வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரம்: முதலமைச்சரை சந்திக்க அன்புமணி தலைமையில் 7 பேர் குழு அமைப்பு

சென்னை:

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்பட்டது செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ள நிலையில் பா.ம.க. அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று நடந்தது.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். டாக்டர் அன்புமணி எம்.பி., மாநில தலைவர் ஜி.கே.மணி, பு.தா.அருள் மொழி, வக்கீல் பாலு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

வன்னியர்கள் இட ஒதுக்கீடு கேட்டு பா.ம.க. பல ஆண்டுகளாக போரட்டம் நடத்தி வந்தது. இந்த நிலையில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

வன்னியர்கள் தியாகம் செய்து பெற்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டின் பயன்கள் அவர்களுக்கு கிடைக்காததால் தான், மருத்துவர் அய்யா வழிகாட்டுதலில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில்  2-ம் அலை போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதன் பயனாகவே வன்னியர்களுக்கு 10.50 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி புதிய சட்டம் இயற்றப்பட்டது.

அந்த சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை அளித்தத் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. இந்தத் தீர்ப்பை சமூக நீதிக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவாக பாட்டாளி மக்கள் கட்சி கருதுகிறது. இதை தமிழக அரசு சரி செய்து செய்ய வேண்டும் என்றும் கோருகிறது.

வன்னியர்கள் உள்ளிட்ட அனைத்து சமுதாயத்தினரின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான புள்ளி விவரங்கள் தமிழக அரசிடம் உள்ள தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் மூலம் அந்த புள்ளி விவரங்களை தொகுத்து, ஆய்வு செய்து அவற்றின் அடிப்படையில் வன்னியர் உள் இடஒதுக்கீட்டுக்கான பரிந்துரை அறிக்கையை பெற வேண்டும். அதன் அடிப்படையில் புதிய வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்ட முன்வரைவை மிக விரைவாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை இந்த அவசர செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

இது குறித்து தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்துவதற்காக அன்புமணி ராமதாஸ் தலைமையில் 7 பேர் கொண்ட சமூகநீதிக் குழு அமைக்கப்படுகிறது.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, கே.என்.சேகர், ராதா கிருஷ்ணன், ஜெயராமன் ராம முத்துக்குமார், வேளச்சேரி தி.ரா.சகாதேவன், ரா.செ.வெங்கடேசன், வி.ஜெ. பாண்டியன், அடையாறு வடிவேல் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.