிகளை திமுக அளித்தது. அதில், “கழக ஆட்சி அமைந்தவுடன் முதல் கூட்டத் தொடரிலேயே நீட் தேர்வை ரத்து செய்யும் சட்டத்தை நிறைவேற்றிக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்” என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இன்று ஆட்சி அமைத்து கிட்டத்தட்ட 11 மாதங்கள் உருண்டோடி விட்டன. ஒரு கல்வியாண்டும் கடந்து விட்டது. இரண்டாவது கல்வியாண்டு ஆரம்பிக்க இருக்கிறது. ஆனால் இன்னும் விடியல் பிறக்கவில்லை.

நீட் தேர்வு ரத்து குறித்த சட்டமுன்வடிவு தமிழக சட்டமன்றப் பேரவையில் 13-09-2021 அன்று நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமுன்வடிவின் நிலைப்பாடு குறித்து அரசு எந்தத் தகவலையும் தெரிவிக்காத நிலையில், 01-02-2022 அன்று நீட் தேர்வு ரத்து சட்டமுன்வடிவு மறுபரிசீலனை செய்யக் கோரி தமிழ்நாடு அரசிற்கு திருப்பி அனுப்பப்பட்டது.

இதனையடுத்து அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக தமிழக சட்டமன்றப் பேரவையின் சிறப்புக் கூட்டம் 08-02-2022 அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், நீட் தேர்வு ரத்து சட்டமுன்வடிவு மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இன்று கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களுக்கு மேலாகியும், அதற்கான ஒப்புதல் பெறப்பட்டதாகத் தெரியவில்லை. முதல்வர் பிரதமரை நேற்று முன்தினம் சந்தித்துப் பேசியதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இருப்பினும், நீட் தேர்வு குறித்து பிரதமரிடம் பேசப்பட்டது குறித்தோ, அதற்கு பிரதமர் அளித்த முதல்வர் ஏதும் தெரிவிக்கவில்லை.

இதற்கிடையில், அடுத்த கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு ஜூலை மாதம் 17ம் தேதி நடக்க இருப்பதாகவும், அதற்கான இணையதளப் பதிவு நாளை முதல் துவங்க இருப்பதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இந்தச் சூழ்நிலையில், வருகின்ற கல்வி ஆண்டில் மருத்துவச் சேர்க்கை பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மேற்கொள்ளப்படுமா அல்லது நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மேற்கொள்ளப்படுமா என்ற

குழப்பத்தில் மாணவ, மாணவியர் உள்ளனர். இந்தக் குழப்பத்திற்கான விடை விரைந்து கிடைத்தால்தான், அதற்கேற்ப தேவையான நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுக்க முடியும். இருப்பினும், பெரும்பாலான மாணவ, மாணவியர் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவச் சேர்க்கை நடைபெற வேண்டுமென்று விரும்புகிறார்கள்.

எனவே, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், முதல்வர் மத்திய அரசுக்கு தேவையான அழுத்தத்தைக் கொடுத்து, வரும் கல்வியாண்டிலாவது நீட் தேர்வினை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதற்கான கால அளவினை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.