இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் அண்டை நாடுகளுக்கே முன்னுரிமை- குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பேச்சு

அஷ்காபாத்:
மூன்று நாள் அரசுமுறை பயணமாக துர்க்மெனிஸ்தான் நாட்டிற்கு சென்றுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அஷ்காபாத் நகரில் சர்வதேச நிறுவன நிகழ்ச்சியில் உரையாற்றினார்.  அப்போது அவர்  பேசியதாவது:
மத்திய ஆசிய நாடுகளுடன் தொடர்பு கொள்வது இந்தியாவுக்கு முக்கிய முன்னுரிமையாக உள்ளது. மத்திய ஆசிய நாடுகளுக்கு தடங்கல் இல்லாத, பாதுகாப்பான கடல் வழித்தடமாக இருக்கும் ஈரானின் சாபஹார் துறைமுகத்தை இயக்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது.
அனைத்து நாடுகளின் பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை ஆகியவற்றுக்கு மதிப்பளிப்பது அவசியமாகும். இந்தப் பிராந்தியத்தில் முதலீடு செய்து, தொடர்புகளைக் கட்டமைத்து ஒத்துழைக்க இந்தியா தயாராக உள்ளது.
உலகின் பெரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறி வருவதைத் தொடர்ந்து, இந்தியாவின் தொழில்நுட்ப திறன்கள் உலக அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. 
இந்தியாவுடன் நட்புறவு கொண்டுள்ள நாடுகள், அதனை மேலும் வலுப்படுத்த விரும்புகின்றன.
அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்பது இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் மிக முக்கியமானது. 
எங்களது வளர்ச்சி மற்றும் பொருளாதார மேம்பாட்டின் பயன் அண்டை நாடுகளுக்கும் கிடைக்கிறது. தொடர்பு, வர்த்தகம், முதலீட்டை அதிகரிப்பதே இந்தக் கொள்கையின் முக்கிய நோக்கமாகும். 
உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு உறுதியானது. அங்கு மனிதநேய நிலை மோசமடைந்து வருவது குறித்து இந்தியா கவலை அடைந்துள்ளது. 
ரஷியா-உக்ரைன் நாடுகள் போர் நிறுத்தம் மேற்கொண்டு, பேச்சுவார்த்தை பாதைக்கு திரும்ப வேண்டும். உக்ரைனுக்கு மனிதநேய உதவிகளை இந்தியா வழங்கி வருகிறது.
ஐநா பாதுகாப்பு சபை விரிவாக்கப்பட வேண்டும் என்பதிலும், இந்தியாவின் உறுப்பினர் அந்தஸ்துக்கு துர்க்மெனிஸ்தான் ஆதரவு அளித்து வருவதற்கு நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக, குடியரசு தலைவர் அஷ்காபாத்தில் மக்கள் நினைவு வளாகத்திற்கு சென்று பார்வையிட்டு, மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பக்தியார்லிக் விளையாட்டு வளாகத்திற்கும் சென்ற அவர், அங்குள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார். அங்கு நடைபெற்ற யோகா செயல் விளக்கத்தையும் அவர் பார்வையிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.